Published:Updated:

`இருவரிடமும் பணம் வாங்கினாரா உறுப்பினர்?' பிரச்னைக்கு பயந்து ரோட்டில் எறியப்பட்ட பணம்; பகீர் பின்னணி!

“உள்ளாட்சித் தேர்தல்ல ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கே இவ்ளோ பணம் கொடுப்பாங்களா ? அப்படின்னா ஊராட்சி ஒன்றிய சேர்மேன், மாவட்ட சேர்மேனுக்கெல்லாம் எவ்ளோ கொடுப்பாங்களோ” என்று பெருமூச்சு விட்டபடி நகர்ந்தனர்.

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஊராட்சித் துணைத் தலைவர் பதவிகளைப் பெற குதிரை பேரங்கள் படுஜோராக நடைபெற்று வருகின்றன. வெற்றிபெற்ற பசையுள்ள ஊராட்சி உறுப்பினர்கள் துணைத் தலைவர் எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்று கரண்ஸி கட்டுகளுடன் களமிறங்கியிருக்கின்றனர். வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து மறைமுகத் தேர்தல் நடக்கும்வரை அவர்களை குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் கூவத்தூர் பாணியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் - வீதியில் வீசப்பட்ட பணம்
உள்ளாட்சி தேர்தல் - வீதியில் வீசப்பட்ட பணம்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னாவரம் ஊராட்சியில் தேர்தல் நடைபெறுகிறது. 9 வார்டுகளைக் கொண்ட இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் பதவியைப் பெறுவதில் இரண்டு உறுப்பினர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருவரும் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை வளைத்து வருகின்றனர். அப்போது ஒரு வாக்காளர் (ஊராட்சி உறுப்பினர்) இரு தரப்பிடமும் பணத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதில் கடுப்பான முதலில் பணம் கொடுத்த தரப்பு ‘இரண்டு இடத்திலும் கை நீட்டி பணம் வாங்கிட்டீங்களே ? யாருக்கு ஓட்டு போடுவீங்க? எனக்கு ஓட்டு போடலைன்னா அவ்ளோதான்” என்று பணம் வாங்கியவரை மிரட்டியிருக்கிறது.

அதில் பயந்துபோன அந்த வாக்காளர் (ஊராட்சி உறுப்பினர்) இரண்டாம் நபரிடம் வாங்கிய பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறார். ஆனால் பணம் கொடுத்தவரோ ”அதெல்லாம் வாங்க முடியாது. கொடுத்தது கொடுத்ததுதான். பணத்தையெல்லாம் திரும்ப வாங்க முடியாது. எனக்குத்தான் நீங்க ஓட்டு போடனும்னு” சொல்விட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். அதனால் என்ன செய்வதென்று திறுதிறுவென விழித்த அந்த உறுப்பினர் பணத்தை அந்த வீட்டு வாசலிலேயே போட்டுவிட்டுத் திரும்பிவிட்டார்.

உள்ளாட்சி உய்யலாலா!

இந்த கூத்துகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், ரோட்டில் கிடந்த அந்த 500 ரூபாய் நோட்டுக்களை பார்த்து பெருமூச்சி விட்டபடி, “உள்ளாட்சித் தேர்தல்ல ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கே இவ்ளோ பணம் கொடுப்பாங்களா ? அப்படின்னா ஊராட்சி ஒன்றிய சேர்மேன், மாவட்ட சேர்மேனுக்கெல்லாம் எவ்ளோ கொடுப்பாங்களோ” என்று பெருமூச்சு விட்டபடி நகர்ந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு