Published:Updated:

அதிமுக பொன்விழா: முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்கள் மோதல்; நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அதிமுக பொன்விழா
அதிமுக பொன்விழா ( ம.அரவிந்த் )

அதிமுக 50 ஆண்டுக்கால வரலாற்றில் பேராவூரணியில், கட்சிப் பொது நிகழ்ச்சிகளில் இது போன்ற வெளிப்படையான பிரச்னை, மோதல்கள் எதுவும் நடந்தது இல்லை.

அ.தி.மு.க தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த ஆண்டைப் பொன்விழா ஆண்டாகல் கொண்டாட வேண்டும் எனத் தலைமை அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பொன்விழாவை அதிமுக-வினர் கொண்டாடினர்.

பேராவூரணியில் நடந்த அதிமுக பொன்விழா ஊர்வலம்
பேராவூரணியில் நடந்த அதிமுக பொன்விழா ஊர்வலம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தனித் தனி கோஷ்டிகளாகச் செயல்பட்டுவருகின்றனர். இதனால் கலகலப்பாக நடைபெறவேண்டிய அதிமுக பொன்விழா கைகலப்பு அளவுக்குச் சென்று முடிந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவிந்தராசுவை மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ-வான திருஞானசம்பந்தத்தின் ஆதரவாளரான நிர்வாகி ஒருவர் நெஞ்சில் கைவைத்துத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோவிந்தராசுவின் மகனும், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளருமான இளங்கோ அந்த நிர்வாகியை அடித்திருக்கிறார். இந்த விவகாரம் புகாராக போலீஸ் வரை செல்ல,. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்தப் பிரச்னை அதிமுக வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக-வினர் ஊர்வலம்
அதிமுக-வினர் ஊர்வலம்

இது குறித்து அதிமுக வட்டத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது, ``பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் துரை.மாணிக்கம், தெற்கு ஒன்றியச் செயலாளர் இளங்கோ ஆகியோர் அதிமுக பொன்விழாவுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். அரசு பயணியர் மாளிகையிலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்த பிறகு ரயிலடியில் அன்னதானம் வழங்கும் வகையில் நிகழ்ச்சி திட்டமிட்டு அதன்படி நடத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராசு ஒருங்கிணைப்பில், அவரது தலைமையில் ஊர்வலம் செல்ல அதிமுக நிர்வாகிகளுடன் தயார் நிலையில் இருந்தார். அதேநேரத்தில் சுற்றுலா மாளிகைக்கு எதிரிலேயே உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த திருஞானசம்பந்தம் தன் தலைமையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தனியாக ஊர்வலம் செல்லத் தயாராக இருந்தார். அப்போது கட்சியின் சீனியர்கள் சிலர் திருஞானசம்பந்தம் தரப்பில் பேசிய பிறகு இருதரப்பும் ஒன்றாகச் சேர்ந்து ஊர்வலம் புறப்பட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ மகன் இளங்கோ
முன்னாள் எம்.எல்.ஏ மகன் இளங்கோ

ஊர்வலத்தில் திருஞானசம்பந்தம் வேகமாக முன்னே சென்றுகொண்டிருக்க, அதைத் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நகரச் செயலாளரான கருணாகரன் செல்போனில் போட்டோ எடுப்பதற்காகக் கூட்டத்துக்குள் சென்றிருக்கிறார். அப்போது கோவிந்தராசு, ``மெதுவா போ தம்பி" எனச் சொல்ல முன்னாள் எம்.எல்.ஏ என்றும் பார்க்காமல் அடிப்பதுபோல் வம்புக்கு வந்திருக்கிறார் கருணாகரன். இதைப் பார்த்த இளங்கோ தன் அப்பாவிடம் வம்புக்குச் சென்றதைப் பொறுக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு கருணாகரனை அடித்துவிட்டார்.

இதையடுத்து கருணாகரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துவிட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு கோவிந்தராசு கருணாகரனிடம் மன்னிப்புக் கேட்பதற்காக மருத்துவமனைக்கே செல்ல, அப்போதும் கருணாகரன் எதிர்த்துக்கொண்டு வந்திருக்கிறார். இதையடுத்து இரு தரப்பும் போலீஸில் புகார் கொடுக்க வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கோவிந்தராசு கோஷ்டி, திருஞானசம்பந்தம் கோஷ்டி என இரு தரப்பினரும் இரு பிரிவாக செயல்பட்டுவருகின்றனர். இதைக் கட்சியின் சீனியர்கள் சிலர் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

Tamil News Today: அதிமுக பொன்விழா இன்று கொண்டாட்டம்

அவரும் கடந்த வாரம் இரு தரப்பையும் அழைத்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதிமுக 50 ஆண்டுக்கால வரலாற்றில் பேராவூரணியில் கட்சிப் பொது நிகழ்ச்சிகளில் இது போன்ற வெளிப்படையான பிரச்னை, மோதல்கள் எதுவும் நடந்தது இல்லை. இதுதான் முதன்முறை. கட்சியில் நடுநிலையாக உள்ளவர்களிடம் விசாரித்து இந்தக் கோஷ்டிப்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கையை வைத்திலிங்கம் எடுக்க வேண்டும்" என்றனர்.

கோவிந்தராசு ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம். ``த.மா.கா-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த திருஞானசம்பந்தம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அதிமுக-வினரை நம்பாமல் த.மா.கா-வினரை அருகில் வைத்துக்கொண்டு செயல்பட்டதால் தோல்வியடைந்தார். கட்சி நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தன் செலவில் கோவிந்தராசு தரப்பினர் செய்வார்கள். ஆனால் முன்னால் வந்து நின்றுகொண்டு எல்லாத்தையும் தான் செய்ததுபோல் திருஞானசம்பந்தம் காட்டிக்கொள்வார்.

முன்னாள் எம்.எல்.ஏ திருஞானசம்பந்தம்
முன்னாள் எம்.எல்.ஏ திருஞானசம்பந்தம்

த.மா.காவி-லிருந்து வந்த அவரது ஆதரவாளரான கருணாகரன் வம்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே வந்திருக்கிறார். `மெதுவா போப்பா தம்பி’ எனச் சொன்ன கோவிந்தராசுவை அவரது வயசுக்கும் மரியாதை கொடுக்காமல் அடிக்கிற மாதிரி சென்று நெஞ்சில் கைவைத்துத் தள்ளிவிட்டார். இதைப் பார்த்த அவருடையிஅ மகன் இளங்கோ அப்பாவை அடிக்கச் சென்ற கருணாகரனைக் கோபத்தில் அடித்துவிட்டார். பின்னர் கட்சியின் சீனியர்கள், ``த.மா.கா-விலிருந்து வந்த சில வருஷத்துல பாரம்பர்யமான கட்சியில் இருக்குறவங்களை அடிக்குற அளவுக்கு திருஞானசம்பந்தம் தைரியம் கொடுத்திருக்கிறார். சரியான போக்கு இல்லை" எனக் கொதித்தனர். நடந்ததை வைத்திலிங்கம் தரப்பில் தெரிவித்திருக்கின்றனர். அவர் பொறுமையா இருக்கச் சொல்லியிருக்கார்’’ என்றனர்.

திருஞானசம்பந்தம் தரப்பில் பேசினோம். ``அரசு இடமான பயணியர் மாளிகையிலிருந்து ஊர்வலம் செல்வதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். ஆட்சி மாறிவிட்டது. அரசு இடத்துல நடத்தினால் ஏதாவது பிரச்னை வரும். வேறு இடத்திலிருந்து போகலாம் எனக் கூறி எதிரே இருந்த மண்டபத்தில் திருஞானசம்பந்தம் அதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். கோவிந்தராசு தரப்பு நின்ற இடத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. நாங்கள் நின்ற இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஒருவழியாக எல்லோரும் ஒன்றாகவே ஊர்வலம் போனோம். தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருப்பதால் கருணாகரன் முன்னாடி சென்று போட்டோ எடுப்பதற்காக வேகமாக ஓடியிருக்கிறார். அப்போது கோவிந்தராசு அவரது சட்டையை பிடித்து இழுத்திருக்கிறார். `ஏன் சட்டையைப் பிடிக்குறீங்க’ எனக் கேட்டதற்கு கோவிந்தராசுவின் மகன் இளங்கோ அடித்துவிட்டார். ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் உள்ளவர் கட்சியின் மற்றொரு நிர்வாகியை அடித்தது தவறு. அதேநேரத்தில் தன் பதவியின் பொறுப்பை உணர்ந்து இளங்கோ செயல்படவில்லை. கோவிந்தராசு அதைத் தடுக்கவும் இல்லை. மற்றபடி கோஷ்டிப்பூசல் எதுவும் இல்லை. ஒற்றுமையாகவே செயல்படுகிறோம்" எனத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு