Published:Updated:

காங்கிரஸ் இல்லாமல் மம்தா தலைமையில் மூன்றாவது அணி; பா.ஜ.க-வுக்கு சாதகமாகுமா?

‘பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ என்று பேசிவந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சித் தோல்வியடைந்துவிட்டதால், ஆட்சியிலிருந்து பா.ஜ.க-வை அகற்றும் பொறுப்பை இந்திய மக்கள் தமக்கு அளித்துள்ளதாக தற்போது கூறுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில், அந்தத் தேர்தலை குறித்துவைத்து அரசியல் கட்சிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்று மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி மத்தியில் நடைபெற்றுவருகிறது. மூன்றாவது முறையும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க முனைப்புக் காட்டுகிறது. இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் பல்வேறு திட்டங்களை வகுத்துவருகின்றன.

சோனியா, மம்தா
சோனியா, மம்தா

இந்தியாவை நீண்டகாலம் ஆட்சி செய்த கட்சியாக மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரிய எதிர்க் கட்சியாகவும் காங்கிரஸ் கட்சி விளங்கிவருகிறது. அதே நேரத்தில், கட்சிக்கு நிரந்தர தலைவர் ஒருவரை நியமிக்க முடியாத நிலையில் இருப்பது காங்கிரஸின் மிகப்பெரிய பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வலிமையான அகில இந்தியத் தலைமை இல்லாததும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடித்த மம்தா பானர்ஜி, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டுவருகிறார். கடந்த மே மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, மேற்கு வங்க சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கூறிவந்த நிலையில், பா.ஜ.க-வை மம்தா தோற்கடித்தார். அதே நேரத்தில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவினார்.

மோடி
மோடி

ஆனாலும், தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான அணியைக் கட்டமைப்பதில் தீவிரமாக இறங்கினார். கடந்த ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் டெல்லியில் முகாமிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்தித்தார். அவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி, பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்தித்ததன் விளைவு எதிர் காலத்தில் தெரியும். பா.ஜ.க-வைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தனியாக என்னால் எதுவும் செய்ய முடியாது. அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, ‘கூட்டணிக்குத் தலைமை ஏற்பீர்களா?’ என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தபோது, `பா.ஜ.க-வைத் தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் ஒரு சாதாரணத் தொண்டர் நான்’ என்று மம்தா பதில் சொன்னார். அடுத்த சில வாரங்களில் மம்தாவின் அணுகுமுறையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘ஜெகோ பங்களா’-வில், ‘பிரதமர் மோடிக்கு மாற்று சக்தியாக ராகுலால் இருக்க முடியாது. மோடிக்கு மாற்றாக மம்தா வர வேண்டும் என தேசம் விரும்புகிறது’ என்று கருத்து வெளியானது. சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்தித்து பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய மம்தா பானர்ஜி, தன்னை முன்னிறுத்திக்கொள்வதற்காக பாதை விலகிச் செல்கிறார் என்பதை அந்தச் செய்தி உணர்த்தியது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பா.ஜ.க எதிர்ப்புக் கூட்டணி தொடர்பான தனது நிலைப்பாட்டை, தற்போது வெளிப்படையாகச் சொல்லிவிட்டார் மம்தா பானர்ஜி. கடந்த மே மாதம் நந்திகிராம் தொகுதியில் தோல்வியைத் தழுவிய மம்தா பானர்ஜி, தற்போது பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலை 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இதன் மூலமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் வரை மேற்கு வங்க முதல்வராக மம்தா இருப்பார். இந்த நிலையில்தான், மம்தாவின் செயல்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்றுவருகின்றன.

`சில நாள்களில் தேர்தல்; இந்தியக் கட்சிகளின் ஸ்டைலில் பிரதமரை மாற்றிய ஜப்பான்' - திட்டம் எடுபடுமா?

எல்லாம் சரிதான். ஆனால், பா.ஜ.க-வை வலிமையுடன் எதிர்க்க வேண்டுமென்றால், தேசிய அளவில் பெரிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் தலைமையில் கட்சிகளை ஒருங்கிணைப்பதுதான் சரியானதாக இருக்கும் என்பது பெரும்பாலோரின் பார்வை. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பா.ஜ.க எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றுதிரட்டுவது என்பதே பெரும் சவாலான காரியம். அப்படியிருக்கும்போது, ஒரே ஒரு மாநிலத்தில் செல்வாக்குபெற்ற கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ள எந்தக் கட்சி முன்வரும் என்பது மிகப்பெரிய கேள்வி. உதாரணமாக, மம்தா பானர்ஜியுடன் அரசியல் ரீதியாக தி.மு.க நெருக்கமாக இருந்துவருகிறது. ஆனால், காங்கிரஸை விட்டு விலகி மம்தாவுக்கு தி.மு.க ஆதரவு கொடுக்கும் என்பது நடக்குமா என்றால் சந்தேகம்தான்.

மம்தா
மம்தா

ஆனால், தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுப்போம் என்று சொல்ல ஆரம்பித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், அந்த நம்பிக்கையில் மோடிக்கு மாற்று மம்தா என்கிறது. ``திரிபுரா, கோவா போன்ற சிறிய மாநிலங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க-வை வீழ்த்துவோம். உ.பி போன்ற பெரிய மாநிலங்களுக்கு பிறகு செல்வோம்” என்று திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரான டெரிக் ஓ பிரெய்ன் கூறுகிறார். அந்த நினைப்பில்தான், இந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டில் மோடிக்கு மாற்று மம்தா என்று எழுதுகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் 2011-ல் ஆட்சியைப் பிடித்தவுடன், இடதுசாரிகளையும் காங்கிரஸ் கட்சியையும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கியதன் மூலமாக, அங்கு மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுப்பதற்கு வழிவகுத்துக்கொடுத்தார் மம்தா பானர்ஜி. அவர் செய்த மிகப்பெரிய அரசியல் பிழையாக இதை அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். தற்போதும் அதுபோன்ற நிலைபாட்டை மம்தா எடுத்திருக்கிறார். பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்றால், காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சிகளை ஒன்றுசேர்க்கும் வேலையில் மம்தா தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். மாறாக, மோடிக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்துவது என்று மம்தா செல்வாரேயானால், அது பா.ஜ.க-வுக்கு சாதகமாகவே முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு