Published:Updated:

ஆப்கானிஸ்தான்: ‘இனிதான் ஆரம்பம்' - தாலிபன்களுக்கு காத்திருக்கும் சவால்கள் - விரிவான பார்வை

தாலிபன்
தாலிபன்

பெண்களுக்கான கல்வி மறுப்பு, அரசு மற்றும் தனியார் வேலைகளில் பெண்களைத் தவிர்ப்பது என மீண்டும் அதே தாலிபன் ஆட்சிதான் நடக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம் அனைத்தும் தெரிய தொடங்கிவிட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆப்கானிஸ்தான் இவ்வளவு விரைவாக தங்கள் கைகளுக்கு வரும் என்று தாலிபன்களே நிச்சயம் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அதுவும் காபூலைப் பிடிக்க தாலிபன்களுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என அமெரிக்க கணித்த சூழலில், ஓர் இரவே தாலிபன்களுக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.

தாலிபன்களின் அரசியல் பிரிவின் செய்தி தொடர்பாளர் முகம்மது நையீம், “நாங்கள் எதை நினைத்தோமோ அதை அடைந்துவிட்டோம். நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. எங்கள் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

இன்று வேண்டுமானால் அலுவல்பூர்வமாக தங்கள் வெற்றியைத் தாலிபன்கள் அறிவித்திருக்கலாம். ஆனால், தாங்கள் வென்றுவிட்டதாக ஏப்ரல் மாதமே பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறி இருந்தார் தாலிபன் தலைவர்களில் ஒருவரான ஹாஜி ஹெக்மத்.

‘நாங்கள் வென்றுவிட்டோம்'

நிழல் ஆளுநரும் தாலிபன் தளபதியுமான ஹாஜி ஹெக்மத், அந்தப் பேட்டியில் சில விஷயங்களை விரிவாகப் பேசியிருந்தார். “நாங்கள் வென்றுவிட்டோம். அமெரிக்கா தோற்றுவிட்டது” என அந்த பேட்டியிலேயே அவர் பதிவு செய்தார்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

பிபிசி நிருபர்களைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஹாஜி ஹெக்மத். அப்போது அவர்கள் கண்ட விஷயத்தையும் பதிவு செய்து இருக்கிறார்கள் பிபிசி நிருபர்கள்.

தாங்கள் ஒரு பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்குச் சிறுவர்களோடு சிறுமிகளும் அமர்ந்து படித்ததாகவும், பால்க் மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் வழியே தாங்கள் சென்ற போது பெண்கள் புர்கா அணியாமல் சென்றதாகவும் அந்த கட்டுரையில் பிபிசி நிருபர்கள் பதிவு செய்துள்ளனர்.

தாலிபன்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் படித்திருக்கிறார்களா இல்லை முன்பு நடந்தது போலவே நடந்து கொள்வார்களா என்று கேள்விக்கு, “இந்த கேள்வியே அநாவசியம். தாலிபன்கள் அப்போதும் எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்போம்,” என்று அப்போது அவர் கூறியுள்ளார் ஹாஜி.

ஆனால், தங்கள் நடவடிக்கையில் நிறைய மாற்றம் வந்திருக்கிறது என்பதைக் காட்டவே அவர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் என்பது அந்த கட்டுரையைப் படித்த அனைவருக்கும் தெரியும்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Sidiqullah Khan

அதாவது ‘தாலிபன்கள் முன்பு போல அல்ல. இப்போது நிறையவே திருந்திவிட்டோம். எங்களை புதுப்பித்துக் கொண்டுவிட்டோம்’ என்று அவர்கள் காட்ட விரும்பி உள்ளனர்.

“மாறினார்களா? இல்லை… இல்லவே இல்லை”

ஆனால், இப்போது அங்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் பார்க்கையில் இந்த காட்சிகள் அனைத்தும் கானல் நீர் போலவே உள்ளது.

Tamil News Today: ``தாலிபன் அரசுடன் நட்புரீதியாக உறவை மேம்படுத்தத் தயார்!” - சீனா

கடந்த கால தாலிபன் ஆட்சியிலிருந்த கசப்பான நினைவுகள் அனைத்தும் மீண்டும் உயிர்ப்பித்துவிட்டன என்கிறது அங்கிருந்து வரும் செய்திகள்.

பெண்களுக்கான கல்வி மறுப்பு, அரசு மற்றும் தனியார் வேலைகளில் பெண்களைத் தவிர்ப்பது என மீண்டும் அதே தாலிபன் ஆட்சிதான் நடக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம் அனைத்தும் தெரிய தொடங்கிவிட்டன.

பெண்கள் புர்கா அணியக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர், பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற செய்திகளும் வரத் தொடங்கிவிட்டன. மீண்டும் அந்த இருள் சூழ்ந்த நாட்கள் வருமோ என்ற அச்சம் படர்ந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய நூர் கத்தேரா என்ற பெண் வங்கி ஊழியர், “நாங்கள் வேலைக்கு அனுமதிக்கப்படாமல் இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இனி இதுதான் எதார்த்தமாக இருக்கப் போகிறது” எனக் கூறி உள்ளார்.

அசோசியேடட் பிரஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள ஷக்ரா, “நிறையக் கற்க விரும்பினேன். வாழ்க்கையில் முன்னேற விரும்பினேன். என்னால் எப்படி இனி வீட்டிலேயே முடங்க முடியும்? ஆனால், இனி இதுதான் நடக்கும்,” எனக் கூறி உள்ளார்.

ஆப்கன் திரைப்பட இயக்குநர் சஹாரா எழுதி உள்ள ஒரு கடிதம் அங்குள்ள முற்போக்குவாதிகளின் அச்சத்தைப் படம் பிடித்து காட்டுகிறது.

“அவர்கள் அரசுடன் இணைந்து செயல்பட்ட மக்களைக் கொன்றவர்கள். குழந்தைகளைக் கடத்தியவர்கள். பெண்களை ஆடையைக் காரணமாகக் காட்டி கொலை செய்தவர்கள். எங்கள் நகைச்சுவை நடிகரைச் சாகடித்தவர்கள், எங்கள் கவிஞரை இல்லாமல் செய்தவர்கள். மீண்டும் அவர்கள் கரங்களில் நாடு சென்றால், எங்கள் கலை தடை செய்யப்படும். பெண்கள் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும்,” எனக் கூறியுள்ளார். சர்வதேச சமூகத்தின் உதவியையும் கோரியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘இனிதான் ஆரம்பம்'

“தாலிபன்கள் கைகளில் எளிதாக ஆப்கன் விழுந்திருக்கலாம். ஆனால், உண்மையான சவால் இனிதான் தொடங்கப் போகிறது” என்கிறார் தோஹா பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆய்வுகள் மையத்தின் இயக்குநர் சுல்தான் பரகத்.

அவர், “இதுவரை அவர்கள் கொரில்லா குழுக்களாக இருந்தனர். ஆனால், இப்போது அவர்கள் ஒரு நாட்டை நிர்வகிக்க வேண்டும். இரண்டும் ஒன்றல்ல” என்கிறார்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Gulabuddin Amiri

“ஒட்டு மொத்த ஆப்கன் மக்களுக்கும் தங்களைப் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொள்ளவேண்டும். இதனை சில தாலிபன் தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தோஹாவில் நடந்த பேச்சு வார்த்தையில் இது குறித்த உறுதியையும் அளித்துள்ளனர். ஆனால், நடைமுறையில் அது அவ்வளவு எளிதாக இல்லை. தாலிபனில் உள்ள இளைஞர்கள் ஆக்ரோஷமாகச் செயல்படுகின்றனர், துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர்,” என்று எழுதுகிறார் சுல்தான் பரகத்.

ஆம் ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவாக இருப்பதும், ஒரு நாட்டை ஆள்வதும் ஒன்றல்ல. முன்பே பல கசப்புகளைச் சந்தித்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அதனைவிடக் கடினமானது.

தாலிபன்கள் முன்பே நாட்டை ஆட்சி செய்தவர்கள். அவர்களுக்கு நாட்டை ஆட்சி செய்வது ஒன்றும் புதிதல்ல என்றும் கருத முடியாது. ஏனெனில், தாலிபன்கள் ஆட்சி மேற்கு ஆசிய வரலாற்றின் கருப்பு பக்கமாகவே வரலாறு குறிப்பெடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அந்த கருப்பு பக்கங்கள் புரட்டப்படுமானால், இனி வரும் காலம் ஆப்கன் மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் ஒரு சூனியமாகவே இருக்கும். ஏனெனில், முன்பு அப்படிதான் இருந்திருக்கிறது.

உண்மையில்… தாலிபன்களுக்கும், பிற உலக சமூகத்திற்கும் சவால்கள் இனிதான் ஆரம்பம்!

யார் இந்த தாலிபன்கள், அமெரிக்கா ஏன் பின்வாங்கியது, ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? - 1
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு