Published:Updated:

கடவுளும் முக்கியம்; கடவுளை மறுத்த பெரியாரும் முக்கியம்! பேலன்ஸ் செய்யும் திமுக!

பெரியார்
பெரியார்

”பெரியாரின் பகுத்தறிவைப் பின்பற்றுகிறோம், அதன்படி நடக்கிறோம். ஆனால், இறை நம்பிக்கை உள்ளவர்களை நாங்கள் எதிர்ப்பதில்லை” என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தி.மு.க என்றாலே கடவுள் மறுப்புக் கொள்கையுடைய, கடவுளை நம்புபவர்களை வெறுக்கக்கூடிய கட்சி என்ற பிம்பம் பல காலமாக இருந்துவந்திருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போதே அதற்கு ஸ்டாலின் கடிவாளம் போட்டுவிட்டார். ‘தி.மு.க-வில் இருக்கும் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்’ என்று பேசி கரையைப் போக்கிவிட்டார். இருந்தபோதும் ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற கூக்குரல்கள் தி.மு.க-வை நோக்கி எழுப்பப்படும். எல்லாவற்றையும் மீறி தி.மு.க ஆட்சிக்கும் வந்துவிட்டது. இந்துக்களின் விரோதி என்ற கட்சிதான் கோயில் நிலங்கள் தொடர்பாகவும், அதன் வாடகைதாரர்கள் குறித்தும், அவர்கள் கோயிலுக்கு வைத்துள்ள பாக்கி பற்றியும் அறநிலையத்துறை இணையத்தில் பகிரங்கமாக வெளியிட்டுப் பாராட்டைப் பெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை
`கலைஞர் நினைவு நூலகம் கமிஷன் சர்ச்சை முதல் மோடியைத் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ வரை' கழுகார் அப்டேட்ஸ்

மேலும், பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களும் மீட்கப்பட்டன. நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய துறை அமைச்சர் சேகர்பாபு, ‘கோயில்களில் முடி காணிக்கை செலுத்த வருபவர்களிடம் இனி பணம் வசூலிக்கப்பட மாட்டாது, இலவசமாக மொட்டையடித்துக் கொள்ளலாம். அதேபோல், திருமணம் செய்துகொள்ளும் மணமகளோ, மணமகனோ யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணத்தை இலவசமாக நடத்திக்கொள்ளலாம்’ என்று அறிவிப்புகளை வெளியிட்டார்.

சேகர்பாபு - ஸ்டாலின்
சேகர்பாபு - ஸ்டாலின்

அதேசமயம், முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள் ‘சமூக நீதி நாளாக’ கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. ஒருபக்கம் அறநிலையத்துறையில் மக்கள் போற்றும்படி பணிகளைச் செய்தபடியே, கடவுள் மறுப்பாளரான பெரியாரையும் விட்டுக்கொடுக்காமல் பேலன்ஸ் செய்துவருகிறது தி.மு.க அரசு. எப்படிச் சாத்தியம்? என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர் பி.டி.அரகுமாரிடம் கேட்டோம். “தி.மு.க எப்போதுமே கடவுள் நம்பிக்கை உடையவர்களையோ, அவர்களது நம்பிக்கையையோ சீர்குழைப்பதில்லை. மாறாக, கடவுளின் பெயரால் அரசியல் செய்யும், ஏமாற்றுபவர்களைத்தான் எதிர்க்கிறோம். பெரியாரும் இதைத்தான் சொன்னார்.

பி.டி.அரசகுமார், திமுக
பி.டி.அரசகுமார், திமுக

’ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்தவர்’ என்ற பெயர் கலைஞருக்கு உண்டு. கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் அதைச்செய்தார். பெரியாரை நாங்கள் சமூகநீதிக் காவலராகப் பார்க்கிறோம். சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுதான் பெரியார் வருகைக்குக் காரணம். பகுத்தறிவு புகுத்திய பெரியாரின் சமூக நீதி வழியில்தான் தி.மு.க அரசு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. சமூக நீதியைக் காக்கும் வகையில்தான், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" சட்டத்தை அமல்படுத்தினோம். பெரியார் கொள்கைதான் தி.மு.க-வின் கொள்கை என்றாலும், கடவுளை நம்பும் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை என்பதை மனதில் நிறுத்தி அரசை நடத்தி வருகிறோம்” என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு