Published:Updated:

`ரஜினி என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்!' - தனிக்கட்சி ஆரம்பிக்கும் அர்ஜுனமூர்த்தி

ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி
ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி

தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவில் நிர்வாகியாக இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டனர். ரஜினி கட்சியைக் கட்டமைப்பதற்கான பணிகளை இவர்கள் மேற்கொண்டுவந்தனர். இந்தச் சூழலில், கொரோனா அச்சுறுத்தல், உடல்நலம் உள்ளிட்ட விஷயங்களால் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பூட்டினார் ரஜினி. இந்த அறிவிப்பால் மனமுடைந்த தமிழருவி மணியன், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ரஜினியுடன் தான் தொடர்ந்து பயணிக்கப்போவதாகக் கூறிய அர்ஜுனமூர்த்தி, விரைவில் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதற்கு முன்னோட்டமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `மாற்றத்தின் வழியில் புதிய பயணம்’ என்று ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் அர்ஜுனமூர்த்தி.

அர்ஜுனமூர்த்தி
அர்ஜுனமூர்த்தி

அர்ஜுனமூர்த்தி புதிய அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து அவரிடமே பேசினோம்.

``நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாகக் கூறப்படுகிறதே?’’

``வலிமையான மாற்றத்தை நோக்கி நிறைய பேசிவிட்டோம். நான்கரைக் கோடி வாக்காளர்கள் 49 வயதுக்குக் கீழுள்ளவர்கள். இவர்கள் மாறுபட்ட சிந்தனையை விரும்புகிறார்கள். இந்த இளைஞர்களின் அரசியல் தேவையை நான் உணர்ந்திருப்பதாலேயே, பா.ஜ.க-விலிருந்த என்னைத் தன்னுடன் வந்து பணியாற்றுமாறு ரஜினி கேட்டுக்கொண்டார். கொரோனா இடர்ப்பாடுக்குப் பிறகு, ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு நிதி வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியை சிலர் கையிலெடுத்து விளையாட அனுமதிக்கக் கூடாது. தவிர, இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு வழிகாட்டியாக நான் இருக்க விரும்புகிறேன். ஆகவே, அரசியல் கட்சியைத் தொடங்கி, 2021 தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.’’

`ராஜினாமா செய்துவிட்டு எந்தக் கட்சியிலும் இணையலாம்!’ - ரஜினி மக்கள் மன்றம் கிரீன் சிக்னல்

``உங்கள் கட்சியின் நோக்கம் என்ன?’’

``அதிகாரிகளின் ஆலோசனைப்படிதான் இன்றைய அரசு நடைபெறுகிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு எந்தத் தொலைநோக்குப் பார்வையும் இல்லை. கடந்த 37 ஆண்டுகளாக பல துறைகளிலும் புதுமையைப் புகுத்தி, ஒரு மாற்றத்தை நான் உருவாக்கியிருக்கிறேன். இந்தியாவிலேயே புத்திக்கூர்மை உள்ளவர்கள் அதிகமிருப்பது தமிழகத்தில்தான். நான் தொலைநோக்குப் பார்வையுடன் இருந்ததால்தான் ரஜினி என்னை அழைத்து அருகில் வைத்துக்கொண்டார். எனக்கு 60 வயதாகிவிட்டது. என்னுடைய தொலைநோக்குப் பார்வை வீணாகிவிடக் கூடாது. அரசியலில், ஆட்சி இயக்கத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதுதான் என்னுடைய நோக்கம். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவும் போகிறேன்.’’

ரஜினி
ரஜினி

``உங்கள் அரசியல் பயணத்துக்கு ரஜினியின் ஆதரவை கேட்பீர்களா?’’

``திறமையைப் பாராட்டுவதற்கு என்றும் சங்கோஜப்படாதவர் ரஜினி. என் திறமையை அறிந்ததால், என்னை அழைத்து மக்களிடம் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தவர் ரஜினி. அவரை நான் நிர்பந்திக்கப்போவதில்லை. அவருக்கு அழுத்தம் தரவும் நான் விரும்பவில்லை. இதனால்தான், அவர் படத்தை நான் பயன்படுத்தப்போவதில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. நான் திறமைசாலி என்பதால், என்னை அவர் விட்டுக்கொடுக்க மாட்டார் என்று நம்புகிறேன்.’’

அடுத்த கட்டுரைக்கு