தஞ்சாவூரிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றியச் செயலாளர் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க-வில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். அப்போது சிலர், தி.மு.க எம்.பி பழநிமாணிக்கத்தைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன்... அவர் காரைத் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் ஆதரவாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தி.மு.க ஒன்றியச் செயலாளர்களுக்கான தேர்தலை நடத்த தி.மு.க தலைமை அறிவித்திருந்தது. அதன்படி தஞ்சாவூர் வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டங்களுக்கான ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுவந்தது. மத்திய மாவட்டத்துக்குட்பட்ட தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரை.சந்திரசேகரனின் ஆதரவாளரான வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முரசொலி, முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சாவூர் எம்.பி-யுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஆதரவாளரான ஜெயசந்திரன் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒன்றியச் செயலாளர் பதவியைப் பிடிக்க இருவருக்குமிடையே பலத்த போட்டி நிலவிவந்தது. தேர்தல் ஆணையாளராக மதுரை குழந்தைவேல் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வடக்கு ஒன்றியச் செயலாளராக முரசொலி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் முரசொலியின் ஆதரவாளர்கள் ஜெயசந்திரனைத் தாக்கியதுடன், பழநிமாணிக்கத்தின் காரையும் அடித்து, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். இந்தச் சம்பவம் தஞ்சை தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தி.மு.க தரப்பில் சிலரிடம் பேசினோம். ``முரசொலிக்கு துரை.சந்திரசேகரனும், ஜெயசந்திரனுக்கு பழநிமாணிக்கமும் சப்போர்ட் செய்தனர். இரண்டு பேருமே ஒன்றியச் செயலாளர் பதவியைப் பெற்றுவிடக் கடுமையாக முயன்றுவந்தனர். நேற்று இரவு இரு தரப்பு ஆதரவாளர்களும் கலைஞர் அறிவாலயம் முன்பு கூடியிருந்தனர். இந்த நிலையில், தேர்தல் ஆணையாளர் குழந்தைவேல், துரை.சந்திரசேகரன் இருவரும் முரசொலி ஒன்றியச் செயலாளராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர்.
அப்போது ஜெயசந்திரன், `எனக்கு மெஜாரிட்டி இருக்குறப்ப எப்படி வாக்கெடுப்பு நடத்தாம அறிவிச்சீங்க' எனக் கேட்டிருக்கிறார். இந்தச் சத்தம் கேட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த பழநிமாணிக்கம், தேர்தல் ஆணையாளர், துரை.சந்திரசேகரனிடம், `கட்சித் தலைமை சொன்னதைக் கடைபிடிக்காமல் உங்க இஷ்டத்துக்கு தேர்தலை நடத்துவீங்களா?' என்று கேட்டிருக்கிறார். உடனே அங்கிருந்த முரசொலி தரப்பினர், `நீங்க யார் இதை கேட்பதற்கு... மாவட்டச் செயலாளரா?' எனக் கேட்க இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த பழநிமாணிக்கம் தன் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய முரசொலி தரப்பினர், அவர் காரையும் தாக்கினர். அத்துடன் அறிவாலயத்துக்குள் இருந்த ஜெயசந்திரனையும் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து பழநிமாணிக்கம் ஆதரவாளர்கள் அறிவாலயத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போலீஸார் வந்து கலைந்து செல்லச் சொல்லியும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இந்தப் பிரச்னை தொடர்ந்ததால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

வீட்டுக்குச் சென்ற பிறகு பழநிமாணிக்கம் தர்ணா போராட்டம் நடத்தியவர்களுக்கு போன் செய்து, `போட்டியிருந்தால் தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை அறிவுறுத்தியும்... அவங்க ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தலை. கேள்வி கேட்டவங்களையும் அடிக்குறாங்க. அவங்க செஞ்ச தப்பை நாம செய்யக் கூடாது. எல்லாரும் கலைஞ்சு போங்க. தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்வோம்' எனச் சொன்ன பிறகு கலைந்து சென்றுவிட்டனர்" என்றார்கள்.
இது குறித்து முரசொலியிடம் கருத்து கேட்பதற்கு போன் செய்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. ஜெயசந்திரனிடன் பேசினோம், வெளியில் இருப்பதாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.