Published:Updated:

புயலைக் கிளப்பிய `மாமா- மாப்ள' உறவு; ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒட்டப்பட்டி காந்தி - உமா கண்ணுரங்கம்
ஒட்டப்பட்டி காந்தி - உமா கண்ணுரங்கம்

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை தமது சமூகத்தைச் சேர்ந்தவருக்கே கொடுக்க வேண்டும் என்று பிரச்னையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்த நிலையில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர், ஒன்றியக்குழுத் தலைவர், ஒன்றியக்குழு துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக வாக்குப்பதிவு 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் கூட்டம் கூட்டி தங்களுக்கான தலைவர்களைத் தேர்வு செய்யவிருக்கிறார்கள். இந்தப் பதவிகளைப் பிடிக்க குதிரைப் பேரம் நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் பிரச்னை அதிகம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி அமைச்சருக்கும், எதிர்க்கட்சியின் முன்னாள் அமைச்சருக்கும் இடையேயான ‘மாமா... மாப்ள’ உறவால் தலைவர் பதவிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட பலரும் பந்தாடப்படுவதாகச் சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்த சிலர்.

தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார்
தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார்

இந்த விவகாரத்தில், ஜோலார்பேட்டை ஒன்றியம்தான் ரணகளமாகியிருக்கிறது. ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற தி.மு.க கவுன்சிலர்களுக்குள் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஜோலார்பேட்டை தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார் மனைவி சத்தியா, மத்திய ஒன்றியச் செயலாளர் உமா கண்ணுரங்கம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஒட்டப்பட்டி காந்தி மனைவி ஸ்ரீதேவி ஆகிய மூன்று தரப்பினரும் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைப் பிடிக்க முயன்றுவருகிறார்கள். ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு முதலில் பரிந்துரை செய்யப்பட்டவர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமாரின் மனைவி சத்தியா. அதனால்தான் ஒன்றியத்தில் போட்டியிட்ட தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரையும் சிறப்பான முறையில் 'கவனித்திருக்கிறார்' சதீஷ்குமார்.

வெற்றிக்குப் பின்னரும் தலைமைக்கு அனுப்பிய பட்டியலில் சத்தியா சதீஷ்குமாரின் பெயரைத்தான் தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜி பரிந்துரைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், மத்திய ஒன்றியச் செயலாளர் உமா கண்ணுரங்கமும் கனிமொழி வீட்டுக்குச் சென்று ஆதரவு கேட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உமா கண்ணுரங்கத்தை மாவட்டச் செயலாளர் தேவராஜி தரப்புக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மத்திய ஒன்றியச் செயலாளர் உமா கண்ணுரங்கம்
மத்திய ஒன்றியச் செயலாளர் உமா கண்ணுரங்கம்

இதற்கிடையே, முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஒட்டப்பட்டி காந்தியின் மனைவி ஸ்ரீதேவியை சேர்மன் பதவியில் அமரவைக்க அமைச்சர் துரைமுருகன் தரப்பு முயன்றுவருகிறதாம். இந்த மும்முனை யுத்தத்தால் ரணகளம் ஆகியிருக்கிறது ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீதேவியின் தங்கை கவிதா தண்டபாணி திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க மகளிர் அணி அமைப்பாளராக இருக்கிறார். தனக்கு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவி, தன் அக்காவுக்கு ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கேட்டு கனிமொழி வீட்டுக்கு அவர் படையெடுத்ததாகவும் ஒரு தகவல் ஜோலார்பேட்டை தி.மு.க-வை அதிரிபுதிரி ஆக்கியிருக்கிறது. இந்த களேபரங்களுக்கு இடையே, ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட சதீஷ்குமார் மனைவி சத்தியாவின் பெயரை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளருக்கு துரைமுருகன் தரப்பு அழுத்தம் கொடுத்துவருகிறதாம். ஆனால், 'எனது முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை' என்று மாவட்டச் செயலாளர் தேவராஜி திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஒட்டப்பட்டி காந்தி
முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஒட்டப்பட்டி காந்தி

நம்மிடம் பேசிய ஜோலார்பேட்டை தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``ஸ்ரீதேவிக்கு சேர்மன் பதவி கொடுப்பதில் பெரும்பாலான கவுன்சிலர்களுக்கும், கட்சியினருக்கும் விருப்பமில்லை. சத்தியாவுக்குத்தான் ஆதரவு இருக்கிறது. தேர்தலின்போது 25 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுகளை சத்தியாவின் கணவர் சதீஷ்குமார் கவனித்துக்கொண்டார். இதனால், ஒரு சுயேச்சை உட்பட 13 கவுன்சிலர்கள் சதீஷ்குமார் பக்கம் இருக்கிறார்கள்" என்றவர்கள், இந்த விவகாரத்தில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பு செய்யும் உள்ளடி வேலைகள் பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

"கடந்த சட்டமன்றத் தேர்தலில் கே.சி.வீரமணி தோல்விடைய மிக முக்கியக் காரணமாக இருந்தவர் சதீஷ்குமார்தான். அதனால், உள்ளாட்சித் தேர்தலில் சதீஷ்குமாரின் மனைவி சத்தியாவை தோற்கடிக்க கே.சி.வீரமணி தரப்பு கடுமையாக முயன்றது. அப்படியிருந்தும் தி.மு.க வேட்பாளரான சதீஷ்குமாரின் மனைவி வெற்றிபெற்றுவிட்டார். இதை வீரமணி தரப்பால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆளும் கட்சியிலுள்ள தனக்கு வேண்டப்பட்ட ஒரு தலைவர் மூலமாக சதீஷ்குமாரின் மனைவியை சேர்மனாக்க விடாமல் குடைச்சல் கொடுத்துவருகிறது வீரமணி தரப்பு. மேலும், சமூகரீதியாகவும் சதீஷ்குமாருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

ஊழலில் எஸ்.பி வேலுமணி-க்கு அடுத்து கே.சி வீரமணி..! - சிக்கும் ஆதாரங்கள்!

‘மாமா... மாப்ள..’ உறவில் இருக்கக்கூடிய இந்நாள் அமைச்சரும், முன்னாள் அமைச்சரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சதீஷ்குமார் மனைவி சத்தியா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைத் தமது சமூகத்தைச் சார்ந்தவருக்கே கொடுக்க வேண்டும் என்று பிரச்னையைக் கிளப்பிவிட்டிருக்கிறது இந்த 'மாமா... மாப்ள...' கூட்டணி. இந்த அக்கப்போர் போதாதென்று, ஆளும் கட்சி எம்.பி ஒருவரும் ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் தலையிடுவதால், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க-வினர் அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்றனர்.

ஜோலார்பேட்டையில் நடக்கும் இந்த முக்கோண மோதல், மொத்த மாவட்ட தி.மு.க-வையும் ஏக களேபரம் ஆக்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு