Published:Updated:

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீதான முதல்வரின் பாசம்; கடுப்பில் சீனியர் அமைச்சர்கள்!

ஜி.எஸ்.டி கூட்டத்துக்குத் தாமதமாகவே எங்களை அழைத்தார்கள். அதனால் ஏற்கெனவே நான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டிய நிலை வந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தொடர் சர்சையில் சிக்கிய பழனிவேல் தியாகராஜனை மாற்ற வேண்டும் என்று தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் முதல்வரிடம் வைத்த கோரிக்கையை முதல்வர் தரப்பு நிராகரித்துவிட்டதால், அப்செட்டில் இருக்கிறார்கள் சீனியர்கள் என்கிற புதிய தகவல் தி.மு.க வட்டாரத்தில் வலம்வருகிறது. தமிழக நிதியமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிவருகிறார். சமீபத்தில் மத்திய அரசு நடத்திய ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் மதுரையில் நடந்த நிகழ்ச்சிகளில் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டதை பாஜக தரப்பு கடுமையாக விமர்ச்சித்தது. இதற்கு பதில் அளித்த பழனிவேல் தியாகராஜன் ``ஜி.எஸ்.டி கூட்டத்துக்கு தாமதமாகவே எங்களை அழைத்தார்கள். அதனால் ஏற்கெனவே நான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டிய நிலை வந்தது” என்று விளக்கம் அளித்தார். ஆனால், தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துவந்தது. மற்றொருபுறம், தி,மு.க-வின் மூத்த நிர்வாகி டி.கே.எஸ்.இளங்கோவனும் ``அரசியலில் பொறுமை அவசியம். அதைப் பழனிவேல் தியாகராஜன் கற்றுக்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தால் சிறப்பாக இருக்கும்” என்று பேட்டியளித்தார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா?!
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

இதற்கு பதிலடியாக பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டார். இதற்குக் கட்சிக்குள் கடும் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே பெட்ரோல் விலைக்குறைப்பின்போது பழனிவேல் தியாகராஜன் சொன்ன கருத்து, பத்திரிகையாளர்களிடம் அவர் பேசிய சில கருத்துகள் என தொடர்ந்து இவரது பேச்சு விமர்சனத்தை உள்ளாக்கிவந்தன. மற்றொருபுறம், நிதித்துறையில் பழனிவேல் தியாகராஜன் கடும் கட்டுபாடுகளோடு நடந்துவருகிறார். இதனால் பல கோப்புகளில் கையெழுத்திடும் முன்பாக அது குறித்த விவரங்களை முழுமையாகக் கேட்பதால் பல துறைகளுக்குத் தேவையான நிதிகள் இதுவரை செல்லவில்லை.

மிஸ்டர் கழுகு: “சீனியர்களை மதிக்கத் தெரியாதா?”

கமிஷன்களுக்கெல்லாம் கணக்கு எழுத முடியாது என்று ஓப்பனாகவே ஒரு முறை சீறியிருக்கிறார். இதனால் தற்போது ஆட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலர் இவரை வேறு துறைக்கு மாற்ற முடியுமா என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில், டி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்தைவைத்தே அவருக்கு செக் வைக்க சில சீனியர் அமைச்சர்கள் திட்டமிட்டனர். அவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் ``நிதித்துறையிலிருந்து அவரை விடுவித்து தொழில்துறைக்குக் கொண்டு சென்றால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் எளிதாகத் தொடர்புகொள்ள வாய்ப்பாக இருக்கும்” என்று தூபம் போட்டுள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் முதல்வரும் ஒப்புக்கொண்டாலும், பிறகு அவரது வீட்டில் நடந்த ஆலோசனையில் நிதித்துறையை ``இவரைப் போன்று ஒருவர் இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

அவரை தேவையில்லாமல் எங்கும் பேச வேண்டாம் என்று மட்டும் சொல்லுங்கள். துறையை மாற்ற வேண்டாம்” என்று தடா போட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் முதல்வருடனும் நெருக்கமானவர் பழனிவேல் தியாகராஜன் என்பதால், அவரும் முதல்வரைச் சந்தித்து சில விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். அப்போது அமைச்சர்கள் சிலரது நிதி மேலாண்மை குறித்த தகவல்களையும் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு ஷாக்கான முதல்வர் ``நீங்கள் உங்கள் வேலையைச் சரியாகப் பாருங்கள். யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்” என்று தைரியம் சொல்லி அனுப்பியிருக்கிறார்.இதனால் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த சீனியர்கள் இப்போது `கப்சிப்' என்று அமைதியாகிவிட்டார்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு