Published:Updated:

தினகரன் மகள் திருமணம்: கலந்துகொள்ளாத திவாகரன்; மெளனம் காத்த சசிகலா!

சசிகலா சிறையில் இருக்கும்போதே தினகரனுக்கும் திவாகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சசிகலாவின் அக்கா மகன் தினகரனின் மகள் திருமணம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. சசிகலாவின் தம்பி திவாகரன் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேநேரத்தில், மன்னார்குடியில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில் கலந்துகொண்ட திவாகரன் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.காமராஜுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்.காமராஜ், திவாகரன்
ஆர்.காமராஜ், திவாகரன்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ளது சேரன்குளம். இந்த ஊரில் அமைந்துள்ள ஆள்காட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது. ஆர்.காமராஜின் நெருங்கிய உறவினரான மனோகரனின் சொந்த ஊர் சேரன்குளம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்தான் விழாவுக்கான முக்கிய ஏற்பாட்டைச் செய்ததாகக் கூறப்படுகிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு தரிசனம் செய்வதற்காக திவாகரன் கோயிலுக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக-வின் முன்னாள் உணவுத்துறை அமைச்சரான ஆர்.காமராஜ் வந்தார்.

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சாமி கும்பிட்டனர். அவர்களுக்கு விழா கமிட்டி சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. கோயில் வழங்கிய காவித்துண்டை ஆர்.காமராஜ் இடுப்பில் கட்டியிருந்தார். திவாகரன் தோள் மேல் போட்டிருந்தார். அத்துடன் திவாகரன், ஆர்.காமராஜ் தோளில் கைபோட்டபடி இருக்க, கோயில் வளாகத்தை இருவரும் சுற்றி வந்தனர். திவாகரன் சிரித்துக்கொண்டே ஏதோ சொல்ல அதை ஆர்.காமராஜ் சிரித்தபடியே தலையசைத்து கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஆர்.காமராஜ், திவாகரன் காதில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

கோயில் விழாவில்
கோயில் விழாவில்

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேசிக்கொண்டிருந்தது அதிமுக நிர்வாகிகளை மட்டுமின்றி, அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கவைத்தது. இது குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம். ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தில் ஏகப்பட்ட மாற்றங்களும், குழப்பங்களும் நிகழ்ந்துவிட்டன. சசிகலா சிறையில் இருக்கும்போதே தினகரனுக்கும் திவாகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சசிகலா சிறையிலிருந்து விடுதலையான பிறகு இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்படும் என உறவுகள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோல் எதுவும் நடைபெறவில்லை. தினகரனின் மகள் திருமணத்தில் இருவருக்குமான மோதலை நீக்கி, சமாதானம் செய்துவைக்கவும் சிலர் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன்படி இன்று தினகரன் மகள் ஜெய ஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையாரின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி அய்யா வாண்டையாருக்கும் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், திவாகரன் சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், திவாகரன் சந்திப்பு

இதில் திவாகரன் கலந்துகொள்வார் என முக்கிய உறவினர்கள் எதிர்பார்த்தனர். சசிகலா தலைமையில் முக்கியஸ்தர்கள் மற்றும் குடும்ப உறவுகள் சூழ திருமணம் நடைபெற்றது. இதில் திவாகரன் கலந்துகொள்ளவில்லை. அதேநேரத்தில் மன்னார்குடியில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.காமராஜும் கலந்துகொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததுதான் தற்போதைய ஹைலைட்.

சசிகலா அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு முயற்சி மேற்கொண்டுவருகிறார். அவ்வப்போது அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் போனில் பேசும் சசிகலா, `நம்பிக்கையோடு இருங்க. நான் கட்சிக்குள்ள வந்துருவேன். அதன் பிறகு பிரச்னையெல்லாம் சரியாகிடும்' எனக் கூறிவருகிறார். ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் எதுவும் அமைந்ததாகத் தெரியவில்லை. சசிகலாவின் முயற்சியும் பலனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சசிகலா தலைமையில் தினகரன் மகள் திருமணம்:  நடிகர் பிரபு உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்து!
திவாகரன்
திவாகரன்

ஓ.பி.எஸ் மனைவி இறந்தபோது சசிகலாவும் தினகரனும் நேரில் சென்று ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆறுதல் தெரிவித்தது அதிமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலர் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் அதிமுகவில் இடம் கிடையாது எனக் கூறிவருகின்றனர். இந்நிலையில் திவாகரன் ஆர்.காமராஜிடம் ரொம்ப சகஜமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாகச் பேசியிருக்கிறார். அப்போது திவாகரனுக்கு போன் ஒன்று வந்தது. எதிர்முனையில் இருந்தவர் `திருமணத்துக்குப் போகலையான?’ என்று கேட்டதுபோல் தெரிகிறது. `அங்கே எனக்கு என்ன வேலை... நான் கோயில் ஃபங்ஷன்ல இருக்கேன். ஆர்.காமராஜ்கூட பேசிக்கிட்டு இருக்கேன்' எனச் சொல்லிட்டு போனை கட் செய்தார்.

தினகரனுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்கிற ரீதியில்தான் திவாகரன் இருக்கிறார். எனவே, அவரைப் பொறுத்தவரை எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் ஆர்.காமராஜிடம் பேசியிருக்கிறார். இருவரும் வெளிப்படையாக வெளியில் சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவ்வப்போது மனம்விட்டுப் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். எனவே இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை" எனத் தெரிவித்தனர். அதேநேரத்தில் இந்தத் தகவல் திருவண்ணாமலையில் இருந்த சசிகலாவுக்குச் சொல்லப்பட்டதாகவும், அவர் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்துவிட்டதாகவும் விவரம் அறிந்தவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு