"சமீபத்தில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டில் சிக்கிய முன்னணி சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார். அமலாக்கப் பிரிவில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய இரண்டு அமைச்சர்கள் குறித்த விவரங்களை வாக்குமூலமாக கொடுத்ததாத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களைத் தயாரித்தவர் எல்ரெட் குமார். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `விடுதலை' என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். திரைப்பட தயாரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள இவர் கல் குவாரி பிசினஸில் கொடிகட்டிப் பறப்பவர். பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் பல்வேறு குவாரிகளை இவரது நிறுவனமே ஒப்பந்தததிற்கு எடுத்து கற்களை எடுத்து விற்பனை செய்துவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், வருமானத்தைக் குறைத்து கணக்குக்காட்டியதாக இவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த மார்ச் 3-ம் தேதி அன்று வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின. இதனத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவும் விசாரணையில் இறங்கியது. குறிப்பாக இவர் குவாரிகள் சிலவற்றை குத்தகைக்கு எடுத்ததில் அன்றைக்கு ஆளும் தரப்பில் இருந்தவர்களுடன் பணப் பரிமாற்றத்தையும் செய்திருப்பதை அமலாக்கபிரிவு உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து எல்ரெட் குமாரை விசாரணைக்கு அழைத்த அமலாக்கப்பிரிவு, அவரிடம் கைப்பற்றிய ஆவணங்களுக்கான விவரங்களைத் தோண்டித் துருவி விசாரித்திருக்கிறது.

அப்போது 2016-ம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கத்தின் போது அன்றைக்கு ஆளும் தரப்பில் பவர்புல்லாக இருந்த இரண்டு அமைச்சர்கள் தன்னிடம் பெரும் தொகையை கொடுத்ததை எல்ரெட் குமார் வாக்குமூலத்தில் உறுதி செய்துள்ளார். குறிப்பாக கடலோர மாவட்டத்தின் அமைச்சரும், ஆந்திர மாநிலத்தில் அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இவரிடம் பெரும் தொகையை கொடுத்துள்ளார்கள். அந்தத் தொகையை வைத்து சென்னையின் மத்திய பகுதியில் வணிக வளாகத்தை எல்ரெட் குமார் வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் அமலாக்கபிரிவு அதிகாரிகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பணத்தை கொடுத்த மாஜிக்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, பிறகு பணத்தைக் கொடுக்காமல் இருந்ததாகவும் அமலாக்கப்பிரிவின் அதிகாரிகள் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியது. இப்போது தயாரிப்பாளரிடம் கிடைத்த தகவலை வைத்து அ.தி.மு.க மாஜி அமைச்சர்களுக்கு வலை விரிக்க அமலாக்கப் பிரிவு திட்டமிட்டிருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் மாஜிக்கள்.

சிக்கிய இரண்டு மாஜிக்களில் ஒருவர் வீட்டில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியிருக்கும் நிலையில் இப்போது அமலாக்கப் பிரிவும் தன்னை நெருங்கி வருவதால், தேவையில்லாமல் தயாரிப்பாளர் விஷயத்தில் தலையிட்டது தப்பாகிவிட்டதே என்று புலம்ப ஆரம்பித்துள்ளார்கள் மாஜிக்கள்.