Published:Updated:

மு.க.ஸ்டாலின்: ‘துண்டுச்சீட்டு’, ‘நிர்வாகத்திறன் அற்றவர்’-எப்படி அவதூறுகளை வென்றார் தமிழக முதல்வர்?

பேச்சாற்றல், எழுத்தாற்றல், சிந்திக்கும் திறன், நிர்வாகத் திறமை இந்திய அளவிலேயே கலைஞருக்கு மட்டும்தான் இருந்தது. ஸ்டாலின் ஸ்டாலினாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, ஏன் அவர் கலைஞராக இருக்க வேண்டும்?

திராவிட முன்னேற்றக்கழகத்தின் இளைஞரணிச் செயலாளராகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் நினைவுகூர்வதற்கு எத்தனையோ சிறப்புமிக்க புகைப்படங்கள் இருக்கும். என்னைப் பொறுத்தவரை ஸ்டாலினின் தலைமைப் பண்பைச் சொல்லும் சமீபத்திய இரு படங்கள் முக்கியமானவை என்று கருதுவேன். இரண்டுமே இருபெரும் தலைவர்களின் இறப்பின்போது எடுக்கப்பட்டவை.

நம்பிக்கை முதிர்ச்சி

2016... ஜெயலலிதா இறந்த பிறகு அவர் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வரும் வழியில் குனிந்து, சோகத்தில் அமர்ந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்கிறார் ஸ்டாலின். வேறுபாடுகளுக்கு அப்பால் துளிர்த்த ஸ்டாலினின் அரசியல் நாகரிகத்தின் அடையாளம் அது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

2018... தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்துவிட்டார். அவர் கடைசி விருப்பத்தின்படி அவரது உடலை, கருணாநிதி கடைசிவரை நேசித்த அண்ணாவின் சமாதியருகே புதைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை அ.தி.மு.க அரசு நிராகரித்துவிட்டது. அதற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது. கருணாநிதியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தவரும் அத்தனை பிரபலங்களையும் உள்ளூர பதற்றத்துடனும் பதைபதைப்புடனும் எதிர்கொள்கிறார் ஸ்டாலின். 'அண்ணா நினைவிடத்தின் அருகில் அவர் தம்பிக்கு இடமில்லையா?' என்று தமிழகமே கொதிப்பில் இருக்கிறது. அப்போதுதான் நீதிமன்றம் கலைஞர் சமாதிக்கு அனுமதி வழங்கிய செய்திவருகிறது. அப்போது தன்னை மறந்து உணர்ச்சியில் அவர் கொந்தளித்த தருணத்தை வரலாறு தனதாக்கிக்கொண்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல் புகைப்படம் அரசியல் முதிர்ச்சி, இரண்டாவது புகைப்படம் உணர்வின் நெகிழ்ச்சி. இரண்டும் இணைந்த தலைவராக உருவான ஸ்டாலின்தான், கலைஞர் இல்லாத தி.மு.க-வை வழிநடத்தி அதை ஆட்சிக்கட்டிலிலும் அமர்த்தியிருக்கிறார்.

ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க-வினர் அழுத்தப்பட்டிருந்தனர். பிற கட்சியினருடன் அவர்களால் தனிப்பட்ட நட்புகளைப் பேண முடியவில்லை. ஜெயலலிதா இறந்தபோதோ சூழலே மாறியது. அந்தச் சூழல் அ.தி.மு.க-வினருக்கும் ஒரு விடுதலை மனப்பான்மையை வழங்கியது. அப்போதுதான் அவர்கள் இயல்பாக தி.மு.க-வினருடன் வெளிப்படையாகப் பழக ஆரம்பித்தனர்.

ஜெயலலிதா இருந்தபோதே தி.மு.க சார்பில் சுனாமி நிவாரண நிதியை அவரிடம் நேரடியாகச் சந்தித்துக் கொடுத்தார் ஸ்டாலின். ''அப்பா நல்லாயிருக்காரா?" என்று விசாரித்தார் ஜெயலலிதா. அது அவரது அரசியல் வாழ்க்கையிலேயே அபூர்வ தருணம். அதே ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் நலம் விசாரித்தார் ஸ்டாலின். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க-வினர் வந்தனர்.

எம்.ஜி.ஆர் இருந்தவரை, தன் சொந்தக் கட்சிக்காரர்கள் 'கருணாநிதி' என்று சொன்னால் கடுமையாகக் கண்டித்து 'கலைஞர்' என்றுதான் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜெயலலிதாவோ `கருணாநிதி’ என்று அழைத்ததுடன் அவரைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தவர். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்த ஜெயக்குமார் ``கலைஞரின் உடல்நலம் விசாரிக்க வந்தோம்" என்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு 'கலைஞர்' என்ற வார்த்தையை அ.தி.மு.க-வின் முன்னணித் தலைவர் ஒருவர் உச்சரித்தது ஒரு வரலாற்றுத் தருணம்.

அரசியல் நாகரிகம்

ஸ்டாலினைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடித்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.1 சதவிகிததத்தில் வெற்றியை நழுவவிட்டபோதும், பின்வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாலும், ஜெயலலிதா பதவியேற்புவிழாவில் கலந்துகொண்டார் ஸ்டாலின். ஓ.பன்னீர்செல்வமும் ஸ்டாலினும் சிரித்துப் பேசியதையே குற்றச்சாட்டாகச் சொன்னார் சசிகலா. கடந்த நான்காண்டுகளில் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்தாலும், முக்கியமான பிரச்னைகளின்போது நேரடியாகச் சந்தித்து ஆலோசிப்பது, கோரிக்கைகள் வைப்பது ஆகியவற்றை மேற்கொண்டார் ஸ்டாலின். தன் கட்சிக்காரர்கள் எங்காவது அத்துமீறல்களில் ஈடுபட்டால், அவர்கள்மீது நடவடிக்கை எடுத்ததுடன், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வருத்தமும் தெரிவித்தார். இவையெல்லாம்தான் முதிர்ச்சியான தலைமையின் அடையாளங்கள்.


ஸ்டாலின்
ஸ்டாலின்

இன்னொருபுறம் கடந்த நான்காண்டுகளில் ஸ்டாலினைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தரக்குறைவான தாக்குதல்கள், ஆதாரமற்ற அவதூறுகள் இவற்றால் அவர் தளர்ந்துவிடவில்லை. காரணம், இத்தகைய தாக்குதல்களைத் தன் தந்தை எதிர்கொண்டதை அவர் அருகிருந்து பார்த்திருந்தார்.

ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் பிறந்து, தமிழகத்தின் முதல்வரான கருணாநிதி தன் அரசியல் வாழ்க்கை முழுதும் சந்தித்த சவால்கள் ஏராளம். அவரது ஆட்சி இரு முறை கலைக்கப்பட்டது. அதுவும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்த ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 'திருட்டு ரயிலேறி வந்தார்', 'திராவிட நாடு பற்றி கேள்வி எழுப்பிய பெண் எம்.எல்.ஏ-வுக்கு ஆபாசமாக பதில் அளித்தார்', 'சர்க்காரியா கமிஷனாலேயே 'விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்தவர்' என்று குற்றம்சாட்டப்பட்டவர்'... அரசியல் விமர்சனங்களைவிட கருணாநிதி சந்தித்தது இது மாதிரியான ஆதாரமற்ற அவதூறுகளைத்தான். உருவ கேலிகளும் சாதியரீதியிலான அவதூறுகளும் வசைகளும்கூட கருணாநிதியை நோக்கிக் குவிந்தன.

நெருக்கடிகள்

தேசிய அரசியல் சூழல்களாலும், தன் பிறப்பு அடையாளத்தாலும் அவர் சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். கட்சிப்பிளவு முதல் அரசியல் தோல்விகள் வரை, அண்ணாவைவிடவும் அவர் அதிகமான சோதனைகளை எதிர்கொண்டார். ஆனால் அதற்கெல்லாம் சளைக்காமல் இறுதிவரை போராடி தன் இறப்புக்குப் பின்னும் தனக்கான இறுதி மரியாதையை உரிமையுடன் வாங்கிக்கொண்டார். அந்தச் சூரிய நெருப்பில் சுட்ட தங்கமாகத்தான் ஸ்டாலினும் அரசியல் அவதூறுகளைச் சந்தித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருணாநிதி இருந்தபோது, 'இவருக்குத்தான் வயதாகிவிட்டதே, ஸ்டாலினிடம் பொறுப்பைக் கொடுக்கலாமே' என்றவர்கள், கருணாநிதி இறந்த பிறகு, 'கருணாநிதியின் திறமை ஸ்டாலினுக்கு வருமா?' என்றார்கள். கலைஞர் இருக்கும்வரை அவரை அங்கீகரிக்க மறுத்தவர்கள், வசைபாடியவர்கள், அவர் இறந்த பிறகு, 'கலைஞரின் எழுத்தாற்றல், பேச்சாற்றல், ராஜதந்திரம், நிர்வாகத்திறமை இவையெல்லாம் ஸ்டாலினிடம் இல்லையே?' என்றார்கள்.

பேச்சாற்றல், எழுத்தாற்றல், சிந்திக்கும் திறன், நிர்வாகத்திறமை இந்திய அளவிலேயே கலைஞருக்கு மட்டும்தான் இருந்தது. ஸ்டாலின் ஸ்டாலினாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, ஏன் அவர் கலைஞராக இருக்க வேண்டும்?

இரும்பு்ப பெண்மணி, துண்டுச்சீட்டு

அர்த்தப்பொருத்தமே இல்லாமல் ஸ்டாலின் பெயரைவைத்து விநோதமான பட்டப்பெயரை உருவாக்கியது, அவரை நிர்வாகத் திறமையற்றவர் என்பதான பிம்பத்தை உருவாக்குவது, ஒரு முழுப்பக்கமும் எழுதிவைத்துப் படித்தவரை 'இரும்புப் பெண்மணி' என்று அழைத்துவிட்டு ஸ்டாலினைத் 'துண்டுச்சீட்டு' என்று கிண்டலடிப்பது... இவற்றுக்காகத்தான் ஆற்றல்களைச் செலவழித்தார்கள் அரசியல் எதிரிகள்.

கருணாநிதி, அன்பழகனுடன் ஸ்டாலின்
கருணாநிதி, அன்பழகனுடன் ஸ்டாலின்

இத்தனைக்கும் ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை முதல்வராகியும் அவர் நிர்வாகத்திறமை என்னவென்று தெரிய வாய்ப்பே கிடைக்கவில்லை. எடப்பாடி முதல்வர் ஆவதற்கு முதல்நாள் வரை அவர் முதல்வர் ஆவது அவருக்கே தெரியாது. ஆனால் ஸ்டாலின் சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் எனப் பல பொறுப்புகள் வகித்து தன் நிர்வாகத்திறமையை நிரூபித்தவர். ஆனாலும் அவரைத் திறமையற்றவர் என்ற பிம்பங்களை உருவாக்குவதில் ஆர்வம்காட்டினார்கள்.

தலைவர் ஆவதற்கு முன்பிருந்தே தன் தலைமைப் பண்பை நிரூபித்தவர் ஸ்டாலின். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது கருணாநிதி உடல்நிலையின் காரணமாக முழுவதுமாகச் செயல்பட முடியாத நிலை. தமிழகம் முழுக்க சுற்றிச் சுழன்ற ஸ்டாலினின் உழைப்புத்தான் ஆளுங்கட்சிக்கு நிகரான வெற்றியைத் தி.மு.க-வுக்குப் பெற்றுத்தந்தது. பா.ஜ.க-வுக்கு எதிராக மற்ற கட்சிகள் ஒன்றிணைய தயக்கம் காட்டிய நிலையில் 'ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர்' என்று முதன்முதலாக அறிவித்ததுடன், பா.ஜ.க எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றுதிரட்டி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அசுர வெற்றியை ஈட்டியவரும் ஸ்டாலின்தான்.

ஆனாலும் 'ஸ்டாலினுக்குத் திறமையில்லை' என்று பழைய பல்லவி அவதூறுப் பிரசாரங்களையே பாடிவந்தார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 'ஸ்டாலினால் அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை' என்பது.

ஆட்சிக்கலைப்பால் அதிகம் வலிகளைச் சந்தித்தது தி.மு.க-தான். 'அரசியல் சட்டத்திலிருந்து 356-வது பிரிவை நீக்க வேண்டும்' என்று கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்திவந்தார். எஸ்.ஆர்.பொம்மை வழக்குக்கு பிறகு மாநில அரசுகளைக் கலைப்பது நின்றுபோனது. ஆனால் மத்தியில் இப்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வோ மாநில அரசுகளைக் கலைப்பதில்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்கிறது அல்லது கொல்லைப்புற வழியாகத் தன் ஆட்சியைத் திணிக்கிறது. புதுச்சேரி வரை பல உதாரணங்கள் தொடர்கின்றன. இந்த அறமற்ற, ஜனநாயக விரோத தன்மையைத்தான் 'திறமை' என்றும், அது ஸ்டாலினுக்கு இல்லை என்றும் விமர்சித்துவந்தார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தர்மயுத்தம், கூவத்தூர் கும்மாளங்கள், நம்பிக்கையில்லா தீர்மானக் கூத்துகள், பாரபட்ச நீக்க நடவடிக்கைகள் எல்லாம் நிறைந்த அ.தி.மு.க அரசை ஸ்டாலின் நினைத்திருந்தால் எப்போதோ கவிழ்த்திருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்ய விரும்பவில்லை. ஆளுங்கட்சியின் உள்முரண்களால் அது கவிழ்ந்துபோகட்டும் என்றார். உண்மையில் அதுதான் முதிர்ச்சியான தலைமைப் பண்பு. 'ஆறுமாதங்களில் ஆட்சி கவிழும்' என்று ஸ்டாலின் பலமுறை சொல்லியும் எடப்பாடி நான்கு ஆண்டுகள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது எடப்பாடிக்குக் கிடைத்த வெற்றியல்ல; ஸ்டாலின் கொடுத்த வாய்ப்பு!

நிதானம்

இத்தகைய நிதானமான அணுகுமுறைதான் ஸ்டாலினின் தலைமைத்துவத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. மேலும் உயிர்ப்புள்ள ஓர் இயக்கம் காலந்தோறும் மாறிவரும் சூழலைப் புரிந்துகொண்டு தன் அரசியல் திசையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்படித்தான் கருணாநிதி ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் பல சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டுவந்தார். குறிப்பாக, அவரது 2011 ஆட்சிக்காலம் 'விளிம்புநிலை அரசியல்' என்ற புதிய குரல்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டது. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என விளிம்புநிலையினரின் உரிமைகளுக்காகப் பலவற்றைச் செய்தார் கருணாநிதி.

இப்போது ஏற்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மாநில உரிமைகளுக்கான அழுத்தம், அடையாளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டவராக ஸ்டாலின் இருப்பது நம்பிக்கையளிக்கிறது. நீர்வளத்துறை, வேளாண்மை - உழவர்நலத்துறை, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை, மீன்வளம் - மீனவர் நலத்துறை, சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை என்றெல்லாம் துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பது இதையே குறிக்கிறது. நல்ல தொடக்கம்.

'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூல்தான் தமிழ், தென்னிந்திய மொழிகளின் தாய் என்பதை ஆராய்ந்து சொன்னது. தொடர்ச்சியாக, திராவிடம் மற்றும் தமிழ் அடையாளத்தைக் கொண்டு உருவான அரசியல்தான் இன்று இந்திய அளவில் பன்முகத்துக்கு நம்பிக்கையளிக்கும் குரலாக விளங்குகிறது. இயற்கைப் பெருந்தொற்று, மாநில உரிமைகள் மீட்பு, மொழி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அனைவருக்கான உரிமைகள் ஆகிய கடமைகளும் கனவுகளும் காத்திருக்கின்றன. ஸ்டாலின் பதவியேற்கும் மே 7 - 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய கால்டுவெல்லின் பிறந்தநாள்.

வரலாறு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. தொடங்குங்கள் ஸ்டாலின்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு