Published:Updated:

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; தேர்தல் ஆணையத்தில் அபிடெவிட்... வேகமெடுக்கும் எடப்பாடி தரப்பு!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

விரைவிலேயே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடவிருக்கும் நிலையில், கட்சியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை சட்டப்பூர்வமாக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; தேர்தல் ஆணையத்தில் அபிடெவிட்... வேகமெடுக்கும் எடப்பாடி தரப்பு!

விரைவிலேயே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடவிருக்கும் நிலையில், கட்சியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை சட்டப்பூர்வமாக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இந்தியத் தேர்தல் ஆணையத்தில், தங்களுக்கு ஆதரவான 2,500-க்கும் அதிகமான அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை இன்று சமர்ப்பித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. விரைவிலேயே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடவிருக்கும் நிலையில், கட்சியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை சட்டப்பூர்வமாக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். "ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில், கட்சியின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். திருத்தப்பட்டக் கட்சி விதிப்படி, நவம்பர் மாதத்துக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல்வேறு அமைப்புகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக மனுக்கள் தாக்கலாகியிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி - மோடி
எடப்பாடி பழனிசாமி - மோடி

எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் 95 சதவிகித நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கும் விதமாகத்தான், 2,500 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

வரும் செப்டம்பர் 25-ம் தேதி, சென்னை ராயப்பேட்டையிலுள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கூட்டத்தில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்துப் பேசவிருக்கிறோம். தற்போது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உறுப்பினர் அடையாள அட்டையில், ஓ.பன்னீர்செல்வம் படமும் இடம்பெற்றிருக்கிறது. அந்த அடையாள அட்டையை முறைப்படி மாற்றிவிட்டு, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம், அக்டோபர் மாதத்திற்குள்ளாகவே நடத்தி முடிக்கத் தீர்மானித்திருக்கிறார் எடப்பாடி.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

சமீபத்தில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர், கட்சியில் ஒற்றைத் தலைமை ஏன் கொண்டுவரப்பட்டது என்பதை விளக்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து, 10 எம்.பி-க்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதுதான் பா.ஜ.க-வின் எண்ணம். அதற்கான உத்தரவாதத்தை எடப்பாடி டெல்லிக்கு அளித்திருக்கிறார்.

குடும்பத்துடன் ஓபிஎஸ்
குடும்பத்துடன் ஓபிஎஸ்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை வருடமே இருக்கும் நிலையில், பெரும்பாலான நிர்வாகிகளை கைவசம் வைத்திருக்கும் எடப்பாடியை முறைத்துக் கொள்ள டெல்லியும் விரும்பவில்லை. இப்படி, தனக்குச் சாதகமாக சூழல் கைகூடி வருவதால், சட்டப்படி பொதுச்செயலாளர் ஆவதற்கு உண்டான பணிகளை வேகப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி" என்றனர் விரிவாக.

தன் மனைவிக்கு திதி கொடுப்பதற்காக வாரணாசி சென்றிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். செப்டம்பர் 23-ம் தேதிதான் அவர் தமிழகம் திரும்புகிறார். அவர் வந்தபிறகுதான், பன்னீர் தரப்பிலிருந்து அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்துப் பேசப்படும் என்கிறார்கள் பன்னீர் முகாமைச் சேர்ந்தவர்கள்.