Published:Updated:

களத்தில் அமித் ஷா; காஷ்மீரில் பதற்றம் தணியுமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 
அமித் ஷா ஆறுதல்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமித் ஷா ஆறுதல்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சிறுபான்மையினர் குறிவைத்துக் கொல்லப்படும் சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றிருக்கிறார். காஷ்மீரில் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்படுமா?

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத ஒரு பயங்கரவாதச் சூழல் தற்போது அங்கு உருவாகியிருக்கிறது. சிறுபான்மையினரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் சமீபத்தில் நிகழ்த்தியிருக்கும் படுகொலைகளால் காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வெளிமாநிலத்தவரும் உயிர் பயத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமித் ஷா ஆறுதல்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமித் ஷா ஆறுதல்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் கவனம் காஷ்மீரை நோக்கித் திரும்பியது. அதையடுத்து, பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில், சிறுபான்மையினரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்தும் படுகொலைகள், காஷ்மீர் பற்றிய கவலைகளை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஸ்ரீநகரில் அரசுப் பள்ளியின் முதல்வரும், ஆசிரியரும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, காஷ்மீரில் நிலைமை மோசமடைந்திருக்கிறது.

அக்டோபர் 7-ம் தேதி, ஸ்ரீநகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வரும் ஆசிரியர்களும் ஆன்லைன் வகுப்புக்காக வந்திருந்தபோது, அங்கு ஆயுதங்களுடன் வந்த சிலர் பள்ளி முதல்வரையும், ஆசிரியர் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதற்கு முன்பாக, ஸ்ரீநகரில் பொதுமக்கள் இருவர் அக்டோபர் 2-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவ்வாறாக, நான்கு நாள்களில் மொத்தம் ஏழு பேர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அந்த ஏழு பேரில், நான்கு பேர் காஷ்மீர் பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படுகொலைகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதிலும் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அமித் ஷா
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அமித் ஷா

தற்போதைய சூழல், 1990-ம் ஆண்டை நினைவூட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில்தான், காஷ்மீரில் சிறுபான்மையினரான பண்டிட்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அதையடுத்து, ஏராளமான பண்டிட் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறினர். காஷ்மீர் பள்ளத்தாக்குக்குத் திரும்பும் பண்டிட்களுக்குப் பாதுகாப்பான குடியிருப்புகள் மற்றும் வேலை வழங்கப்படும் என்று 2009-ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது.

அதன் பின்பு சுமார் ஐந்தாயிரம் காஷ்மீர் பண்டிட்கள் தங்களது தாய் நிலத்துக்குத் திரும்பினர். அவர்களில் பலர், தற்போதைய பதற்ற சூழலில் காஷ்மீரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளிமாநிலத்தவரும் பயங்கரவாதப் படுகொலைக்கு ஆளாகியிருப்பதால், காஷ்மீரிலுள்ள வெளிமாநிலத்தவர் மத்தியிலும் அச்சம் சூழ்ந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ள சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக அக்டோபர் 23-ம் தேதி காஷ்மீர் சென்றார். 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு, அவர் காஷ்மீர் செல்வது இதுவே முதன்முறை. பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். ஜூன் 22-ம் தேதி பயங்கரவாதிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பர்வேஸ் அகமது வீட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். அதையடுத்து, ``பர்வேஸ் அகமதுவின் வீரத்தை எண்ணி நாடே பெருமைப்படுகிறது. புதிய ஜம்மு காஷ்மீரை உருவாக்குவதற்குப் பிரதமர் மோடி வகுத்துள்ள கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் சிறப்பாக எடுத்துள்ளனர்" என்று அமித் ஷா ட்வீட் செய்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அமித் ஷா
பத்திரிகையாளர் சந்திப்பில் அமித் ஷா
`வேண்டாம் கமல்நாத் ஜி... இந்த வயதில் கத்துவது நல்லதல்ல!’ - ம.பி முதல்வரை விமர்சித்த அமித்ஷா

அண்மையில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட மருந்துக்கடை உரிமையாளர் மக்கள் லால் பிந்த்ரு, பள்ளி முதல்வர் சுபீந்தர் கௌர் உட்பட ஒன்பது பேரின் குடும்பங்களைச் சந்தித்து உள்துறை அமைச்சர் ஆறுதல் கூறினார். ஸ்ரீநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புச் சூழல் குறித்து அமித் ஷா ஆய்வு நடத்தினார். ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையே விமானப் போக்குவரத்து சேவையை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

பின்னர் ஜம்மு சென்ற அமித் ஷா, அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, ``ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அதேநேரத்தில், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்குச் சில சக்திகள் முயல்கின்றன. ஆனால், வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஜம்மு மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளான காலம் முடிந்துவிட்டது. இனி, ஜம்முவும் காஷ்மீரும் இணைந்தே வளர்ச்சியில் பயணிக்கும். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். இனி, அப்பாவி பொதுமக்கள் யாரும் வன்முறைக்கு உயிரிழக்கக் கூடாது. இதுவே மத்திய அரசின் முதன்மையான நோக்கம்” என்றார்.

மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி

அமித் ஷாவின் காஷ்மீர் பயணத்தை முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி விமர்சித்திருக்கிறார். ஸ்ரீநகரிலிருந்து விமான சேவையைத் தொடங்கிவைப்பதும், மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும் புதிதல்ல. இவற்றில் ஆறு கல்லூரிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்புதல் வழங்கப்பட்டு, தற்போது செயல்பட்டுவரக்கூடியவை. சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் கடுமையான நெருக்கடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மக்களைச் சந்திப்பதற்கு பதிலாக, ஆட்சியாளர்கள் சில ஒப்பனை வேலைகளைச் செய்கிறார்களே ஒழிய, உண்மையான பிரச்னைகளைத் தீர்க்கவில்லை” என்று மெஹபூபா முப்தி கூறியிருக்கிறார்.

மேலும், ``2019 முதல் அமலில் இருந்துவரும் தடைகளை நீக்குவது, சிறையிலிருந்து கைதிகளை விடுவிப்பது, அன்றாடம் மக்கள் சந்தித்துவரும் துயரங்களுக்கு முடிவுகட்டுவது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற நடவடிக்கைகள்தான் மக்களுக்கு நிவாரணத்தை அளிக்கும். ஆனால், உள்துறை அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து, பொதுமக்களைச் சேர்ந்த 700 பேர் கைதுசெய்யப்பட்டு, பொது அமைதிச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். காஷ்மீருக்கு வெளியே இருக்கும் சிறைகளுக்குப் பலர் மாற்றப்பட்டிருக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் ஏற்கெனவே இங்குள்ள பதற்றச் சூழலை மேலும் அதிகரிக்கவே செய்யும்” என்று மெஹபூபா முப்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான விமான சேவை தொடங்கப்பட்டிருப்பது குறித்து ஸ்ரீநகர் - முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ``ஸ்ரீநகரிலிருந்து செல்லும் விமானங்கள் தனது ஆகாய எல்லையைப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துவிட்டதா?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். ``பாகிஸ்தான் தனது ஆகாய எல்லையில் ஸ்ரீநகரிலிருந்து செல்லும் விமானங்கள் பறப்பதற்கு அனுமதிக்கவில்லையென்றால், இந்த விமானங்கள் வெகுதூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும். அதனால், நேரமும் பணமும் விரயமாகும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும், அங்கு உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துவரும் கோரிக்கைகளாக உள்ளன. இந்த நிலையில், ``ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறும். தொகுதி மறுவரையைத் தடுக்க உள்ளூர் அரசியல் கட்சிகள் முயற்சி செய்கின்றன. இளைஞர்களின் பங்களிப்பால் தொகுதி மறுவரையறைப் பணிகள் இடையூறின்றி நடைபெறும். அதையடுத்து தேர்தல் நடத்தப்பட்டு, மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும்” என்று அமித் ஷா அங்கு பேசியிருக்கிறார்.

முதலில், மாநில மக்களின் மனதை அரசு வென்றெடுப்பது அவசியம். அந்த மக்களில் பெரும்பான்மையோரின் ஆதரவைப் பெற்ற அந்த மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசு தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அங்கு அமைதியும் வளர்ச்சியும் சாத்தியமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு