Published:Updated:

`வீட்டை விற்பேன்’ செல்லூர் ராஜு; `வாழும் வள்ளல்’ உதயகுமார் - மதுரையைக் கதிகலக்கும் போஸ்டர்கள்

சுவரொட்டி
சுவரொட்டி

அமைச்சர் செல்லூர் ராஜு ஆதரவாளர்களும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆதரவாளர்களும் விதம்விதமான போஸ்டர்களை ஒட்டி மதுரையைக் கதிகலக்கி வருகின்றனர்.

`கொரோனா நிவாரண உதவிகள் 1.5 லட்சம் குடும்பக்களுக்குக் கொடுத்த பின்பும், தேவைப்பட்டால், `என் வீட்டை விற்றுகூட கொடுத்துக்கொண்டே இருப்பேன்' என்று சொல்லும் அன்பு அண்ணன் செல்லூரார் வழியில் நாமும் செய்வோம் உதவிகளை....' என்று, அ.தி.மு.க இளைஞரணி சார்பில் மதுரை மாநகர் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரை அரசியலில் போஸ்டருக்கும் மிகப்பெரிய பங்கு இருப்பதைப் பல்வேறு நிகழ்வுகளில் பார்த்திருப்போம். அந்த வகையில் செல்லூர் ராஜு ஆதரவாளர்களின் இந்த போஸ்டர் விவாதப் பொருளாகியுள்ளது.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
என்.ஜி.மணிகண்டன்

அ.தி.மு.க-வில் முக்கியப் பதவிகளில் இருந்துகொண்டு செலவு செய்யாமல் இருக்கும் மற்ற நிர்வாகிகள் சிலரை குத்திக் காட்டுவதுபோலவும் எதிர்க்கட்சியினரை கிண்டல் அடிப்பது போலவும் இந்த போஸ்டர் வாசகங்கள் இருப்பதாக மதுரை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தினமும் ஏதாவதொரு பகுதியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் செல்லூர் ராஜுவை அவருடைய ஆதரவாளர்கள் மிகையாகப் புகழ்கிறார்களா அல்லது வஞ்சப் புகழ்ச்சி செய்கிறார்களா என்ற குழப்பத்திலும் பலர் இருக்கிறார்கள்.

செல்லூர் ராஜு  போஸ்டர்
செல்லூர் ராஜு போஸ்டர்

சாலையில் செல்வோரைத் திகைக்க வைக்கும் இந்த போஸ்டர் பற்றி செல்லூர் ராஜுவிடமே கேட்டோம், ''கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து கஷ்டப்படும் பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகிறோம்.

இதைக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டும் என்பதற்காக நிர்வாகிகளிடம் இப்படிப் பேசினேன். `மக்களால் நான் மக்களுக்காக நான்’ என்று வாழ்ந்த அம்மா வழியில் வந்த நான், என்னால் முடிந்தவரையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறேன். இன்னும் தேவையென்றால் மக்களுக்காக வீட்டை விற்றாவது உதவிகள் வழங்குவேன் என்று பேசினேன்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

அது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஒரு மோட்டிவேஷனை உருவாக்கியுள்ளது. அந்த அடிப்படையில் இப்படி போஸ்டர் போட்டுள்ளனர். எது எப்படியோ கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்கான நிவாரண உதவிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

`வீட்டை விற்பேன்’ செல்லூர் ராஜு; `வாழும் வள்ளல்’ உதயகுமார் - மதுரையைக் கதிகலக்கும் போஸ்டர்கள்

இதனிடையே மதுரையில் இன்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆதரவாளர்கள் தரப்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. `24 மணிநேரமும் யோசிப்பார்.. தமிழக மக்களை மட்டும்தான் நேசிப்பார். பல லட்சம் ஏழைக் குடும்பங்களுக்காக தினமும் பேரிடராய் - உறங்காமல் உழைத்துக்கொண்டிருப்பவர் வாழும் வள்ளல் ஆர்.பி உதயகுமார் அவர்களுக்கு நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு