Published:Updated:

"பாஜக பாய்ச்சலுக்கு பணிகிறதா திமுக"- விமர்சனங்களுக்கு விடை கொடுக்குமா அரசு?

ஸ்டாலின் - அண்ணாமலை

தி.மு.க வின் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க-கட்சியினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் நிலவி வருகிறது. தி.மு.க தரப்பிலிருந்து சில விவகாரங்களுக்கு பதிலடி கொடுத்தாலே, தி.மு.க மீதான விமர்சனங்களுக்கு முடிவு கிடைக்கும்.

"பாஜக பாய்ச்சலுக்கு பணிகிறதா திமுக"- விமர்சனங்களுக்கு விடை கொடுக்குமா அரசு?

தி.மு.க வின் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க-கட்சியினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் நிலவி வருகிறது. தி.மு.க தரப்பிலிருந்து சில விவகாரங்களுக்கு பதிலடி கொடுத்தாலே, தி.மு.க மீதான விமர்சனங்களுக்கு முடிவு கிடைக்கும்.

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

அயோத்தியா மண்டப விவகாரம், ஃபீப் பிரியாணி விவகாரம், பட்டணப்பிரவேசம், இப்போது திருவாரூரில் கருணாநிதி பெயரில் சாலை அமைக்கும் விவகாரம் என தொடர்ந்து பாஜக எதிர்ப்பு காட்டும் விவகாரங்களில் எல்லாம் தி.மு.க அரசு தொடர்ந்து பின்வாங்கி வருவது ஒருபுறம் நடக்க, பாஜக எதிர்வினையாற்றினால் அதைக் கண்டு அரசு எதற்கு அச்சம் கொள்ள வேண்டும் என்று தி.மு.க ஆதரவாளர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

முதல்வருடன் ஆதினங்கள் சந்திப்பு
முதல்வருடன் ஆதினங்கள் சந்திப்பு

சமீபத்தில் திருவாடுதுறை ஆதினத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியை இந்த ஆண்டு நடத்துவதற்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் முதலில் தடைவிதித்து. இதை பாஜக கண்டித்தது. மற்றொருபுறம் அரசு இந்த நிகழ்வுக்கு அனுமதி கொடுக்காவிட்டால், பாஜக போராட்டம் நடத்தும் என்று அறிவித்தது. இந்நிலையில் முதல்வருடன் குன்றக்குடி ஆதினம் உட்பட சில ஆதினங்கள் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து பட்டணப்பிரவேசம் நடத்துவதற்கான தடை ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதே போல், ஆம்பூரில் பிரியாணி திருவிழாவைக் கடந்த வாரம் நடத்த திருப்பத்துார் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதுமே, பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் இந்த பிரியாணித் திருவிழாவில் ஃபீப் பிரியாணியை வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கேற்ப மாவட்ட நிர்வாகமும் பிரியாணி திருவிழாவில் ஃபீப் பிரியாணி இடம்பெறாது என்று அறிவிக்க, அதிர்ந்து போனது தி.மு.க கூட்டணியில் உள்ள மமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை. உடனே இந்த கட்சிகள் பிரியாணித் திருவிழாவில் இலவசமாக ஃபீப் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிக்க பெரும் சர்ச்சை வெடித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் பிரியாணித் திருவிழாவை ஒத்திவைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பாஜக எதிர்ப்புக்கு பயந்தே இந்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் எடுத்தது என்று பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர். இதற்கு முன்பாக இந்து அறநிலையத்துறை கையகப்படுத்திய சென்னை அயோத்தியா மண்டபத்தை மீண்டும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு வழங்கும் நீதிமன்ற உத்தரவையும் பாஜக தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கொண்டாடியது. ஒருபுறம் மதஅரசியலை எதிர்த்து அரசியல் செய்யும் தி.மு.கவின் அரசுக்கு இந்த விவகாரங்கள் எல்லாம் குடைச்சலைக் கொடுத்தன.

சமூக நீதிக்கான ஒற்றை அடையாளமாக இந்தியா முழுமைக்குமான தலைவராக ஸ்டாலின் தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறார். மற்றொருபுறம் தமிழகத்தில் எதிர்கட்சிக்கான இடத்தைக் கைபற்ற பாஜக தொடர்ந்து தி.மு.கவுக்கு எதிரான அரசியலை மேற்கொண்டுவருகிறது. மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளை முன்வைத்துவரும் தி.மு.க மத்தியில் உள்ள பாஜக அரசைக் கண்டு பயம் கொள்வதாகவும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

பிரியாணி திருவிழா அறிவிப்பு
பிரியாணி திருவிழா அறிவிப்பு

இந்நிலையில் தி.மு.க இந்த விவகாரங்களில் எல்லாம் எதற்காக பின்வாங்கியது என்றும், தி.மு.கவின் அரசியல் வியூகம்தான் என்ன என்று தி.மு.க தரப்பில் விசாரித்தோம்.“தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அவர்கள் எவ்வளவோ யுக்தியை கையாளுகிறார்கள். அதில் ஒன்றுதான் இதுபோன்ற திட்டங்களில் அரசு மாற்றம் செய்யும்போது அதை இவர்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்வது. உண்மையில் அரசு நீக்கம் செய்த ஒவ்வொரு திட்டங்களுக்குப் பின்னாலும் வேறு சில காரணங்கள் இருக்கிறது. பட்டணப்பிரவேசம் விவகாரத்தில் ஆதினங்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த பிறகு இந்தாண்டு மட்டும் அனுமதி கொடுத்துள்ளார்கள். அடுத்த ஆண்டு மாற்று ஏற்பாடு செய்வதாக ஆதினம் தரப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளது. ஃபீப் பிரியாணி விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமே எல்லா முடிவுகளையும் எடுத்தது. சர்ச்சை வெடித்ததும் அவர்களே விழாவை ஒத்திவைத்துவிட்டார்கள்” என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றொருபுறம் அரசு அதிகாரிகள் தரப்பில் வேறு சில கருத்துகளும் உலவுகிறது. “தமிழகத்தில் 10 ஆண்டுகளில் தி.மு.க ஆட்சி இல்லாத நிலையில், அதிகாரிகள் பலரும் அ.தி.மு,க சார்பானவர்களாவும், பாஜக வின் சித்தாந்தங்களில் விருப்பம் கொண்டவர்களாகவும் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை வைத்துக்கொண்டு ஆட்சி வந்த ஓர் ஆண்டில் அரசு அத்தனை விவகாரங்களையும் மாற்ற முடியாது. சமீபத்தில்கூட மதுரை மருத்துவக்கல்லுாரில் நடந்த விழாவில் சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழியேற்றதற்கு, அந்த விழாவில் இருந்த தமிழக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் கண்டனம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அந்த மருத்துவக் கல்லுாரி டீனும் இடமாற்றம் செய்து முதலில் உத்தரவு வந்தது. அதன்பிறகு தான் மத்திய அரசே அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் சமஸ்கிருத்ததில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டது தெரிந்து, அந்த டீனை மீண்டும் அதே பதவியில் அமரவைத்தனர்.

அயோத்தியா மண்டபம்
அயோத்தியா மண்டபம்

அதேபோல் திருப்பத்துார் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதுபோல ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் அவர் சமீபத்தில் சென்னையில் நடந்த மாவட்ட ஆட்சியரக்ள் மாநாட்டிலேயே ஆம்பூர் பிரியாணியின் சிறப்பு குறித்தும், அதை ஒரு சுற்றுலா மையமாக மாற்றலாம் என்றெல்லாம் ஆலோசனை கொடுத்தவர். ஆரம்பத்தில் ஃபீப் பிரியாணியோடு தான் இந்த விழாவை நடத்தத் திட்டமிட்டார்கள். ஆனால், பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவும் தேவையில்லாமல் சர்ச்சையாக வேண்டாம் என்றுதான் அந்த விழாவிற்கு ஃபீப் வேண்டாம் என்று சொல்ல, அதுவும் பிரச்னையானது. இறுதியாக விழாவையே ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே நேரம் சில இடங்களில் பாஜகவுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் செயல்படுவதும் நடந்துவருகிறது. அதை உடனே அரசால் தடுத்து நிறுத்த முடியாது. அதிகாரிகளை எல்லாம் தி.மு,க அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இன்னும் சில காலம் ஆகும் ” என்கிறார்கள்.

பாஜகவுக்கு பயந்து தி.மு.க அரசு செயல்டுகிறதா? என்று கோட்டையில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “காக்கா உட்காரப் பழம் விழுந்த கதையாக அரசு ஒரு கொள்கை முடிவில் எடுக்கும் சில முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக நடப்பதால் அது அவர்களுக்கு பயந்து நடப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துகிறார்கள். சமீபத்தில் திருவாரூரில் உள்ள வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்கவேண்டாம் என்று பாஜக ஒருபுறம் கோரிக்கை வைக்க அரசும் அதை ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் திருவாரூரில் உள்ள வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது அங்குள்ள உள்ளாட்சி அமைப்புதான். அரசு தரப்பில் எந்தவித அரசாணையும் வெளியிடவில்லை. அந்தத் தீர்மானத்திற்கு அரசுத் தரப்பிலிருந்து அனுமதி இதுவரை வழங்கவில்லை என்பதுதான் நிதர்சனம். அதற்காக கருணாநிதியை அரசு புறக்கணிப்பதாக எண்ணக்கூடாது. கருணாநிதியின் சொந்த ஊரில் அவருக்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதுவரை வேறு எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்றே கோட்டையிலிருந்து உத்தரவுபோனது.

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

அதே போல் பட்டணப்பிரவேச விவகாரத்திலும் ஆதினங்கள் வைத்த கோரிக்கையை ஏற்றே தடையாணை நீக்கப்பட்டது. இந்த விவகாரத்தை வைத்தே தி.மு.க அரசு மீது இந்து விரோத முத்திரையை பாஜக குத்தப் பார்த்தது அதற்கு வேட்டு வைக்கவே தடையாணை விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆம்பூர் பிரியாணி விவகாரத்தில் அந்த மாவட்ட நிர்வாகமே சுயமாக முடிவெடித்தது. அதில் முதல்வர் அலுவலகம் தலையிடவில்லை. இப்படி எந்த விவகாரத்திலும் பாஜகவுக்கு பயந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று நினைத்தால் அது தவறு. பாஜக வினர் அப்படி ஒரு பிரசாரத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கவேண்டியது தி.மு.க தரப்புதானே தவிர எங்களைப் போன்ற அரசு அதிகாரிகள் அல்ல” என்று விளக்கம் கொடுக்கிறார்.

அதே நேரம் சமூக வலைதளங்களில் இதுவரை தி.மு.க-வுக்கு ஆதரவாக களமாடிவந்த பலரும் பாஜகவுக்கு ஆதரவான அரசு தி.மு.க என்று விமர்சனங்களை முன்வைக்க, அதற்கு தி.மு.க கட்சியினர் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், தி.மு.க வின் ஆதரவாளர்களுக்கும், தி.மு,கவினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் நிலவி வருகிறது. தி.மு.க தரப்பிலிருந்து மேற்சொன்ன விவகாரங்களுக்கு பதிலடி கொடுத்தாலே இந்த விவகாரத்தில் தி.மு.க மீதான விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளியாகிவிடும் என்று வருத்தப்படுகிறார்கள் தி.மு.க சார்பானவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism