“ 192 நாடுகளின் பங்களிப்புகள், 1000 -க்கும் மேற்பட்ட பிரமாண்ட அரங்குகள் என்று கடந்த ஆறுமாதங்களாக உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது துபாய் எக்ஸ்போ 2020. இந்தக் கண்காட்சியில் இந்த மாதம் தமிழ்நாட்டிற்கு என தனியாக ஒரு அரங்கு அமைய இருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விஷயம்.

துபாய் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் உலக அளவிலான எக்ஸ்போ தொடங்கியது. `மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்' என்கிற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்த எக்ஸ்போ தொடங்கப்பட்டது. மார்ச் மாதம் 31-ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்த எக்ஸ்போவில் ஒவ்வொரு நாட்டின் கலாசாரம், தொழில் நுட்பம், தொழில்சார்ந்த வாய்ப்புகள் குறித்து ஒவ்வொரு நாட்டின் அரங்கிற்குள்ளும் அமையப்பெற்றுள்ளது.குறிப்பாக எதிர்காலத்தில் இந்த உலகை ஆளப்போகும் புதிய டெக்னாலஜிகள் குறித்தும், புதிய கண்டுபிடிப்புளுக்கான சாத்தியங்கள் குறித்தெல்லாம் இந்த எக்ஸ்போவில் விளக்கப்படுகின்றன. இதைத் தவிர பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த எக்ஸ்போவில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டின் சார்பில் தனி பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இந்த எக்ஸ்போவில் தங்கள் மாநிலத்தின் சிறப்புகள், தொழில் வாய்ப்புகள், கலாசாரங்களை உள்ளடக்கிய விளக்கக் காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வகையில் தமிழகத்தின் சிறப்பினை உலக நாடுகளுக்கு கொண்டுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் சார்பிலும் ஒரு அரங்கு துபாய் எக்ஸ்போவில் வைக்கலாம் என்று முதல்வரிடம் தமிழக அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனை கொடுத்தனர்.அதற்கு முதல்வரும் ஓ.கே சொல்லிவிட்டதால், வரும் 24-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை தமிழ்நாடு அரங்கு துபாய் எக்ஸ்போவில் செயல்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசுத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது “ தமிழக அரங்கத்திற்கு `தமிழ்நாடு பெவிலியன்' என்கிற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த அரங்கில் தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்கள் குறித்த தகவல்களும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான காரணங்கள் குறித்த விளக்கப்பட காட்சிகளும் அங்கு வைக்கப்பட உள்ளன. அதேபோல் தமிழகத்திலிருந்து தயாரிக்கப்படும் உலக அளவிலான பொருள்களோடு, தமிழக கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலாசாரம் சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களையும் இந்தக் கண்காட்சியில் வைக்க முடிவாகியுள்ளது. இவை தவிர உலகத் தரத்திலான கல்வியைத் தமிழகம் எப்படி வழங்குகிறது,மென்பொருள் துறையில் தமிழகத்தில் உள்ள வாய்ப்புகள் உள்ளிட்டவையும் இதில் இடம்பெற உள்ளது.

மேலும், தமிழக சினிமா குறித்த காட்சிகளும் வீடியோக்களாக ஒளிப்பரப்பாக்கப்படும். தமிழ் சினிமாவின் தனித்துவம், உலக அளவில் கவனம் ஈர்த்த தமிழ் திரைப்படங்கள் குறித்த வீடியோக்களும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. தமிழகத்திலிருந்து 24-ம் தேதி துபாய் செல்லும் முதல்வர் ஸ்டாலின் இந்த கண்காட்சியை பார்வையிடுகிறார்.இதன்பிறகு துபாய் தொழில்முனைவோருடன் கருத்தரங்கம் ஒன்றிலும் முதல்வர் கலந்துக்கொள்ள உள்ளார்.
தமிழகத்தின் சிறப்புகளை விளக்கும் இந்த அரங்கின் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் கண்காட்சியை காண வந்துள்ள தொழிலதிபர்களிடம் விளக்கவும் ஒரு அதிகாரிகள் டீம் துபாய் சென்றுள்ளது. தமிழக தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் துபாயில் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த கண்காட்சியின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்கிறார்கள் அதிகாரிகள்.