Published:Updated:

`முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்!' - கேரள கவர்னரின் பேச்சால் சர்ச்சை!

கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான்
News
கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான்

`முல்லைப்பெரியாறு அணை மிகவும் பழைமையானது. முல்லைப்பெரியாறில் புதிய அணை வேண்டும். மக்களின் கவலையை அரசுக்கு தெரியப்படுத்தியிருக்கிறேன்' என கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கூறியிருக்கிறார்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளம் தமிழகத்துடன் மோதல் போக்கைக் கையாண்டுவருகிறது. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. இதையடுத்து கேரளத்தைச் சேர்ந்த சிலர் முல்லைப்பெரியாறு அணை உடையப்போவதாகப் பீதியைக் கிளப்பி, பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டனர். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் 2014-ல் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 வரை உயர்த்திக்கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால் அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி கேரள அரசு 136 அடி மட்டுமே தண்ணீரைத் தேக்கிவருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

பினராயி விஜயன் மற்றும் ஆரிஃப் முகமது கான்
பினராயி விஜயன் மற்றும் ஆரிஃப் முகமது கான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தக் கடிதத்தில், "முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு அதிகமாக இருப்பதால், வேகமாக நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இதேபோல நீர்வரத்து அதிகமானால் முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி, 142 அடியை எட்டும் நிலை ஏற்படும். எனவே, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும். முல்லைப்பெரியாறிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக, வைகை அணைக்கு எவ்வளவு நீரைக் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை 142 அடியை எட்டிவிட்டால் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்படுவதை 24 மணி நேரத்துக்கு முன்பாகத் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``முல்லைப்பெரியாறு அணை மிகவும் பழைமையானது. முல்லைப்பெரியாறில் புதிய அணை வேண்டும். மக்களின் கவலையை அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். முல்லைப்பெரியாறு விஷயத்தில் தமிழ்நாடு அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தண்ணீர்ப் பிரச்னையில் நீதிமன்றங்கள்தான் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார். புதிய அணை வேண்டும் என்ற கேரள கவர்னரின் பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

இந்த நிலையில் முல்லைப்பெரியாறில் தண்ணீர் மட்டம் குறித்து திருவனந்தபுரம் மற்றும் இடுக்கியில் இன்று அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. மாலை 3 மணிக்கு தமிழக, கேரள உயர்மட்ட அதிகாரிகளின் அவசரக் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.