“சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக சி.பி.ஐ. ரெய்டில் மீண்டும் சிக்கியது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பு. சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. பழிவாங்கும் நோக்கில் வழக்கைப் பதிவு செய்துள்ளதாகப் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ப.சி.தரப்பு.

மத்திய உள்துறை அமைச்சராக 2011-ம் ஆண்டு ப.சிதம்பரம் பதவியிலிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தில் மின்சார உற்பத்திக்கான தொழிற்சாலை கட்டுமானப் பணிகளுக்கு சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களுக்கு விசா வழங்க 50 லட்சம் லஞ்சம் வாங்கினார், என 11 ஆண்டுகள் கழித்து ஒரு வழக்கை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது. பிரபல இந்திய நிறுவனமான வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான பவர்ப்ளாண்ட் கட்டுமானத்திற்கு 263 சீனர்களை அழைத்துவர திட்டமிட்டது. சீனர்களை அழைத்துவரும் பணியை இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய விகாஸ் மேகாரியா என்பவர் கவனித்திருக்கிறார். இவர்தான் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டராக உள்ள பாஸ்கர ராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மூலம் சீனத் தொழிலாளர்களுக்கு விசா வழங்க 50 லட்சம் பணம் கொடுத்துள்ளார்” என்று சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனையும் கைது செய்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஏற்கெனவே ஆறுமுறை ப.சிதரம்பரத்தின் வீடு ரெய்டுக்கு உள்ளாகியுள்ளது. ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு, ஐ.என்.ஐ. மீடியா வழக்கு உள்ளிட்ட வழக்குகள் ஏற்கெனவே சிதம்பரம் தரப்பின் மீது உள்ளது. இந்நிலையில் புதிய வழக்காக இந்த வழக்கை இப்போது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாஸ்கர ராமனிடம் வாக்குமூலம் பெற்று கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் சி.பி.ஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் சிதம்பரத்தின் பெயர் இடம்பெறாததால், அவருக்கு இந்த வழக்கில் எந்த சிக்கலும் வராது என்கிறார்கள். இந்நிலையில் சி.பி.ஐ. கையில் எடுத்துள்ள இந்த வழக்கில் பல குழறுபடிகள் நடந்துள்ளது என்று சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். சி.பி.ஐ.யின் முதல் தகவல்அறிக்கையையே இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அதாவது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையில் “பஞ்சாப் நிறுவனம், மும்பை நிறுவனம் ஒன்றிற்கு செக் மூலமாக ரூ.50 லட்சம் வழங்கியது. மும்பை நிறுவனம் அதை ரொக்கமாக பாஸ்கர ராமனிடம் வழங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ரூ.50 லட்சம் செக்கில் வாங்கியிருந்தால் அதற்கு வருமானவரித்துறையிடம் கணக்கு செலுத்தியிருக்கும் அந்த நிறுவனம். ஆனால் அப்படி நடக்கவில்லை. ரொக்கமாக பாஸ்கரினிடம் பணத்தை அளித்த மும்பை நிறுவன அதிகாரி இப்போது உயிருடன் இல்லை. 2018-ம் ஆண்டே இவர் இறந்துவிட்டார் என்கின்றனர். ஆனால், இந்த வழக்கை 2022 மே மாதம்தான் சி.பி.ஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, உயிருடன் இல்லாதவரிடம் எப்படி விசாரணை நடத்த முடியும் என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் சிதம்பரம் தரப்பினர். பாஸ்கர் ராமன் ரூ. 50 லட்சத்தை கார்த்தி சிதம்பரத்திடம் கொடுத்தாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. பாஸ்கர் ராமன் சிதம்பரத்தைச் சந்தித்த விவரங்கள் எதையும் குறிப்பிடவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் சி.பி.ஐ.யின் FIR -ல் அன்றைக்கு அமைச்சராக இருந்த சிதம்பரமோ, அவரது துறையின் செயலாளர்ளோ சம்பந்தப்பட்ட சீனத் தொழிலாளர்களின் விசா குறித்த கோப்பை பார்த்தாகவோ, அதில் கையெழுத்திட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை. உள்துறை அமைச்சருக்குத் தெரிந்து நடந்திருக்கும் என்கிற யூகத்தினை மட்டுமே சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. லஞ்சம் வாங்குபவர்கள் யாரும் செக்காக வாங்கமாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் செக்காக ஒருநிறுவனம் வாங்கி அதை பணமாக மாற்றி லஞ்சமாக கொடுத்துள்ளது என்பதே வேடிக்கையாக இருக்கிறது. இந்த வழக்கில் பணம் கொடுத்த நிறுவனத்தின் அதிகாரியே உயிருடன் இல்லாத நிலையில் இந்த தகவல்களை யாரிடமிருந்து சி.பி.ஐ-பெற்றிருக்கும்”என்று சிதம்பரம் தரப்பினர் நக்கலாகச் சொல்கிறார்கள். மேலும் இத்தனை குளறுபடிகள் உள்ள சி.பி.ஐ. யின் முதல் தகவல் அறிக்கையை வைத்தே சி.பி.ஐ. பழிவாங்கும் நோக்கில் இறங்கியுள்ளது என்பதை நீதிமன்றத்திலும் முறையிட உள்ளது சிதம்பரம் தரப்பு.

“சிதம்பரத்தையும் அவரின் மகனையும் பழிவாங்கும் நோக்கத்தில் மே மாதம் 14-ம் தேதி அன்றுதான் இந்த வழக்கிற்கான எஃப்.ஐ.ஆர் சி.பி.ஐ-யால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் கழித்து ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யும் போது அதில் கவனத்தில் கொள்ளவேண்டிய பல விசயங்களை சி.பி.ஐ. தரப்பு கோட்டைவிட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒரு புனைவு கதையை உருவாக்க முனைந்திருக்கிறார்கள். அதில் அவர்களே இப்போது சிக்குண்டுள்ளார்கள்” என்கிறார்கள் சிதம்பரம் தரப்பினர்.