Published:Updated:

பேரறிவாளன்: `இனிமேல் என் மகன் சிறைக்குப் போகக்கூடாது'- கலங்கிய அற்புதம்மாள்; மகனுக்காக பேசிய காணொளி

அற்புதம்மாள்

இந்த முப்பது ஆண்டுச் சிறை வாழ்க்கை என் மகனுக்குப் பலவித நோய்களைக் கொடுத்திருக்கு. அதுக்குத் தொடர் மருத்துவம் அவனுக்குக் கிடைக்கல. நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன்... - அற்புதம்மாள்

பேரறிவாளன்: `இனிமேல் என் மகன் சிறைக்குப் போகக்கூடாது'- கலங்கிய அற்புதம்மாள்; மகனுக்காக பேசிய காணொளி

இந்த முப்பது ஆண்டுச் சிறை வாழ்க்கை என் மகனுக்குப் பலவித நோய்களைக் கொடுத்திருக்கு. அதுக்குத் தொடர் மருத்துவம் அவனுக்குக் கிடைக்கல. நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன்... - அற்புதம்மாள்

Published:Updated:
அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆளுநர் முடிவெடுக்கத் தாமதப்படுத்தியதால் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வின் விசாரணைக்குப் பிறகு இந்தத் தீர்பு வழங்கப்பட்டிருக்கிறது. தன் மகனின் விடுதலைக்காக பல ஆண்டுகளாகப் பல கட்டப் போராட்டங்களைச் சந்தித்தார் அவரின் தாயார் அற்புதம்மாள்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் பேரறிவாளனின் சிறைவாசம் 31-வது ஆண்டை எட்டியிருந்தச் சூழலில், அவரது நிரந்தர விடுதலைக்கான குரல்கள் மேலும் வலுப்பெற்றன. அப்போது, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது,

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சிறை வாழ்க்கையையே அவன் பயனுள்ளதா பயன்படுத்திக் கொண்டான். அவன் மட்டுமே படிக்காம, சிறைவாசிகள் நிறைய பேருக்குப் படிப்பறிவு கொடுத்தான். இருந்தாலும் அவன் சுதந்திரமா வாழக்கூடிய வாழ்க்கை இல்லைங்கிறதுதான் எனக்குக் கவலையா இருக்கு. என் மகனோட இளமை, நிம்மதி எல்லாம் இந்த 30 ஆண்டுகள் சிறை வாழ்க்கைல போயிடுச்சு; ஒட்டுமொத்தமா குடும்பத்தின் நிம்மதியே போச்சு.

இந்த முப்பது ஆண்டு சிறை வாழ்க்கை என் மகனுக்குப் பலவித நோய்களைக் கொடுத்திருக்கு. அதுக்கு தொடர் மருத்துவம் அவனுக்குக் கிடைக்கல. நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன். சில மருத்துவம் அவனுக்கு அப்பப்போ கிடைச்சது. ஆனால், தொடர்ந்து மருத்துவம் பார்க்க முடியாம போச்சு. அதனால் தொடர்ந்து அவன் உடல்நிலை பாதிக்கப்படுது.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

இந்த நிலையில உலகத்தையே அச்சுறுத்துற கொரோனா வந்தது. உடல்நலமில்லாத என் மகனுக்கு அதைத் தாங்குற சக்தி இல்லயேனு தவிச்சிட்டு இருந்தேன். உச்ச நீதிமன்றமே சிறைவாசிகளைக் குறைக்கணும்னு சொன்னப்போ மகிழ்ச்சி அடைஞ்சேன். உடனே அரசுக்கு விண்ணப்பிச்சேன். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என் கோரிக்கையை ஏத்துக்கிட்டாங்க. என் மகனோட உடல்நிலையை கவனிக்க வேண்டியது அவசியமா இருக்கு. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவையா இருக்கு.

இனிமேல் என் மகன் சிறைக்குப் போகக் கூடாது. 30 ஆண்டுகள்ன்றது, எவ்ளோ பெரிய நீண்ட சிறை தண்டனைங்கிறத உணர்ந்த தாயாக நான் சொல்கிறேன் - நீங்க (முதல்வர்) இதுக்கு மேல என் மகனை சிறைக்கு அனுப்பாம பாத்துக்கணும். என் பையன் நிரபராதினு அதிகாரி தியாகராஜன், நீதிபதி கே.டி. தாமஸ், நீதியரசர் கிருஷ்ணய்யர்னு நிறைய பேர் குரல் கொடுத்தாங்க; மக்கள் ஆதரவு தெரிவிச்சாங்க. ஆனா, என் மகனுக்கு இன்னும் வெளியுலக வாழ்க்கை கிட்டல. இழந்ததெல்லாம் யாராலயும் திருப்பித் தர முடியாது. இந்த வயசான காலத்துயாவது எங்க புள்ள எங்களோட இருக்கணும்ங்கிற கோரிக்கைய அரசுக்கு வைக்கிறேன்” - அற்புதம்மாளின் குரலில் காலங்களை மீறிய வேதனையின் கனம் இருந்தது. அவருக்கும் ஆறுதலான செய்தி இன்று கிடைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism