Published:Updated:

திமுகவை உலுக்கும் தீ சென்டிமென்ட்; அதிமுகவை ஆத்திரப்படுத்தும் தண்ணீர் விவகாரம்!

ஜெயலலிதா - ஸ்டாலின்

தஞ்சாவூர் தீ விபத்து திமுக -வின் தீ சென்டிமென்ட்டை மீண்டும் பேசுபொருளாக்கயிருக்கிறது. இந்த விபத்து 1997-ல் நடந்த தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் தீ விபத்தையும் நினைவுபடுத்தியிருக்கிறது.

திமுகவை உலுக்கும் தீ சென்டிமென்ட்; அதிமுகவை ஆத்திரப்படுத்தும் தண்ணீர் விவகாரம்!

தஞ்சாவூர் தீ விபத்து திமுக -வின் தீ சென்டிமென்ட்டை மீண்டும் பேசுபொருளாக்கயிருக்கிறது. இந்த விபத்து 1997-ல் நடந்த தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் தீ விபத்தையும் நினைவுபடுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஜெயலலிதா - ஸ்டாலின்

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவில் நடந்த தீ விபத்து தி.மு.க -வுக்கு தீ சென்ட்டிமென்ட்டை மீண்டும் யோசிக்க வைத்திருக்கிறது. அதே நேரம் அ.தி.மு.க-வுக்கு மகாமகத்தின் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பாக அப்பர் சதய விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவின்போது, தேரின் அலங்கார வளைவு மின்சாரகம்பியில் பட்டு, மின்சாரம் பாய்ந்தும், தீ பிடித்ததிலும், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் இந்தத் தேர் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தை வைத்து சட்டமன்றத்தில் தி.மு.க - வுக்கு எதிராகக் கம்பு சுற்றியது அ.தி.மு.க. எதிர்கட்சித் தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை அன்று சட்டமன்றத்தில் பேசும் போது “அரசு தேர்த் திருவிழாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம். அலட்சியப்போக்குடன் அரசு செயல்பட்டது” என்கிற ரீதியில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

விபத்துக்குள்ளான தேர்
விபத்துக்குள்ளான தேர்

மேலும், அ.தி.மு.க சார்பில் இந்த விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானமும் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க ஒருபுறம் தி.மு.க விற்கு செக் வைக்கும் வகையில் களிமேடு தேர் விபத்தை வைத்து சட்டமன்றத்தில் புயலை கிளப்பிய நிலையில், அவர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை “ஆன்மிக விவகாரத்தில் அரசியலைக் கலக்க விரும்பவில்லை. ஆனால் இதே போன்று டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே பெரும் விபத்துக்கள் நடந்துள்ளன” என்று குறிப்பிட்டவர், தொடர்ந்து “ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருடைய தோழி சசிகலாவுடன் கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்” என்று சொன்னார்.

இது அ.தி.மு.கவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. உடனடியாக அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து செல்வப்பெருந்தகை ஜெயலலிதா குறித்துப் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். கடைசியில் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தி.மு.க ஆட்சியில் தீ விபத்துகள் நடப்பது என்பது புதிதல்ல. தீ விபத்து தி.மு.க ஆட்சியல் ஒரு சென்ட்டிமென்டாகவே மாறிவிட்டது என்கிறார்கள் அ.தி.மு.கவினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் இருந்தபோது புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை நடத்த முடிவெடுத்தது அரசு. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டது. 1997-ம் ஆண்டு ஜுன் 5-ம் தேதியிலிருந்து கும்பாபிஷேகத்திற்கான யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டன. பழைமையான கோயிலின் கும்பாபிஷேகத்தைக் காண பக்தர்கள் பலரும் அந்தக் கோயிலுக்கு வந்து சென்றனர். ஜுன் 7-ம் தேதி இரவு திடீரென யாக குண்டத்தில் தீபிடித்தது. யாக குண்டங்கள் வளர்க்கப்பட்ட பகுதியே யாககுண்டம்போல மாறியது. அங்கு நின்றவர்கள் பதற்றத்தில் முண்டியடித்து ஓட, தீயில் கருகியும் இடிபாடுகளில் சிக்கியும் 60 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரம் அரசுத் தரப்பில் இந்த எண்ணிக்கை குறைத்துக்காட்டப்பட்டது. இது ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிற விமர்சனங்கள் அப்போது முன்வைக்கப்பட்டன.

தஞ்சை பெருவுடையார் கோயில் தீ விபத்து
தஞ்சை பெருவுடையார் கோயில் தீ விபத்து

இந்நிலையில்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதே தஞ்சை மண்ணில் அப்பர் சதய விழாவில் மின்சாரம் வயரில் தேர் உரசி, தேர் தீப்பிடித்து எரிந்ததை தி.மு,க வினர் சென்டிமென்டாகத் தங்களுக்கு நெருக்கடியாகப் பார்க்கிறார்கள். அதிலும் இந்த விபத்து நடந்த இடத்தை முதல்வர் பார்வையிடச் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தபோது, சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திடீரென தீப்பற்றி எரிந்ததும் ஆளும் தரப்பு கடும் அப்செட்டாகிவிட்டது.

மற்றொருபுறம், தீ சென்டிமென்டில் தி.மு.க சிக்கி தவித்துவந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி மகாமகம் விவகாரத்தை சுட்டிக்காட்டியது அ.தி.மு.க வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அதே தஞ்சை மாவட்டத்தில் நடந்த சம்பவமே. 1992-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியிலிருந்தபோது கும்பகோணத்தில் புகழ்பெற்ற மகாமகம் விழா நடந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அன்று நடந்தது. ஆனால் தீர்த்தவாரி நடக்கும் 26-ம் தேதிக்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே முதல்வராக அப்போது இருந்த ஜெயலலிதா தீர்த்தவாரியில் கலந்துகொள்ள வருவதாக அறிவிப்பு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குளத்தின் மேற்கு கரையில் முதல்வர் குளத்திற்குள் இறங்கி அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாத்ரூமில் குளித்துவிட்டு, அதே மேற்கு கரை வழியாக காரில் புறப்படும் திட்டம் இருந்தது. தீர்த்தவாரி அன்று காலையிலிருந்து குளத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், காவல்துறையின் கெடுபிடிகளும் அதிகமாக இருந்தன. பதினொன்றரை மணிக்கு குளத்திற்கு வந்த ஜெயலலிதாவை பார்க்கும்ஆசையில் குளத்தின் மறுகரையில் கூட்டம் முண்டியடிக்க, காவல்துறை தடியடி நடத்தியது. இந்தக் களேபரத்தில் குளத்திற்குள் சிக்கியும், நெருக்கடிக்குள் மாட்டியும் சுமார் 60 பேர் மாண்டனர்.

மகாமகத்தில்
மகாமகத்தில்

ஆனால் ஜெயலலிதாவும் அவரின் தோழி சசிகலாவுக்கும் இந்த விவகாரம் எதுவுமே தெரியாமல் நீராடிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டனர். அவர்கள் போனபிறகுதான் இறந்தவர்கள் உடல்கள் குளத்தில் மிதக்க ஆரம்பித்தன. இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது. அ.தி.மு.க வுக்கு அழியாத ஒரு கறையாகவும் இந்த விவகாரம் அமைந்துவிட்டது. இந்த விவகாரத்தையே இப்போது அ.தி.மு.க வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கிளப்பிவிட, ஆத்திரத்தில் அ.தி.மு.கவினர் சட்டமன்றத்தின் உள்ளேயே தர்ணாவரை சென்றுவிட்டார்கள். திராவிட கட்சியான தி.மு.க வுக்கு தீ சென்டிமென்ட் சிக்கலாகியிருப்பது போல, அ.தி.மு.கவுக்கு இந்த நீர் விவகாரம் சங்கடமாகவே இன்றுவரை இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism