Published:Updated:

நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவி; பட்டியல் சமூகப் பெண் பதவி ஏற்க இடைக்காலத் தடை- உயர்நீதிமன்றம்

நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வுச்செய்யப்பட்ட பட்டியல் சமூகப் பெண் பதவியேற்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திலிருக்கும் நாயக்கனேரி மலை ஊராட்சியில் மொத்தம் 3,440 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 2,889 வாக்குகள் பழங்குடி சமூகத்தினருடையது. மீதமுள்ள 551 வாக்குகளும் பொதுப்பிரிவினர் மற்றும் பட்டியல் சமூகத்தினருடையது. இந்த நிலையில், காலம் காலமாக பழங்குடிப் (எஸ்.டி) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுவந்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை இந்த முறை பட்டியல் (எஸ்.சி) சமூகப் பெண்களுக்கு ஒதுக்கியதை அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பழங்குடி சமூக மக்கள் விரும்பவில்லை. நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவிக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற ஒரேயொரு பெண் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்துமதி
இந்துமதி

இதற்கு எதிர்ப்புதெரிவித்து, ஊராட்சியிலுள்ள ஒன்பது கிராம வார்டுகளுக்கும் ஒருவர்கூட போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை. அதேபோல், ஐந்தாயிரம் வாக்குகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் விஜயலட்சுமி, அ.தி.மு.க வேட்பாளர் இந்துமதி, சுயேட்சை வேட்பாளர் முனியம்மாள் ஆகிய மூன்று பேரும் தங்களுடைய வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், இந்துமதியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வாகியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த பழங்குடியின சமூக மக்கள் கிராமப் பஞ்சாயத்தைக்கூட்டி நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவினை புறக்கணித்தனர்.

கிராம வார்டுகளுக்கு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததனாலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களும் மனுக்களைத் திரும்ப பெற்றுக்கொண்டதாலும் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டுமே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பழங்குடியின சமூக மக்கள் ஒருவர்கூட வாக்களிக்கச் செல்லவில்லை. பொதுப் பிரிவினர் மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே வாக்களித்தனர். ஊராட்சி மன்றத் தலைவருக்கு மனுத்தாக்கல் செய்திருந்த இந்துமதி அவரின் கணவர் பாண்டியன் ஆகிய இருவரும் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காமனூர்தட்டு அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்று தங்களது வாக்கினை செலுத்தினர்.

கிராம மக்களிடம் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்
கிராம மக்களிடம் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்

இதற்கிடையே, நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பட்டியல் சமூக பெண்களுக்கு ஒதுக்கியதை திரும்ப பெறக்கோரி முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் மாநில அரசு, மாநில தேர்தல் ஆணையம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, அதுவரை இந்துமதி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி ஏற்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அடுத்த விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக, ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்வுச்செய்யப்பட்ட இந்துமதியின் கணவர் பாண்டியனிடம் பேசினோம். ‘‘ முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் உட்பட இருவர் மட்டுமே இந்தப் பிரச்னையை சாதி ரீதியாக தூண்டிவிடுகிறார்கள். ஏற்கெனவே, வேறு ஊராட்சியிலிருந்து இங்கு குடியேறியவர்கள் என்றுகூறி எங்களுக்கெதிராக வழக்குத் தொடந்தனர். தற்போது, ஒரேயொரு பட்டியல் சமூக குடும்பம்கூட இல்லை என்று மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில்தான் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கக்கோரி எங்களைப் பதவி ஏற்கவும் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்ட ரீதியாக இந்தப் பிரச்னையை சந்திக்கத் தயாராக உள்ளோம். ஊராட்சி மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். நாங்கள் சிறந்த முறையில் உங்களுக்குச் சேவையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்’’ என்றார்.

போலீஸ் பாதுகாப்புடன் வாக்களிக்கச் சென்ற இந்துமதி மற்றும் அவரின் கணவர்
போலீஸ் பாதுகாப்புடன் வாக்களிக்கச் சென்ற இந்துமதி மற்றும் அவரின் கணவர்

வழக்குத் தொடர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமாரிடம் பேசினோம். ‘‘எங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பொதுப் பிரிவுக்கு மாற்றும் வரை போராட்டத்தை தொடருவோம். ஒரேயொரு பட்டியல் சமூக குடும்பம்கூட இந்த ஊராட்சியில் வசிக்கவில்லை. இந்துமதியின் கணவன் பாண்டியன் ஓசூரில் தங்கி வேலைச் செய்கிறார். திருமணத்துக்குப் பின் அவர்கள் நாயக்கனேரி ஊராட்சிக்கே வரவில்லை. தேர்தல் சமயத்தில் உள்ளே வந்து பிரச்னை செய்கிறார்கள். கிராம நிர்வாக அதிகாரி, ‘இந்துமதி இங்கு வசிக்கவில்லை; வேறு ஊராட்சியை சேர்ந்தவர்’ என்று கூறி வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க மறுத்துவிட்டார். ஆனால், அரசு அதிகாரிகள் சிலர் சமூக ரீதியாக இந்துமதிக்கு உதவிச்செய்து வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்து போட்டியிட வைத்துள்ளனர். போட்டியின்றி தேர்வுச்செய்யப்பட்டிருப்பதாக ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் இருந்தும் இந்துமதியின் பெயரை நீக்க வைத்துவிட்டோம். அவரை பதவி ஏற்க விடமாட்டோம். மறு தேர்தலை நடத்த வேண்டும்’’ என்றார் கொதிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு