Published:Updated:

ஆம்னி பஸ்ஸில் வந்த பவுன்ஸர்கள்; திமுக-வுக்கு ஓட்டுப்போட்ட அதிமுக; திருப்பத்தூர் தேர்தல் களேபரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பவுன்ஸர்கள் பாதுகாப்பில் வந்த கவுன்சிலர்கள் - நாட்றம்பள்ளி
பவுன்ஸர்கள் பாதுகாப்பில் வந்த கவுன்சிலர்கள் - நாட்றம்பள்ளி

காவல்துறையினர் தடியடி நடத்திய பிறகே மோதல் கட்டுக்குள் வந்தது. சங்கீதா பாரியின் ஆதரவு கவுன்சிலர்கள், மாவட்டச் செயலாளர் தரப்பு கண்களில் படாமல் வெளியூர் ரிசார்ட்டுகளுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனர்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை தி.மு.க கைப்பற்றிய நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்கள் இன்று நடைபெற்றன. திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஆறு ஒன்றியத் தலைவர் பதவிகளையும் தி.மு.க-வே கைப்பற்றியிருக்கின்றன. ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக சங்கீதா பாரி, கந்திலி ஒன்றியத் தலைவராக திருமதி திருமுருகன், திருப்பத்தூர் ஒன்றியத் தலைவராக விஜியா, நாட்றம்பள்ளி ஒன்றியத் தலைவராக வெண்மதி, மாதனூர் ஒன்றியத் தலைவராக சுரேஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியத் தலைவராக சத்தியா சதீஷ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவராக சூரியகுமார், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராக பிரியதர்ஷினி ஞானவேலன் வெற்றிபெற்றிருக்கின்றனர். இருவருமே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்.

பவுன்ஸர்கள் பாதுகாப்பில் வந்த கவுன்சிலர்கள் -நாட்றம்பள்ளி
பவுன்ஸர்கள் பாதுகாப்பில் வந்த கவுன்சிலர்கள் -நாட்றம்பள்ளி

மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களுக்கு கவுன்சிலர்கள் வந்தவிதம்தான் பேசுபொருளாகியிருக்கிறது. கூவத்தூர் ஸ்டைலில் ரிசார்ட்டுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்கள் பவுன்ஸர்கள் பாதுகாப்பில் கார்களில் வந்து சேர்ந்தனர். நாட்றம்பள்ளி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்ற வெண்மதி தனது ஆதரவு கவுன்சிலர்களை பவுன்ஸர்கள் புடைசூழ கார்களில் பந்தாவாக அழைத்துவந்தார். சில இடங்களில், கவுன்சிலர்களை மறைமுகத் தேர்தலில் கலந்துகொள்ளாமல் தடுப்பதற்கான சதி வேலைகளும் நடைபெற்றன. குறிப்பாக, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய பதற்றம் நிலவுகிறது. ஆலங்காயத்தில் மொத்தம் 18 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். தி.மு.க-11, அ.தி.மு.க-4, பா.ம.க-2, சுயேச்சை-1. தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜி தனது இளைய மருமகள் காயத்ரி பிரபாகரனை ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக்குவதற்காக முயன்றார். மாவட்டச் செயலாளர் பக்கம் ஆறு கவுன்சிலர்கள் வந்தனர்.

தற்போது, ஆலங்காயம் ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சங்கீதா பாரியின் பக்கம் நான்கு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். சங்கீதா பாரி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், எம்.பி-யுமான கதிர் ஆனந்தின் ஆதரவாளர். ஆனாலும், மாவட்டச் செயலாளர் தேவராஜி நேற்று முன்தினம் பதவி ஏற்கவந்த சங்கீதா பாரியின் ஆதரவு கவுன்சிலர்கள் நான்கு பேரையும் தன் பக்கம் இழுக்கப் பார்த்தார். அந்த முயற்சி வீணானது. அப்போது ஆத்திரமடைந்த மாவட்டச் செயலாளர் தரப்பினர் வன்முறையில் இறங்கினர். இரு தரப்பும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்திய பிறகே மோதல் கட்டுக்குள் வந்தது. சங்கீதா பாரியின் ஆதரவு கவுன்சிலர்கள், மாவட்டச் செயலாளர் தரப்பு கண்களில் படாமல் வெளியூர் ரிசார்ட்டுகளுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாவட்டச் செயலாளர் தேவராஜி
மாவட்டச் செயலாளர் தேவராஜி

இதற்கிடையே, எதிரணி கவுன்சிலர்களை மிரட்டியதாகவும், பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவரைக் கத்திமுனையில் கடத்திச் சென்றதாகவும் மாவட்டச் செயலாளர் தேவராஜி தரப்புமீது காவல்துறையிலும் புகாரளிக்கப்பட்டது. வேட்டியை மடித்துக்கொண்டு, சட்டையைக் கிழித்துக்கொண்ட இந்த விவகாரம் திமுக-வின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் காதுக்குச் சென்றது. 20-ம் தேதி இரவு காட்பாடியிலிருக்கும் துரைமுருகன் வீட்டில் ஒன்றரை மணி நேரம் பஞ்சாயத்து நடைபெற்றது என்கிறார்கள். மாவட்டச் செயலாளர் தேவராஜியும், எதிரணியைச் சேர்ந்த ஆலங்காயம் ஒன்றியச் செயலாளர்கள் ஞானவேல், முனிவேல் ஆகியோரும் துரைமுருகன் முன்பு ஆஜராகி விளக்கம் கொடுத்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி ஆகியோரும் இருந்தனர். பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசமடையவில்லை என்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், தலைவர் தேர்தலையொட்டி எதிரணி கவுன்சிலர்களை ஆலங்காயத்துக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக மாவட்டச் செயலாளர் தேவராஜி தரப்பு 500-க்கும் மேற்பட்ட பவுன்ஸர்களை ‘ஆம்னி’ பேருந்துகளில் வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆலங்காயத்துக்குள் நுழையக்கூடிய இடங்களில் புதுப்புது முகங்களாகவும், வாட்ட சாட்டமான தோற்றத்துடனும் வெளியூர் நபர்கள் உலவிக்கொண்டிருந்தனர். இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சங்கீதா பாரியின் ஆதரவு கவுன்சிலர்கள் விடியற்காலை 4:30 மணிக்கெல்லாம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் சென்றுவிட்டனர். இது தெரியாமல், அவர்களை எதிர்பார்த்து மாவட்டச் செயலாளர் தரப்பினர் வெளியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். நீண்ட நேரத்துக்குப் பின்னரே தாங்கள் ஏமாற்றமடைந்திருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

தீக்குளிக்க முயன்ற தி.மு.க பிரமுகர்
தீக்குளிக்க முயன்ற தி.மு.க பிரமுகர்

அதேபோல், நான்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள், இரண்டு பா.ம.க கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர் ஒருவரும் பத்திரமாக வாக்களிக்க வந்து சேர்ந்தனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் நான்கு பேரும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணிக்குச் சொந்தமான ஏலகிரி ‘ஹில்ஸ்’ ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர் தரப்பிலிருந்த மருமகள் உட்பட ஆறு கவுன்சிலர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் 10 மணிக்குச் சென்றனர். 18 கவுன்சிலர்களும் வந்த நிலையில் வேட்புமனு தொடங்கி... மறைமுக வாக்களிப்பும் நடைபெற்றது. கதிர் ஆனந்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர் சங்கீதா பாரியை ஆதரித்து தி.மு.க-வின் நான்கு கவுன்சிலர்கள் வாக்களித்தனர். அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை கவுன்சிலர்களும் சங்கீதா பாரிக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டனர்.

இதனால், மாவட்டச் செயலாளர் தரப்பு கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர். கூட்ட அரங்குக்குள்ளேயே சத்தம் போட்டனர். இதையடுத்து, வாக்குச்சீட்டுகளை கிழிந்தெறிந்து அங்கேயே வீசிவிட்டு மாவட்டச் செயலாளர் தரப்பின் ஆறு கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். ஆறு பேரும் வாக்களிக்காத நிலையில், சங்கீதா பாரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த மாவட்டச் செயலாளர் தரப்பினர் அலுவலகத்துக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். `கதிர் ஆனந்த் ஒழிக’ என்ற கோஷத்தை தி.மு.க-வினரே எழுப்பியதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாவட்டச் செயலாளர் தேவராஜியின் மகன் பிரபாகரன், மருமகள் காயத்ரி மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். தொடர்ந்து கதிர் ஆனந்துக்கு எதிரான கோஷமும் வலுத்தது.

எம்.பி கதிர் ஆனந்த்
எம்.பி கதிர் ஆனந்த்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டினார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரைத் தடுத்து கைதுசெய்ய முயன்றனர். உடனே, அங்கு திரண்டிருந்த மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் மீட்க முயன்றதால் பதற்றம் மேலும் கூடியது.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டச் செயலாளர் தேவராஜியின் மகனும், தி.மு.க பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளருமான பிரபாகரன், ``தி.மு.க கவுன்சிலர்கள் நான்கு பேர் அ.தி.மு.க-வுடன் கூட்டுச் சேர்ந்து ஒன்றியக்குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கும் நடக்காதது, எங்கள் ஊரில் நடந்திருக்கிறது. இத்தனை பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், எம்.பி கதிர் ஆனந்த்தான். அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியுடன் கதிர் ஆனந்த் கைகோத்து நியாயமற்ற தேர்தலை நடத்தியிருக்கிறார்’’ என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். ஆலங்காயத்தில் வன்முறை நிகழக்கூடிய அளவுக்குப் பதற்றம் நீடிப்பதால், அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. வஜ்ரா வாகனத்துடன் போலீஸாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்ற சங்கீதா பாரி தரப்பினரிடம் பேசினோம். ``இந்த விவகாரம் தலைமையின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. மருமகளை ஒன்றியத் தலைவராக்குவதற்காக மாவட்டச் செயலாளர் செய்த பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நிச்சயமாக அவரின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டப்படும். ஆலங்காயம் ஒன்றியத்தில் நாங்கள் வெற்றிபெற்றதை மாவட்டம் முழுவதும் தி.மு.க-வினர் கொண்டாடுகிறார்கள். தேவையில்லாமல் பொதுச்செயலாளர் மகனை வம்புக்கு இழுக்கிறார்கள். இதற்கான விளைவையும் மாவட்டச் செயலாளர் தேவராஜி சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு