Published:Updated:

`குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் 2021' - இந்தியாவின் பட்டினி நிலவரத்தை மோடி அரசு ஏற்க மறுப்பது சரியா?

உலகப் பட்டினி குறியீடு ( Representational Image | Pixabay )

பசி தீவிரமான நாடுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது.

`குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் 2021' - இந்தியாவின் பட்டினி நிலவரத்தை மோடி அரசு ஏற்க மறுப்பது சரியா?

பசி தீவிரமான நாடுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது.

Published:Updated:
உலகப் பட்டினி குறியீடு ( Representational Image | Pixabay )

உலக அளவில் இருக்கும் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு, `உலக பட்டினிக் குறியீடு பட்டியல்' ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த `கன்சர்ன் வேல்ர்ட்வைட்' அமைப்பும் (Concern Worldwide), ஜெர்மனியைச் சேர்ந்த `வெல்ட் ஹங்கர் ஹில்ஃப்' அமைப்பும் (Welt hunger hilfe) இணைந்து, `குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்' என்கிற தலைப்பில் உலக நாடுகளின் பட்டினி குறித்த ஓர் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன.

5 வயதுக்குக்கீழ் இருக்கும் குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருப்பது, உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் உயிரிழப்பு, ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது.

உலகப் பட்டினி குறியீடு
உலகப் பட்டினி குறியீடு
Representational Image | Pixabay

இந்தப் பட்டியலின்படி, பசி தீவிரமான நாடுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு 107 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில், இந்தியா 94-வது இடத்திலிருந்தது. இந்த ஆண்டு, 116 நாடுகள் கொண்ட பட்டியலில் 101 இடத்திலிருக்கிறது இந்தியா. பசி தீவிரமாக இருக்கும் நாடுகளின் இந்தப் பட்டியலில் இந்தியாவைவிட 15 நாடுகள் மட்டுமே மோசமானதாக இருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அண்டை நாடுகள்!

இந்தியாவின் அண்டை நாடுகள் பலவும் இந்தியாவைவிட முன்னேறிய நிலையிலேயே இருக்கின்றன என்று உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் 92-வது இடத்திலும், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் 76-வது இடத்திலும், இலங்கை 65-வது இடத்திலும் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் 103-வது இடத்திலிருக்கிறது.

2021-ம் ஆண்டுக்கான `உலக பட்டினிக் குறியீடு பட்டியல்' வெளியானதை அடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வறுமை, பசி உள்ளிட்டவற்றை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்'' எனக் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.

மோடி
மோடி

இந்திய அரசின் எதிர்ப்பு!

இதையடுத்து, இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், ``உலகளாவிய பட்டினி குறியீட்டுப் பட்டியல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்சர்ன் வேல்ர்ட்வைட், வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் அமைப்புகள் இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பு சரியான ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை என்றே நினைக்கிறோம். இந்தப் பட்டியலில் சொல்லப்பட்டிருக்கும் மதிப்பீடுகள் அனைத்தும் அறிவியல் ஆதாரமற்றவையாக இருக்கின்றன. கருத்துக் கணிப்பாக, நான்கு கேள்விகளுக்கான விடைகளை தொலைப்பேசி மூலம் பெற்று இந்த மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையின்படி, அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலெல்லாம் கோவிட் பெருந்தொற்றால் வேலை, வணிக இழப்பு, வருமான நிலை குறைப்பு உள்ளிட்டவை ஏற்படவேயில்லை என்றே தெரிகிறது. 2018-20 ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் மேற்கண்ட நாடுகள் முன்னேறியிருப்பது எங்களுக்கு ஆச்சர்யமளிக்கிறது. அடிப்படை யதார்த்தம், உண்மைகளை கணக்கில் கொள்ளாமல் செய்யப்பட்டிருக்கும் இந்த ஆய்வில் முறைசார் சிக்கல்கள் இருக்கின்றன'' என்று பட்டினி குறியீட்டுப் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலர், ``எல்லா விஷயங்களிலும் பா.ஜ.க-வை குறை சொல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. வெளிநாடுகளில் இருந்துகொண்டு ஏதோ ஒரு நிறுவனம் இந்தியாவில் பசி, பட்டினி இருக்கிறது என்று சொன்னால், அதை வைத்துக்கொண்டு பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள். `ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளாக அங்கு ஏராளமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கிறார்கள்' என்று தரவுகள் சொல்கின்றன. இந்தியாவில் பட்டினிச் சாவு என்பது மிக மிகக் குறைந்துவிட்டது என்பது இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தப் பட்டியலில் இந்தியாவைவிட, ஆப்கன் இரண்டு இடங்கள் மட்டுமே பின்தங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கையில் கொரோனா காரணமாக கடும் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இருந்தும், இந்தப் பட்டியலில் இலங்கை 65-வது இடத்தில் இருக்கிறது. இதையெல்லாம் வைத்தே இது அடிப்படை ஆதாரமில்லாமல் போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல் என்பதைப் புரிந்துகொள்ளலாம்'' என்கிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்
AP

பா.ஜ.க ஆதரவாளர்களின் கருத்துகளை மறுக்கும் நெட்டிசன்கள் சிலர், ``கொரோனா பெருந்தொற்றுக் காரணமாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் உண்ண உணவின்றி, தங்கள் ஊர்களுக்குச் செல்ல வாகனமின்றி சாலை நெடுக நடந்து சென்ற காட்சிகள் அனைத்தையும் உலகமே பார்த்தது. கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் வெளியான National Family Health Survey முடிவில்கூட இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது குறித்துச் சொல்லப்பட்டிருந்தது. உலக பொருளாதார மன்றம் (The World Economic forum), `கோவிட்-19 தொற்றால் உலகம் முழுக்க பட்டினி, வறுமை அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் வெகுவாக அதிகரித்திருக்கிறது' என்று சொல்லியிருந்தது. இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் 101-வது இடம் என்று சொல்லப்பட்டிருப்பது தவறாக இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தியாவில் பசி, பட்டினியால் வாடுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆகையால், இதுபோன்ற விஷயங்களுக்கு எதிர்வினையாற்றுவதை விட்டுவிட்டு, ஊட்டச்சத்துக் குறைபாட்டையும், பட்டினியையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்'' என்கிறார்கள்.