Published:Updated:

தமிழ்நாடு நாள் மாற்றமும் எதிர்ப்பும்; திமுக அரசின் முடிவும் பின்னணியும்! - ஓர் அலசல்!

மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை சென்னை பிரசிடென்ஸியிலிருந்து பிரிந்து சென்றதுமே, தங்களுக்கென பெயர்களைச் சூட்டிக்கொண்டன.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, ஒன்பது ஆண்டுகள் கழித்து 1956, நவம்பர் 1-ம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது `மெட்ராஸ் பிரசிடென்ஸி' என்ற பெயரில் இணைந்திருந்த கர்நாடகத்தின் சில பகுதிகளும், ஆந்திராவின் சில பகுதிகளும் நவம்பர் 1-ம் தேதியன்று பிரிக்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என உருவாகின. ``பிரிக்கப்பட்ட அன்றுதான் தமிழகத்தின் சில பகுதிகள் கர்நாடகத்துக்கும், கேரளத்துக்கும், ஆந்திராவுக்கும் சென்றுவிட்டன. எனவே, நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படவேண்டிய நாள் அல்ல. `தமிழ்நாடு’ என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாள்தான் உண்மையான தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்" என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

சுப.வீ - 
கி.வீரமணி
சுப.வீ - கி.வீரமணி

அதையடுத்து, கடந்த சனிக்கிழமை தமிழக அரசு, `தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் இயக்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்’ என்று அறிவித்தது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்கூட இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

`தி.மு.க திடீரென தமிழ்நாடு நாளை மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?’ என்ற கேள்வியை முன்வைத்து அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ``தி.மு.க தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருமே ஆரம்பத்திலிருந்தே தமிழ், தமிழர் என்பதைவிடவும், திராவிடத்தின் மீதுதான் அதீத கவனம் செலுத்தினார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் என எல்லோருமே திராவிடத் தலைவர்கள்தான். அதனால்தான் அண்ணா தலைமையிலான தி.மு.க, `திராவிட நாடு' என்று தனி நாடு கேட்டுப் போராடியது. பின்னர் அதற்குச் சாத்தியமில்லை என்று தெரிந்ததும், அந்தக் கோரிக்கையைக் கைவிட்டது.

மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை சென்னை பிரசிடென்ஸியிலிருந்து பிரிந்து சென்றதுமே, தங்களுக்கென பெயர்களைச் சூட்டிக்கொண்டன. மொழிவாரியாக மாநிலம் வேண்டுமென்று சுதந்திரத்துக்கு முன்பு ஒடிசாதான் முதலில் குரல் கொடுத்தது. சுதந்திரத்துக்குப் பின்பு ஆந்திரா முதலில் குரல் கொடுத்தது. அது தொடர்பான உண்ணாவிரதப் போராட்டத்தில் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் இறந்தார்.

மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை `தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி சங்கரலிங்கனார் தொடர் உண்ணாவிரதம் இருந்து இறந்தேபோனார். நிஜத்தில்தான் தனி நாடில்லை, பெயரிலாவது இருக்கட்டுமே என்று தி.மு.க முதலில் ஆட்சியமைத்ததும், அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' எனப் பெயரை மாற்றினார். தமிழ்நாடு எனப் பெயர் வைத்தாலும், திராவிட சித்தாந்தத்திலிருந்து தி.மு.க இன்னும் துளியும் மீளவில்லை.

தி.மு.க
தி.மு.க

சமீபகாலமாக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழ், தமிழ்த் தேசியம் எனப் பேசிவருவது திராவிட சித்தாந்தத்தைச் சிதைப்பதாகவே தெரிகிறது. பொதுவாக அடுத்தவர்களின் அஜெண்டாக்களை தங்களுடையதாக மாற்றிக்கொண்டு களமாடுவதுதான் திராவிடக் கட்சிகளின் ஸ்பெஷாலிட்டி. அந்த வகையில்தான் நாம் தமிழர் கட்சியினர் பேசத் தொடங்கிய, ஒன்றிய அரசு உள்ளிட்ட முழக்கங்களை தி.மு.க அதிகாரபூர்வமாகக் கைப்பற்றி, அவை தங்களுக்கே உரித்தான வார்த்தைகள் என்பதுபோல காட்டிக்கொள்கிறது.

இருந்தபோதும் தமிழ்த் தேசியம் பேசப்படும் அளவுக்குத் திராவிட சித்தாந்தம் பேசப்படுவதில்லை. மெல்ல மெல்ல மறைந்துகொண்டே செல்வதால் அதை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயம் தி.மு.க-வுக்கு இருக்கிறது. அதற்காகத்தான், தனது ஆதரவு இயக்கங்களைத் தமிழ்நாடு நாள் குறித்து அறிக்கை வெளியிடவைத்து, அதன்பேரில் தேதியையும் திராவிடத் தலைவரான அண்ணா பெயர் மாற்றம் செய்த ஜூலை 18-ம் தேதிக்கு மாற்றியிருக்கிறது தி.மு.க அரசு" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தேதி மாற்றத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். `குழந்தை பிறந்த தேதியைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, குழந்தைக்குப் பெயர் சூட்டிய தேதியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது’ என்று விமர்சித்திருக்கிறார் பன்னீர்.

இதன் பின்னணி என்ன என்பது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது,``ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1-ம் தேதியை அதிகாரபூர்வமற்ற முறையில் தமிழ் அமைப்புகள் மாநிலம் உருவான நாளாகக் கொண்டாடிவந்தன. கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில்தான் இதை `தமிழ்நாடு நாள்’ என முறைப்படி அரசு அறிவித்தது.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

தி.மு.க-விலிருந்து பிரிந்த கட்சியாக இருந்தாலும், அ.தி.மு.க-வில் தற்போதைய தலைவர்கள் இருவரும் பூர்வீகமாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பார்வையே இருக்கிறது. அதனால், திராவிட சித்தாந்தத்திலிருந்து அ.தி.மு.க விலகி பலகாலமாகிவிட்டது. அ.தி.மு.க அரசு அறிவித்த ஒரே காரணத்துக்காகத்தான் தற்போது தி.மு.க அரசு இதை மாற்றியிருக்கிறது" என்றனர்.

தமிழ்நாடு நாள் விவகாரத்தில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. பா.ஜ.க-வின் இந்த எதிர்ப்புக்கான காரணத்தை அந்தக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தபோது, ``மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கும், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டதற்கும், அதற்கான போராட்டங்களுக்கும், பா.ஜ.க-வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், பா.ஜ.க இதில் களமாடக் காரணமும் இருக்கிறது.

பாஜக
பாஜக

தி.மு.க எதிர்ப்பு மனநிலை, தனது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை, தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுக்கவேண்டிய தேவை, திராவிட சித்தாந்தத்தை ஒழிக்கவேண்டிய எண்ணம், இவைதான் இந்த விவகாரத்தில் பா.ஜ.க தலையிடுவதற்கு மிக முக்கியக் காரணங்கள். ஏனெனில், தமிழகத்திலிருந்து திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவதே பா.ஜ.க-வின் லாங்-டேர்ம் அஜெண்டாவாக இருக்கிறது. பா.ஜ.க திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க-வை உடனிருந்தே ஓரளவுக்குச் சறுக்கச் செய்துவிட்டது. தி.மு.க-வை எவ்வளவோ முயன்றும் அதனிடத்தைவிட்டு அகற்ற முடியவில்லை. இருந்தபோதும் இது போன்ற ஒருசில விவகாரங்களில் தி.மு.க-வின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் செயல்படுவதே அந்த அஜெண்டாவை எட்டுவதற்கான வாய்ப்பு என்பதால் பா.ஜ.க இதில் கவனம் செலுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு