Published:Updated:

ஸ்டாலின் உத்தரவுப்படி கூட்டணி தர்மம் காக்கப்பட்டதா? - தமிழகம் முழுவதும் கள நிலவரம் இதுதான்!

ஸ்டாலின்

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெறுவதற்காக நிறைய செலவு செய்துவிட்டோம். இப்போது பொறுப்பிலிருந்து விலகுவது என்பது சரியான முடிவாக இருக்காது எனச் சில இடங்களில் தி.மு.க-வினர் முரண்டுபிடிக்கிறார்கள்.

ஸ்டாலின் உத்தரவுப்படி கூட்டணி தர்மம் காக்கப்பட்டதா? - தமிழகம் முழுவதும் கள நிலவரம் இதுதான்!

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெறுவதற்காக நிறைய செலவு செய்துவிட்டோம். இப்போது பொறுப்பிலிருந்து விலகுவது என்பது சரியான முடிவாக இருக்காது எனச் சில இடங்களில் தி.மு.க-வினர் முரண்டுபிடிக்கிறார்கள்.

Published:Updated:
ஸ்டாலின்

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. சீட் ஒதுக்கீட்டின்போது கூட்டணிக் கட்சிகளிடம் கறாராக இருந்த தி.மு.க., முடிவுகள் வெளியான பிறகு மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை அள்ளிக் கொடுத்தது.

திருமாவளவன்
திருமாவளவன்

ஆனால், மறைமுகத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய சில இடங்களில் தி.மு.க-வினர் போட்டியிட்டனர். கூட்டணி தர்மத்தை மீறி நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்த தொல்.திருமாவளவன், ``முதல்வரின் ஆணையை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், ``சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை வருத்தமடையவைத்துள்ளன. குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகத் தங்கள் பொறுப்பைவிட்டு விலகி, பின்னர் என்னை வந்து சந்தியுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

அதையடுத்து பல இடங்களில் கட்சியின் சார்பாகக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டவர்களில் சிலர் `பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்கிறரீதியில் காத்திருக்கிறார்கள். ஒரு சிலர் பொறுப்பிருந்து விலகுவதற்குத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்குக் கட்சியினரின் ரியாக்‌ஷன் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்...

நிறைய பணம் செலவு செஞ்சுட்டோம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பேரூராட்சித் தலைவர் பொறுப்பு, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது, மொத்தமுள்ள 18 வார்டுகளில் ஒன்பது இடங்களில் தி.மு.க-வும், இரண்டு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரும் வெற்றிபெற்றிருந்தனர். அ.தி.மு.க ஒர் இடத்திலும் சுயேச்சைகள் ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தார்கள். மார்க்சிஸ்ட் சார்பாகக் களமிறங்கிய கீதா என்பவரை எதிர்த்து, தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட சித்ரா வெற்றிபெற்றார்.

கூட்டணிக் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு வென்ற சித்ரா
கூட்டணிக் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு வென்ற சித்ரா

கட்சித் தலைமையின் அறிவிப்பை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவில் சித்ரா இருக்கவில்லை. இது தொடர்பாக அவர் ஆதரவாளர்கள் கூறுகையில், ``சித்ராவின் கணவர் சுப்பிரமணியன் இந்தத் தேர்தலுக்காக நிறைய செலவு செய்துவிட்டார். அவரை அன்அப்போஸ்டாக ஜெயிக்கவைக்கவே பல லட்சங்கள் செலவு செய்தார். தலைவர் தேர்தலிலும் நிறைய செலவு செஞ்சுட்டார். அதனால் அவர் ராஜினாமா செய்ய மாட்டார்” என்கிறார்கள்.

தொடரும் பேச்சுவார்த்தை!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள 24 வார்டுகளில், தி.மு.க 17 வார்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், அந்தக் கட்சியின் பாத்திமா பசீரா வேட்புமனு தாக்கல் செய்தார். அதனால் கடைசி நேரத்தில் சி.பி.ஐ வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நகர்மன்றத் தலைவராக தி.மு.க-வின் பாத்திமா பசீர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க தலைமை உத்தரவிட்ட பிறகும்கூட பாத்திமா பசீர் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள் அவரிடம் தொடர்ச்சியாகப் பேசிவருகிறார்கள். இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதேபோல...

திருத்துறைப்பூண்டி தி.மு.க நகரச் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியனின் மனைவி கவிதா பாண்டியன் நகர்மன்றத் தலைவராகத் தேர்வான நிலையில், துணைத் தலைவர் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்து. நகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரு கவுன்சிலர்களே இருந்தார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், தி.மு.க நகரச் செயலாளரான ஆர்.எஸ்.பாண்டியன் மனுத்தாக்கல் செய்ததால் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒதுங்கிக்கொண்டனர்.

ஆர்.எஸ்.பாண்டியன்
ஆர்.எஸ்.பாண்டியன்

நகராட்சித் தலைவராக மனைவியும், துணைத் தலைவராக கணவனும் வெற்றிபெற்ற நிலையில், கட்சி மேலிடத்தின் அறிவிப்பால் ஆர்.எஸ்.பாண்டியன் அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய கட்சிப் பொறுப்பு நீடிக்கவும், மனைவியின் பொறுப்பு நிலைக்கவும் என்ன செய்வது என ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திவருகிறார். அதனால் அவர் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

ராஜினாமா செய்ய முடியாது!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சித் தலைவர் பொறுப்பு, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தி.மு.க-வின் ராணி வெற்றிபெற்றுள்ளார். அவர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவில் இல்லை என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், ``இந்த நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் தனித்தே போட்டியிட்டு 10 இடங்களைப் பிடித்தது.

கொல்லங்கோடு நகராட்சித் தலைவர் ராணி
கொல்லங்கோடு நகராட்சித் தலைவர் ராணி

தி.மு.க 10 இடங்களிலும், பா.ஜ.க ஐந்து இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் எஞ்சிய இடங்களையும் பிடித்தார்கள். கூட்டணி இல்லாமல் வெற்றிபெற்ற நாங்கள் எதற்காக மார்க்சிஸ்ட் கட்சிக்கு நகராட்சித் தலைவர் பொறுப்பைவிட்டுக் கொடுக்க வேண்டும்? இதைத் தலைமைக்கு விளக்கிச் சொல்வோம். ராஜினாமா செய்ய முடியாது" என்கிறார்கள்

கண்டுகொள்ளாத காங்கிரஸ்!

கோவை கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அதிருப்தியடைந்த தி.மு.க-வினர், மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியனைத் தோற்கடித்தனர். தி.மு.க சார்பில் களமிறங்கிய நித்யா மனோகரன் வெற்றிபெற்று நகராட்சித் தலைவராகப் பதவியேற்றார்.

காங்கிரஸ் கட்சியிலும் பலமாக உட்கட்சிப்பூசல் இருந்ததால் இதை யாருமே பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை. அத்துடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகரனுக்கு துணைத் தலைவர் பொறுப்பு கொடுத்து சமாளித்துவிட்டனர். அதனால் நித்யா மனோகரன் தன் பதவியை ராஜினாமா செய்யாமல் கட்சித் தலைமையிடம் விளக்கமளித்து விவகாரத்தை ஆஃப் செய்துவிட்டார்.

அதேபோல...

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, சி.பி.எம் சார்பில் சிவராஜன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு முன்னதாகவே தி.மு.க-வைச் சேர்ந்த விஷ்வபிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். சிவபிரகாஷ் சற்று தாமதமாக வந்ததால் அவர் வரும் முன்பே விஷ்வபிரகாஷ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்.

கூட்டணி தர்மத்தை மீறிக் கைப்பற்றப்பட்ட வெற்றி
கூட்டணி தர்மத்தை மீறிக் கைப்பற்றப்பட்ட வெற்றி

இதை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தக் கட்சியைச் சேர்ந்த உமாதேவி என்பவருக்கு துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. விஷ்வபிரகாஷ் ராஜினாமா செய்யாமல் துணைத் தலைவர் உமாவை சென்னைக்கு அழைத்துச் சென்று கட்சித் தலைமையைச் சமாதானப்படுத்திவிட்டாராம். ஆனால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக உமாதேவி, அவர் கணவர் பழனிசாமி ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க-வால் மட்டும் நாங்க ஜெயிக்கலை!

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சித் தலைவர் பொறுப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பாக கலாராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மையுடன் இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த புவனேஸ்வரி வேட்புமனு தாக்கல் செய்ததால், கலாராணி கண்ணீருடன் வெளியேறினார். கட்சித் தலைமையின் அறிவிப்புக்குப் பிறகும் புவனேஸ்வரி ராஜினாமா செய்யவில்லை.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பொறுப்பு, கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தி.மு.க சார்பாக தனியார் பள்ளியின் உரிமையாளரும், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவச் செயலாளருமான ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயந்தி போட்டி வேட்பாளராகக் களமிறங்கினார். அவரை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கிரிஜா திருமாறன் களமிறங்கினார்.

எதிர்த்தரப்பினர் நடத்திய குதிரைப் பேரம், வெளியிடத்துக்கு அழைத்துச் சென்றது போன்ற நடவடிக்கைகள் காரணமாக கிரிஜா திருமாறன் தோல்வியடைந்தார். மீண்டும் துணைத் தலைவர் தேர்தலிலும் கிரிஜா போட்டியிட்டும் அதிலும் அவருக்குத் தோல்வியே மிஞ்சியது.

எங்களின் வெற்றிக்கு தி.மு.க வாக்குகள் மட்டும் காரணம் இல்லை. அதனால் ராஜினாமா செய்ய முடியாது.
ராதாகிருஷ்ணன், நகராட்சித் தலைவரின் கணவர்

நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ``நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம். தி.மு.க-வின் வாக்குகளால் மட்டும் நாங்கள் வெற்றிபெற்றுவிடவில்லை. எங்கள் நிலைப்பாட்டை தலைவருக்கு விளக்கமாகக் கூறிப் புரியவைப்போம்” என்று முடித்துக்கொண்டார்.

தொடரும் போராட்டம்!

நீலகிரி, ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் பதவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளரான சகாதேவனை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க-வின் செல்வரத்தினம் வெற்றிபெற்று துணைத் தலைவரானார். கட்சித் தலைமையின் அறிவிப்புக்குப் பின்னரும் இதுவரை செல்வரத்தினம் பொறுப்பிலிருந்து விலகவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் பேருராட்சி துணைத் தலைவர் பொறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டி வேட்பாளராகக் களமிறங்கிய தி.மு.க-வின் தமிழ்செல்வன் வெற்றிபெற்றார். கீரனூர் பேரூராட்சி துணைத் தலைவர் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோதிலும், தி.மு.க வேட்பாளர் களமிறங்கியதால் மார்க்சிஸ்ட் ஒதுங்கிக்கொண்டது. இந்த நிலையில், கூட்டணி தர்மத்தை மீறிய தி.மு.க-வினரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடிவருகிறார்கள்.

தஞ்சாவூர் சர்ச்சை!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலைச் சந்தித்த நிலையில், தலைவராக தி.மு.க-வின் தாஹிரா அம்மாள் வெற்றிபெற்றார். துணைத் தலைவர் பொறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்தக் கட்சியின் சார்பாக நவாஸ் பேகம் களமிறங்கினார்.

ராம குணசேகரன்
ராம குணசேகரன்

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து தி.மு.க நகரச் செயலாளர் இராம.குணசேகரன் களமிறங்கி 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இஸ்லாமியர்களும், இந்துக்களும் சம அளவில் வசிக்கும் இந்தப் பகுதியில் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகள் ஒரே சமூகத்துக்கு ஒதுக்கியது சர்ச்சையான நிலையில், இரு கட்சிகளும் பேசி இராம.குணசேகரன் வெற்றியை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகளில் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கினார்கள். அதனால் அங்கு கடும் குழப்பம் ஏற்பட்டதால், இரு நகராட்சிகளிலும் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தலை நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர்.

ரேணுபிரியா
ரேணுபிரியா

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தக் கட்சி சார்பாக சற்குணம் மனுத்தாக்கல் செய்யவிருந்த நிலையில், தி.மு.க கவுன்சிலர் ரேணுபிரியா பாலமுருகன் என்பவர் தன்னிச்சையாகக் களமிறங்கியதால் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர். ரேணுபிரியா ராஜினாமா செய்வாரா என்பது குறித்து இதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை.

கட்சித் தலைமை அறிவித்த பின்னரும் இதுவரை வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்யவில்லை. சில இடங்களில், இந்தக் குளறுபடிகளுக்குக் காரணமானவர்கள் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை மீறியவர்கள் மீது தி.மு.க தலைமை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism