Published:Updated:

"சட்டத்தை வைத்து தேதி, நாள் குறித்து அப்பாவியை தூக்குல போடுறது பச்சைப் படுகொலை!"- அற்புதம்மாள்

அற்புதம்மாள்

"என் பையனுக்கு எட்டு ஆண்டு இடைக்காலத் தடை விதிச்சபோது அப்போ எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன்னா எல்லாமே ஆங்கிலம்தான். நம் தாய்மொழி தமிழ்ல வழக்கு நடக்கவே இல்ல." - அற்புதம்மாள்

"சட்டத்தை வைத்து தேதி, நாள் குறித்து அப்பாவியை தூக்குல போடுறது பச்சைப் படுகொலை!"- அற்புதம்மாள்

"என் பையனுக்கு எட்டு ஆண்டு இடைக்காலத் தடை விதிச்சபோது அப்போ எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன்னா எல்லாமே ஆங்கிலம்தான். நம் தாய்மொழி தமிழ்ல வழக்கு நடக்கவே இல்ல." - அற்புதம்மாள்

Published:Updated:
அற்புதம்மாள்
2022-ம் ஆண்டிற்கான இயக்குநர் மணிவண்ணன் விருது விழா கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் எழுத்தாளர் எஸ். வி.ராஜதுரை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்படக் கலைஞர் இளவரசு மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மனித உரிமைக்கான மணிவண்ணன் விருது உலக மனிதாபிமானக் கழகத்தின் சார்பாகப் பேரறிவாளனின் தாயாரான அற்புதமாளுக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்றுக்கொண்ட அற்புதமாள் பேசுகையில், "எனக்கு இந்த விருது கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். எத்தனையோ பேர் என்ன மாதிரி இன்னும் இந்த உலகத்துல நியாயத்திற்காகப் போராடிக்கிட்டுதான் இருக்காங்க. போராட்டம் அப்படிங்கறது எனக்கு இயல்பாகவே வந்துடுச்சு. என் பையன சுதந்திரமா இந்த நாட்டுல நடமாட வைக்கணும்னு நினைச்சேன். அது இப்பதான் நிறைவேறியிருக்கு. அதிகார வர்க்கத்திற்கு எங்கள மாதிரி அப்பாவி மக்கள்தான் பலியாகிறோம். இதிலிருந்து என் பையனை மீட்கத்தான் இந்த 31 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்! முதல்ல நான் நம்பினேன், நாங்க எந்தத் தப்பும் பண்ணல, கண்டிப்பா எந்த தண்டனையும் வராதுன்னு. இந்த ஒரு விஷயம் மனசுல இருந்ததாலதான் தூக்கு தண்டனையையும் தடுத்து நிறுத்த முடிஞ்சது. கொலைகாரன்னு சொன்ன உச்சநீதிமன்றம்தான் இப்போ என் பையனை விடுதலை பண்ணியிருக்கு.

மணிவண்ணன்
மணிவண்ணன்

ஆனா இன்னமும் ஒரு சில கூட்டத்துக்கு இந்த விடுதலையை ஏத்துக்க முடியல. இன்னும் ஒரு சிலர் ஒரு கொலைகாரனைப் பார்க்க இவ்வளவு கூட்டம் கூடுதான்னு நினைக்கிறாங்க. ஆனா இதைப்பத்தி நான் எந்தக் கவலையும் படல. ஏன்னா அவங்க எல்லாம் அதுக்காகவே பொறந்திருக்காங்க. நீதி, நியாயம், சட்டம் எல்லாருக்கும் சமம்னு சொல்லுவாங்க, ஆனா அது நிஜத்துல இல்ல. இந்த 31 ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகுதான் இது கிடைச்சது. என் பையனுக்கு எட்டு ஆண்டு இடைக்காலத் தடை விதிச்ச போது அப்போ எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன்னா எல்லாமே ஆங்கிலம்தான். நம் தாய்மொழி தமிழ்ல வழக்கு நடக்கவே இல்ல. நீதிமன்றத்துக்கு வெளியில எல்லாம் சிரிக்கிறாங்க, கைதட்றாங்க, ஆரவாரமா இருக்காங்க. ஆனா எனக்கு என்ன தீர்ப்பு கொடுத்தாங்கன்னு அப்பகூட புரியல. நான் என்னப்பா என்ன தீர்ப்பு கொடுத்தாங்கன்னு கேட்டபோதுதான் இந்த இடைக்காலத் தடை உத்தரவே புரிஞ்சது. நான் அன்னைக்கு ரொம்பத் தவிச்சிட்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு, செப்டம்பர் 9 அன்னைக்கு என் பையனுக்குத் தூக்குத் தண்டனைன்னு தேதி குறிச்சிட்டாங்க. என் கைக்கும் லெட்டர் வருது, உன் பையனோட உடலை வாங்கிக்கோங்கன்னு. பத்து மாசம் சுமந்து பெத்த ஒரு தாய்க்கு இந்தச் செய்தி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்க" என்று பேசிய அற்புதம்மாள், மேடையிலேயே கண்கலங்கினார்.

சிறிது நேரம் கழித்துப் பேசத் தொடங்கிய அவர், "எவனோ ஒருத்தன் எதுக்கு என் பையனைத் தூக்குல போடணும்? செய்யாத தப்புக்கு என் பையன் எதுக்கு சாகணும்னு மனம் கலங்காமப் போராடினேன். இந்தப் போராட்டத்தில் சாதாரண மக்கள்ல இருந்து எல்லாருமே ஆதரவு கொடுத்தாங்க. அவங்களுக்கு இந்த நேரத்துல நன்றியைத் தவிர வேற எதுவும் எனக்குச் சொல்லத் தெரியல. கொலையைவிட சட்டத்தை வைத்து நாள், நேரம் குறித்து அப்பாவியைத் தூக்குல போடுறது பச்சைப் படுகொலை. இந்த விடுதலைத் தீர்ப்பு எனக்கானது மட்டுமல்ல, இதற்காகப் போராடின எல்லாருக்கும்தான் இந்த வெற்றி" என்று கூறி, இயக்குநர் மணிவண்ணனுடன் பழகிய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

திரைப்படக் கலைஞர் இளவரசு பேசுகையில் அற்புதம்மாளைப் பார்த்து, "அம்மா எப்போ நீங்க மாமியார் ஆயிட்டு பாட்டியாகப் போறீங்க. கூடிய விரைவில் எனக்கு ஒரு நல்ல கதையைக் கொடுப்பீங்கன்னு நம்புறேன். சீக்கிரம் மாமியார் ஆகுங்க, நீங்க கதாநாயகியா இல்ல வில்லியான்னு பாக்கணும்" என்று நகைப்புடன் கூறினார். பின்னர் முன்னால் அமர்ந்திருந்த பேரறிவாளனைப் பார்த்து, "தம்பி சீக்கிரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க. இன்னும் வாழ்க்கைல நிறைய செய்ய வேண்டியது இருக்கு. காலம் போய்க்கிட்டேதான் இருக்கும்" என்று கூறினார்.