Published:Updated:

சரண்டரான எஸ்.ஏ.சி; சபதத்தை நிறைவேற்றத் தயாராகும் விஜய்!

சமீபகாலங்களில், இந்த இயக்கம் சார்பில் மக்கள்நலத் திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 169 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் தற்போது 12 பேர் போட்டியின்றி தேர்வாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் சந்தோஷத்தில் இருக்கிறாராம். தமிழகம் முழுவதுமுள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தேர்தல் வேலைகளைச் செய்யும்படி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 128 பேர் ஜெயித்து குறிப்பிடத்தக்கது. கடந்த முறை போட்டியிட்ட பல இடங்களில் சில பிரச்னைகள் எற்பட்டிருக்கின்றன. விஜய் ரசிகர்கள் என்கிற பேனரில் ஒரு பதவிக்குப் பலரும் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த மாதிரியான பிரச்னைகள் இந்தத் தேர்தலில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை நடிகர் விஜய் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாராம். இதைக் கண்காணித்து தேர்தலில் யார் யார் போட்டியிடுவது என்கிற முடிவை மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்திருந்தாராம் விஜய்.

விஜய்
விஜய்

இளைய தளபதி ரசிகர் மன்றம்... அதுவே, நற்பணி மன்றம் என்று மாற்றப்பட்டு பிறகு, மக்கள் இயக்கமாக புதுக்கோட்டையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் விஜய் மாற்றினார். சமீபகாலங்களில் இந்த இயக்கம் சார்பில் மக்கள்நலத் திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால், அந்த ஏரியாக்களில் உள்ளவர்கள் மத்தியில் மக்கள் இயக்கத்தினருக்கு நல்ல அறிமுகம் இருந்தது. அதேபோல், தற்போது வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, ஊர்வலமாகச் சென்ற கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன மாற்று அரசியல் கட்சியினர் சிலர் தாங்களாகவே போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்ட சம்பவங்களும் ஆங்காங்கே நடந்தனவாம். இதன் தொடர்ச்சியாகத்தான், 12 பேர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்தலில் போட்டியிடும் அனுபவம் பற்றி விஜய் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ஒருவரிடம் பேசியபோது,

`` அரசியலில் இறங்கிவிட்டோம். வேட்புமனு தாக்கலுக்காக எந்தெந்த ஆவணங்களைத் தயார் செய்யவேண்டும்... எப்படித் தேர்தல் அதிகாரிகளிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி பாடம் கற்றுக்கொண்டோம். எங்களுக்குப் போட்டியான அரசியல் கட்சியினருடன் ஆங்காங்கே சில இடங்களில் சிறு சிறு பிரச்னைகள் வந்தன. அவற்றை நேர்மையாக எதிர்கொண்டோம். இது எங்களுக்குப் புதிய அனுபவம். இனி வரும் எந்தத் தேர்தலையும் சந்திக்கும் தைரியம் இப்போது வந்துவிட்டது. காலங்காலமாக கோலோச்சிக்கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகளால் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எங்கள் தளபதி வளமான தமிழகம் அமைய சிந்தித்துக்கொண்டிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் பழையவர்களைப்போல வெறும் வாக்குறுதிகளை அள்ளிவிட மாட்டோம். செயலில் நிறைவேற்றிக்காட்டுவோம். மற்ற அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டு இளைய தளபதியை சில இடங்களில் பேனர்களை வைத்திருந்தனர். இதைக்கூட விஜய் ரசிக்கவில்லை. அவருக்கென தனி ரூட்டில் தனிப்பெரும் தலைவராக உருவெடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். அதனால்தான், அந்த மாதிரி ஒப்பீடுகளைச் செய்யவேண்டாம் என்று அறிக்கை விட்டிருந்தார். அவரின் எண்ணத்தை எங்கள் நிர்வாகிகள் இப்போதுதான் புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்’’ என்றார்.

விஜய்
விஜய்
உள்ளாட்சித் தேர்தல்: விஜயகாந்த் பாணி... நிர்வாகிகளுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த  நடிகர் விஜய்?!

நடிகர் விஜய்யின் இந்த வேகத்தைப் பார்த்த அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், மேலும் எந்த இடையூறும் செய்யாமல் தனது அரசியல் நடவடிக்கையை நிறுத்திவிட்டார். விஜய் பெயரைப் பயன்படுத்தி அவர் பதிவு செய்திருந்த இயக்கத்தைக்கூட கலைத்துவிட்டார். தனது பெயரையோ, கொடியையோ எஸ்.ஏ.சி தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் வரை போனார் நடிகர் விஜய். ஆனால், எஸ்.ஏ.சி-யோ, அவர் பதிவு செய்திருந்த இயக்கத்தைக் கலைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் பதில் சொல்லிவிட்டார். இது பற்றி எஸ்.ஏ.சி தரப்பினரிடம் கேட்டபோது, ``மகனிடம் அப்பா சரண்டர் அடைந்தது சந்தோஷமான விஷயம்தான். ரத்த சம்பந்தமான உறவு அல்லவா... அவர்களுக்குள் இப்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லையென்றாலும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்துவிடுவார்கள். விஜய் தலைமையில் எதிர்காலத்தில் அரசியல் கட்சி உருவாகும்போது, அதைப் பார்த்து சந்தோஷப்படுகிற முதல் நபர் எஸ்.ஏ.சி-யாகத்தான் இருப்பார். இவரின் கனவைக் கூடிய விரைவில் விஜய் நிறைவேற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை '' என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2011-ல் தமிழக மீனவர்கள் படுகொலையைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் கண்டனக் கூட்டம் நடத்தினார் விஜய். அப்போது திரண்டிருந்த கூட்டம்தான், அவரை அரசியல் பாதைக்கு இழுத்து வந்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு முன்பு, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜய். டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். அவர், இளைஞர் காங்கிரஸில் சேரப்போவதாகப் பேச்சு கிளம்பியது. ஆனால், விஜய் சேரவில்லை. அதே வருடம் சென்னை தீவுத்திடலில் பெரிய மாநாடு போட்டு, அதில் அரசியல் பற்றிய அறிவிப்பை வெளியிட இருந்தாராம் விஜய். சில காரணங்களால் அந்த நிகழ்ச்சி ரத்தானது.

நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த்
நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த்

2011 தேர்தலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி., ஜெயலலிதாவைச் சந்தித்து அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். விஜய் ரசிகர்களும் அவர் சொன்னதைக் கேட்டு, அ.தி.மு.கவை ஆதரித்து தேர்தல் வேலை பார்த்தார்களாம். 14 ஆண்டுகளாக விஜய்யுடன் இருந்தவந்த ஜெயசீலன், எஸ்.ஏ.சி-யின் அரசியல் நடவடிக்கை பிடிக்காமல் அப்போதே ரசிகர் மன்றத்தைவிட்டு விலகிவிட்டாராம். அதன் பிறகு, மன்றத்தின் பொதுச்செயலாளராக ஆனார் புஸ்ஸி ஆனந்த். இதற்கிடையில், விஜய்க்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் வெடித்தது. அப்போதைய தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்ததே தன்னால்தான் என்று எஸ்.ஏ.சி பேசியதாக ஒரு தகவல் ஜெயலலிதாவின் காதுக்கு எட்ட, கடும் கோபமானார். அதன் எதிரொலியாக, `தலைவா’ படம் ரீலீஸ் நேரத்தில் பலவித பிரச்னைகள் கிளம்பின.

வேறு வழியில்லாமல், ஜெயலலிதாவிடம் நடந்ததை விளக்கும் எண்ணத்துடன் கொடநாடு எஸ்டேட்டுக்கு போனார்கள் விஜய்யும், புஸ்ஸி ஆனந்த்தும்! ஆனால், சந்திக்க மறுத்துவிட்டார் ஜெயலலிதா. அடுத்து, சென்னை போயஸ் கார்டனுக்கு புஸ்ஸி ஆனந்த் நேரில் போனபோதும் அனுமதி கிடைக்கவில்லை. ஜெயலலிதா, தன்னை இப்படி அலைக்கழித்ததால், கோபத்தின் உச்சத்துக்கே போனார் விஜய். ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அடக்கியே வாசித்தார் விஜய். ஆனாலும், தமிழக அரசியலில் தானும் ஒரு கட்சி ஆரம்பித்து, எதிரிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று விஜய் அப்போதே ஒரு சபதம் எடுத்தார். அதன் பிறகுதான், ரசிகர் மன்ற கட்டமைப்பை அரசியல் கட்சிக்குத் தகுந்த மாதிரி மாற்றினார். 2014 பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் கோவை வந்தார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அவரையும் சந்தித்துப் பேசினார் விஜய். அவரின் படங்களில் அரசியல் வசனங்களை அதிகம் இடம்பெற வைத்தார். `சர்கார்’ பட விழாவில், ``நான் முதல்வர் ஆனால் நடிக்க மாட்டேன் " என்று பன்ச் டயலாக் பேசினார். இப்படியிருக்க, தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காலகட்டம் இது. ரஜினியும் அரசியலுக்கு வருவதாகத் தெரியவில்லை. தமிழக அரசியலில் தலைமைப் பதவிக்கு வெற்றிடம் இருப்பதை உணர்ந்த விஜய், தனது அரசியல் பிரவேசத்துக்கு இந்த நேரத்தைத் தேர்தெடுத்திருக்கிறார். அதன் ஒரு கட்டமாகத்தான், தனது இயக்க நிர்வாகிகளை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கியிருக்கிறார். தேர்தலில் வெற்றி தோல்வியைவிட ரசிகர்களுக்கு அரசியல் அனுபவம் கிடைக்கும் என்பது விஜய்யின் கணக்கு.

அவரின் கணக்கு பலிக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு