Published:Updated:

கே.சி.வீரமணி: கவனிக்கப்படாத சொத்துகள்; அதிகாரிகளிடம் விசாரணையா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முன்னாள் அமைச்சர்  கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

இந்த ரெய்டுக்கு முன்பே, 2019-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளால் ஒரு சோதனை நடத்தப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க ஆட்சியில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தாக வந்த புகார்களின் அடிப்படையில், கடந்த 16-ம் தேதியன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். கே.சி.வீரமணி தொடர்புடைய 35 இடங்களில் (சென்னை, பெங்களூரு) 34 லட்ச ரூபாய் பணம், 9 சொகுசு கார்கள், ஐந்து கம்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், 623 சவரன் தங்க நகை, 47 கிராம் வைர நகைகள், ஏழு கிலோ வெள்ளி நகைகள் இவற்றுடன் நிறைய வங்கி பாஸ் புத்தகங்கள், சொத்து டாக்குமென்ட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வீரமணி
ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வீரமணி
`பள்ளி பருவத்திலேயே பென்ஸ்; 40 ஆண்டுகள் பழைமையான ரோல்ஸ் ராய்ஸ்!’ - ரெய்டு குறித்து கே.சி.வீரமணி

இந்த ரெய்டுக்கு முன்பே, 2019-ம் வருடம், பிப்ரவரி மாதத்தில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளால் ஒரு சோதனை நடந்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் ஒரு பிரதான இடம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில், பல கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமான முறையில் கைமாறியதாக வந்த ரகசியத் தகவலையடுத்து, சுமார் 32 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கே.சி. வீரமணி தொடர்புடைய கல்லூரி, கல்யாண மண்டபம், ஏலகிரி ஹில்ஸ், அவரின் உறவினர்கள், நண்பர்கள், தொழில்முறை பார்ட்னர்களான ராம ஆஞ்சநேயலு, பிரம்மானந்த தண்டா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான், தற்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். செப்டம்பர் 16-ம் தேதியன்று நடந்த ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, அதன் விவரங்களை வருமான வரித்துறையினருக்கும் தெரிவிக்கவிருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க பிரமுகர்கள் சிலர், "கே.சி.வீரமணி வீட்டு வளாகத்திலிருந்து 511 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அவரது கல்லூரி ஏரியாவில் 1,000 யூனிட் மணலுக்கு மேல் கொட்டிக்கிடந்ததை ஏனோ லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோட்டைவிட்டுவிட்டனர். கே.சி.வீரமணி 2011 முதல் வெவ்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தார். அதையெல்லாம் ஏனோ தவிர்த்து, 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சேர்த்த சொத்துகளை மட்டும் கணக்கில் எடுத்திருக்கிறார்கள். கே.சி.வீரமணியின கூட்டாளிகளான ராமஆஞ்சநேயலு, பிரம்மானந்த தண்டா ஆகியோரின் வீடுகளுக்கு ரெய்டு தொடங்கியவுடனேயே போகவில்லை. பிறகு, அங்குமிங்கும் விசாரித்து முகவரியைச் சேகரித்துக்கொண்டு போக சில மணிநேரமாகிவிட்டது. அதற்குள் அந்த இருவரும் ரெய்டு விஷயத்தைத் தெரிந்துகொண்டு உஷாராகிவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை வருவதற்குள் அவர்கள் வீடுகளிலிருந்து சில முக்கிய டாக்குமென்ட்டுகள், விலையுயர்ந்த பொருள்கள் பக்கத்து மாநிலத்துக்குச் சென்றுவிட்டதாகக் கேள்விப்படுகிறோம்" என்றனர்.

கே.சி வீரமணி
கே.சி வீரமணி

இதற்கிடையே, கே.சி. வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட சில அரசு அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலர், "கே.சி.வீரமணி தொடர்புடைய ஒசூர் ஹோட்டல் உள்ள இடம், சிட்கோவுக்குச் சொந்தமானதாகத் தெரியவருகிறது. இந்த நிலத்தை வருடத்துக்கு ஒரு ரூபாய் வாடகை என்கிற வகையில் வீரமணி தரப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டதாக அறிந்தோம். இது குறித்து விசாரித்துவருகிறோம். அதேபோல, ஹோட்டல் கட்டுவதற்கு முறையான அரசுத் துறைகளின் அனுமதி வாங்கப்பட்டதா என்றும் விசாரணை நடந்துவருகிறது. குடியாத்தம் அருகே ஆர்.எஸ்.கல்வி அறக்கட்டளை பெயரில் விவசாயக் கல்லூரி கட்டும் முன்பு, சிறு, குறு தொழில் (எம்.எஸ்.எம்.இ) முனைவோருக்காகத் தரப்படும் வங்கிக்கடன் 15 கோடியை வாங்கியிருக்கிறார்கள். ``இந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு அந்த அறக்கட்டளைக்கு தகுதி இருக்கிறதா... இதுகுறித்து விசாரித்தீர்களா?" என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தனி விசாரணை நடக்கிறது. அந்தக் கல்லூரி கட்டுவதற்கன இடத்தை பழனி என்பவர் பெயரில் முதலில் வாங்கியிருக்கிறார்கள். அதை வாங்கும் அளவுக்கு பழனிக்கு வருமானப் பின்புலம் இருக்கிறதா என்பதை விசாரிக்கிறோம். 'இந்த இடத்தை வாங்கும்போது, பத்திரப்பதிவுத்துறையில் குறைவான தொகையை கணக்கில் காட்டி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகப் புகார் வந்திருக்கிறதே... அது உண்மையா?' என்று பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கே.சி.வீரமணி தொடர்புடைய ஒசூர் மற்றும் ஏலகிரியில் உள்ள ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக், அலங்காரப் பொருள்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதியானவை. ஹோட்டல்கள் கட்டப்பட்ட காலகட்டத்தில் அடிக்கடி கே.சி.வீரமணி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போயிருக்கிறார். அவர் எந்தெந்த நாடுகளுக்குப் போனார், என்ன செய்தார் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் பார்வையும் பதிந்திருப்பதால், வீரமணிக்குச் சிக்கல்தான். எங்களிடம் சிக்கியிருக்கும் ஆவணங்ளைவைத்து, வீரமணியின் சொத்துகளை மறு மதிப்பீடு செய்துவருகிறோம். அவர் தரப்பு தவறான வழியில் சொத்து சேர்க்க உதவிய அரசுத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை இருக்கும்" என்றனர் அந்த அதிகாரிகள்.

கே.சி.வீரமணி சொன்ன ரோல்ஸ் ராய்ஸ் ஏழைக் கதை! | The Imperfect Show

ஹில்ஸ் ஹோட்டலுக்கு அருகில் வி.பி.ஆர் ஷில்ஸ் என்கிற கூட்டு நிறுவனம் பெயரில் 9 ஏக்கர் 32 சென்ட் இடம் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த இடம், வீட்டு மனை உபயோகம் என்கிற பேனரில் இருந்திருக்கிறது. அதை விவசாய நிலமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், அரசுக்கு வரவேண்டிய தொகையில் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது என்கிறார்கள். இந்தத் தகவல்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்துவருகிறார்களாம். வீரமணி மீது நடவடிக்கை கடுமையாக்கப்பட்டால், அவரது அபார வளர்ச்சிக்கு உதவிய அதிகாரிகளுக்கும் சிக்கல்தான் என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு