Published:Updated:

பிரதமரைப் புறக்கணித்த கே.சி.ஆர்! வரவேற்ற ஸ்டாலின்... மோடி ரியாக்‌ஷன் எப்படி?

ஸ்டாலின் - மோடி

தி.மு.க-வின் ஐ.டி விங் இதை டிரெண்ட் ஆக்கிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் தி.மு.க சீனியர் அமைச்சர்கள் விமான நிலையத்தில் மோடியை வரவேற்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறு கடற்படை தளத்துக்கு பிரதமர் மோடி போனபோது அங்கே முதல்வர் ஸ்டாலின் அவரை முறைப்படி வரவேற்றார்.

பிரதமரைப் புறக்கணித்த கே.சி.ஆர்! வரவேற்ற ஸ்டாலின்... மோடி ரியாக்‌ஷன் எப்படி?

தி.மு.க-வின் ஐ.டி விங் இதை டிரெண்ட் ஆக்கிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் தி.மு.க சீனியர் அமைச்சர்கள் விமான நிலையத்தில் மோடியை வரவேற்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறு கடற்படை தளத்துக்கு பிரதமர் மோடி போனபோது அங்கே முதல்வர் ஸ்டாலின் அவரை முறைப்படி வரவேற்றார்.

Published:Updated:
ஸ்டாலின் - மோடி
பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு ஒரே நாளில் வந்தார் பிரதமர் மோடி. அவரை இரண்டு முதல்வர்களும் அணுகிய விதம் வித்தியாசமானது. அந்த முதல்வர்களை மோடி எதிர்கொண்ட ஸ்டைலும் வித்தியாசமானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மே 26-ம் தேதி ஹைதராபாத் சென்றுவிட்டு அப்படியே சென்னை வந்தார் மோடி. ஹைதராபாத்தில் இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தின் 20-ம் ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றார். அதன்பின் ஒரு பொதுக்கூட்டத்தையும் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழத்தில் இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்தே தேர்தல் வருகிறது. ஆனால், தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதனால் அங்கு இப்போதிருந்தே பிரசாரத்தில் இறங்கிவிட்டது பா.ஜ.க. தெலங்கானாவுக்கு மோடி, அமித் ஷா என்று யார் வந்தாலும் உக்கிரமாகப் பிரசாரம் செய்கிறார்கள்.

முரட்டுத்தனமாக விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஒரு மாநிலத்துக்கு பிரதமர் வரும்போது அவரை முதல்வர் வரவேற்பது மரபு. மன்மோகன் சிங்கை மிக மோசமாக விமர்சனம் செய்த காலத்தில்கூட, அவர் குஜராத் சென்றபோது முறைப்படி வந்து வரவேற்றார், அப்போது மாநில முதல்வராக இருந்த மோடி. ஆனால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இப்படி இல்லை. கடந்த பிப்ரவரியில் ராமானுஜர் சிலை திறப்பு விழாவுக்காக ஹைதராபாத் சென்றார் மோடி. அப்போது அவரை வரவேற்க முதல்வர் ராவ் செல்லவில்லை. முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறப்பட்டது. இம்முறையோ, மோடியின் விமானம் ஹைதராபாத்தில் இறங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக ராவ் கிளம்பி பெங்களூரு போய்விட்டார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

அவரது கட்சியினரின் மறைமுக ஆசியுடன் ஹைதராபாத் முழுக்க பல பேனர்கள் வைக்கப்பட்டன. 'மருத்துவக் கல்லூரிகள் தெலங்கானாவுக்கு ஏன் வரவில்லை, ரயில் கோச் தொழிற்சாலை எங்கே, ஹைதராபாத் வெள்ளத்துக்கு நிவாரணம் எங்கே' என்பது போல 17 கேள்விகளை அவை பிரதமரிடம் கேட்டன.

பா.ஜ.க-வை இப்போது மிக மோசமாக விமர்சனம் செய்வதில் மம்தாவுக்கும் ராவுக்கும் தான் போட்டி. கடுமையாக மோடியை எதிர்த்துப் பேசிவரும் ராவ், பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை இணைத்து ஓர் அணியை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கிறார். இதற்காக சமீபத்தில் டெல்லி சென்று ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரைச் சந்தித்தார். இதன் அடுத்தகட்டமாக முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை சந்திக்கவே சந்திரசேகர ராவ் பெங்களூரு சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோடி ஹைதராபாத்தில் இருந்த அதே நேரத்தில் அவரைக் கடுமையாக விமர்சித்து பெங்களூரில் பேட்டி கொடுத்தார் ராவ். ''தேசிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. எளிய மக்கள், விவசாயிகள் என்று எல்லோரும் இந்த ஆட்சிமீது அதிருப்தியில் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஒரு சென்சேஷனல் செய்தி உங்களுக்குக் கிடைக்கும்'' என்று பொடி வைத்துப் பேசினார் சந்திரசேகர ராவ்.

தன்னை இரண்டு முறை வரவேற்காமல் புறக்கணித்த சந்திரசேகர ராவை ஹைதராபாத் பொதுக்கூட்டத்தில் ஒரு பிடி பிடித்தார் மோடி. ராவின் மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்த மோடி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் குடும்ப ஆட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தார். ''தெலங்கானா தனி மாநிலம் உருவானது ஒரு குடும்பத்தின் நலனுக்காக இல்லை. ராவ் குடும்பம் இந்த மாநிலத்தை சீரழித்துவிட்டது. ஜனநாயகத்தில் குடும்ப அரசியல் என்பது சாபக்கேடு. ஊழலும் முறைகேடும் அதனால்தான் நடக்கிறது. இங்கு குடும்ப ஆட்சியை ஒழித்து பா.ஜ.க ஆட்சி மலர வேண்டும்'' என்றார்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்க, அவர் மகன் ராமாராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோர் மாநில அமைச்சர்களாக இருக்கிறார்கள். மகள் கவிதா எம்.பி-யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரை நிகழ்த்திய அதே வேகத்துடன் மோடி அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தார். மோடி எப்போது தமிழகம் வந்தாலும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் ஆக்குவார்கள் தி.மு.க-வினர். தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு முதல்முறையாக மோடி இப்போது தமிழகம் வருகிறார். இப்போதும் தி.மு.க-வின் ஐ.டி விங் இதை டிரெண்ட் ஆக்கிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் தி.மு.க சீனியர் அமைச்சர்கள் விமான நிலையத்தில் மோடியை வரவேற்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறு கடற்படை தளத்துக்கு பிரதமர் மோடி போனபோது அங்கே முதல்வர் ஸ்டாலின் அவரை முறைப்படி வரவேற்றார். அங்கிருந்து நேரு ஸ்டேடியம் போகும் வழியில் தி.மு.க-வினரும் இணைந்து பிரதமரை வரவேற்றார்கள்.

மோடி ஸ்டாலின்
மோடி ஸ்டாலின்

அரசு விழாவை ஸ்டாலின் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டார். வழக்கமாக பிரதமரிடம் கடிதம் கொடுத்து கோரிக்கை வைக்கும் அத்தனை விஷயங்களையும் மேடையில் பேசினார். இந்தியாவுக்குத் தமிழகம் அளிக்கும் பங்களிப்பைப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக் காட்டி, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைவு என்பதைக் குறிப்பிட்டார். கச்சத் தீவை மீட்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு ரூ. 14,006 கோடியைத் தர வேண்டும், ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை 2022 ஜூனுக்குப் பிறகு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும், இந்திக்கு இணையாக தமிழை அலுவல் மொழியாகவும் உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் ஆக்க வேண்டும் என்று கோரிக்கைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் வலியுறுத்தினார்.

மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் போல பிரதமருடன் மோதவில்லை ஸ்டாலின். அதேநேரத்தில் பணிந்தும் போகாமல், 'உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்ற அர்த்தமுள்ள முழக்கத்துடன் தன் உரையை முடித்தார். சமூக நீதி, திராவிட மாடல், ஒன்றிய அரசு ஆகியவை சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட உரை அது.

இந்த எதற்கும் நேரடி பதில் இல்லாமலும், தி.மு.க ஆட்சியைப் பற்றி நேரடியாகக் கருத்தும் சொல்லாமலும், சாமர்த்தியமாக அமைந்திருந்தது மோடியின் உரை.

இந்தியாவின் எந்த மூலைக்குப் போனாலும் தமிழின் பெருமையைப் பேசும் மோடி, சென்னைக்கு வந்து சும்மா இருப்பாரா? 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற பாரதியார் பாடலைச் சொல்லி தமிழர் பெருமையையும் தமிழ்ப் பண்பாட்டையும் உச்சி முகர்ந்தார். 'தேசிய கல்விக் கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்பப் படிப்புகளைத் தமிழ் மொழியில் கற்க முடியும். தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது' என்றவர், தனது வாரணாசி தொகுதியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ்த்துறை தொடங்கியிருப்பதை ஞாபகமாகக் குறிப்பிட்டார்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

'எங்கு சென்றாலும் தமிழர்கள் சாதிக்கிறார்கள்' என்று சொல்லி, அதற்கு உதாரணமாக 'செவித்திறன் இழந்தோர் ஒலிம்பிக்சில் சமீபத்தில் பதக்கங்கள் வென்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம். இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கூட்டத்தை நோக்கிக் கேள்வியை வீசினார். 'உங்களைவிட அதிகமாக தமிழகத்தை நான் தெரிந்து வைத்திருக்கிறேன்' என்று ஸ்டாலினுக்கும், அங்கு வந்திருந்த தமிழக அமைச்சர்களுக்கும் உணர்த்துவது போல இருந்தது மோடியின் பேச்சு.

இந்தியாவில் இருக்கும் தமிழர்களைத் தாண்டி இலங்கைத் தமிழர்கள் நலன் குறித்தும் மோடி பேசினார். 'யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் பிரதமர் நான்தான்' என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். விழா முடிந்து டெல்லி திரும்பிய மறுநாளே, 'நன்றி தமிழ்நாடு! நேற்றைய பயணம் மறக்க முடியாதது' என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

தமிழர்களை அதிகமாக நேசிப்பது யார், தமிழர் பெருமையை அதிகம் பேசுவது யார் என்ற விஷயத்தில் இனி தி.மு.க-வுடன் பா.ஜ.க கடும் போட்டியில் ஈடுபடும் என்பதை உணர்த்துகிறது மோடியின் சென்னை விசிட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism