Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: `இட ஒதுக்கீட்டில் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்!’ – புதுச்சேரி அதிமுக!

உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அ.தி.மு.க தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குளறுபடிகளைச் சரிசெய்யும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். அதையடுத்து, தேர்தலை நடத்த நான்கு மாதங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ். தேர்தல் எப்போது நடக்கும் என்ற சூழலில் புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலில் இருக்கின்றன. இந்த நிலையில் புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

``புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை காலத்தோடு நடத்துவதும், உள்ளாட்சித் தேர்தல் சட்டப்படி, நகரமன்ற, கொம்யூன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் நகரமன்ற, கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவர்கள், சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து, உரிய இட ஒதுக்கீடு அளித்து தேர்தல் நடத்தவேண்டியது மாநில தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். அந்தக் கடமையிலிருந்து மாநில தேர்தல் ஆணையம் தவறியதால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவதும், அதனால் மாநில அரசுக்குக் களங்கம் ஏற்படுவதும், தேர்தல் நடத்தப்படுவது தள்ளிப்போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அட்டவணை வெளியிட்டதில் சுழற்சி முறையில் குழப்பம், இட ஒதுக்கீட்டில் குழப்பம், நகராட்சி வார்டுகளை குறைத்தல், அதிகரித்தல் போன்ற பல்வேறு குளறுபடிகளைத் திட்டமிட்டுத் தன்னிச்சையாகச் செய்திருக்கிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

இதற்கு மேலும், மாநிலத் தேர்தல் ஆணையம் நேர்வழியில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் சட்ட விதிகளின்படி, தேர்தல் நடத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கீழ்க்காணும் கருத்துகளை ஏற்று தேர்தலை நேர்மையாக நடத்திட வழி காண வேண்டும். கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட வார்டு மறுசீரமைப்பின் அடிப்படையில் தேர்தலை நடத்துவது தவறான ஒன்றாகும். நகராட்சியின் ஒரு வார்டு இரண்டு, மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் விதத்தில் பிரிக்கப்பட்டிருப்பதால் நிர்வாகரீதியில் குழப்பத்தை ஏற்படுத்தும்விதத்தில், வார்டு மறுசீரமைப்பு தவறாக நடத்தப்பட்டிருக்கிறது. குழப்பம் நிறைந்த விதத்தில் நடத்தப்பட்ட வார்டு மறுசீரமைப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

புதுச்சேரி: `அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையம்!’-அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்
தேர்தல்
தேர்தல்

2006-ம் ஆண்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடத்தப்படுமேயானால், அப்போதிருந்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், அதிகரித்தல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து, 2006-ல் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் இருந்த வார்டுகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யக் கூடாது. புதுச்சேரி நகரமன்றங்கள் சட்டம் 1973 பிரிவு எண்.9-ல் இட ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் உட்பிரிவு 5-ல் நகரமன்ற உறுப்பினர், நகர மன்றத் தலைவர், கொம்யூன் பஞ்சாயத்து உறுப்பினர், கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 2006-ல் புதுச்சேரி நகராட்சிப் பதவி பெண்களுக்கும், உழவர்கரை நகராட்சிப் பதவி ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இத்தேர்தலில், சுழற்சி முறையில் புதுச்சேரி நகராட்சி ஆண்களுக்கும், உழவர்கரை நகராட்சி பெண்களுக்கும், காரைக்கால் நகராட்சி, ஏனம் மற்றும் மாஹே நகராட்சித் தலைவர் பதவிகளுக்கும் சுழற்சி முறையில் ஒதுக்க வேண்டும். அதே போன்று புதுச்சேரி மாநிலத்திலுள்ள பத்து கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் பதவிகளும் சுழற்சி முறையில் ஒதுக்கி இந்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 243-D, பஞ்சாயத்து அமைப்புகளில் இட ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் பிரிவின்படி பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர், மகளிர் ஆகியோருக்குக் கட்டாயம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். 243-D, உட்பிரிவு 6, சம்பந்தப்பட்ட மாநிலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைத் தடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973 பிரிவு 9 (8-ல்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை எத்தனை, எந்தெந்த பகுதிகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை அரசு எடுக்காததால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் புள்ளிவிவரங்கள் அரசின் கையில் இல்லை. இருப்பினும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை அ.தி.மு.க வலியுறுத்துகிறது. இது போன்ற சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசு ஒரு தெளிவான முடிவு உடனடியாக எடுக்க வேண்டும். அதேபோல் தி.மு.க ஆட்சி நடத்தும் தமிழகத்திலும் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.

புதுச்சேரி: `அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையம்!’-அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்

போதிய கணக்கெடுப்பு நடத்தாமல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பட்சத்தில், புதுச்சேரி மாநிலத்திலுள்ள சுல்தான் பேட்டை, பெரியபள்ளி, கதீட்ரல் மற்றும் காரைக்கால் மாநிலத்திலுள்ள காதர்சுல்தான், மொய்தீன்பள்ளி, அம்மையார் கோவில், ஓடுதுறை போன்ற இடங்களில் அதிகம் வசிக்கும் முஸ்லிம், கிறித்தவர்கள் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சிறுபான்மை மக்களுக்கும் போதிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு