தி.மு.கவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தனி ஆளுமை செலுத்திய முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய அவரது சுயசரிதை நுாலான `நெஞ்சுக்கு நீதி' புத்தகம் தி.மு.கவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை இன்றைக்கு உள்ள தி.மு.க வினர் எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது. அதேநேரம் கருணாநிதியின் பேரன் உதயநிதி நடிகராக நடத்து வெளிவந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைபடத்தைப் பார்க்க தீவிர ஆர்வம் காட்டிவருகிறார்கள் உடன்பிறப்புகள். கட்சியின் தொண்டர்களுக்கும் டிக்கெட் எடுத்துக்கொடுத்து பார்க்க வைக்கும் பணியை சிறப்பாக செய்துவருகிறார்கள் மாண்புமிகு அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களும்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும், தி.மு.கவின் இளைஞர் அணிச் செயலாளராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். அதோடு கடந்த பத்து ஆண்டுகளாகத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் என்கிற அடையாளத்தையும் தன்னுடம் இணைத்துக்கொண்டவர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அவரது நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படமாக நெஞ்சுக்கு நீதி அமைந்துள்ளது. ஏற்கெனவே ஹிந்தியில் வெளியான Article 15 திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். தமிழகத்தில் மே 20 தேதியான இன்று இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே, திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் ஸ்டாலின், தயாரிப்பாளர் போனி கபூர், என தனக்கு நெருக்கமான ஒருசிலருடன் படத்தை பார்த்து தனது மகனின் நடிப்பையும் பாராட்டிவிட்டார் முதல்வர். மற்றொருபுறம் படத்தின் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயின்ட் நிறுவனம் இந்த படத்திற்கான புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டது. இணைய விளம்பரம், போஸ்டர் என்று அதகளப்படுத்திவரும் நிலையில், மற்றொருபுறம் ஆளும் கட்சியான தி.மு.கவினர் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கும் வைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திரைப்படம் வெளியாகும் முன்பே பல தி.மு.க நிர்வாகிகள் இந்த படத்தின் போஸ்டர்களை தங்கள் இணையதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அதோடு நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்தி போஸ்டர்களையும் பல இடங்களில் ஒட்டி தங்கள் அரசியல் விசுவாசத்தைத் தலைமைக்கு உணர்த்தியிருந்தனர்.

திரைப்படம் வெளியான இன்று பல திரையரங்குகளை தி.மு.க-வினர் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. பல மாவட்டங்களில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதல் நாள் காட்சிகள் முழுவதையும் தங்கள் சொந்தப் பணத்தில் புக் செய்திருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் கையில் டிக்கெட்டை கொடுத்து திரைப்படத்தை பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மற்றொருபுறம் அமைச்சர்கள் சிலரும் முதல் நாள் முதல் காட்சியை தங்கள் மாவட்டத்தின் நிர்வாகிகள் சகிதமாக தியேட்டரில் பார்த்துள்ளனர். அதை புகைப்படமாக எடுத்து தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகரிந்துள்ளனர். புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதனும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இருவருமே ஒன்றாக முதல் வரிசையில் அமர்ந்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என தி.மு.கவினர் பலரும் படத்தை பார்த்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரான தமிழரசியோ நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூன்று நாட்கள் காட்சிகளை மொத்தமாக புக் செய்துவிட்டார். அதே போல், கோவை மாவட்டத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கான டிக்கெட்களை மொத்தமாக வாங்கியிருக்கிறார் அந்த மாவட்ட தி.மு.கவினர்

சென்னையில் நெஞ்சுக்கு நீதி ஓடும் தியேட்டர்கள் நிரம்பி வழிய வேண்டும் என்று அந்தந்த பகுதியின் பொறுப்பாளர்களுக்கு வாய்மொழியாக சொல்லியிருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். பெரம்பலுாரில் காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். இதனால் தமிழ்த் திரையுலகில் வசூல் சக்கரவரத்திகளுக்கு இணையாக நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் காட்சிகளும் நிரம்பியுள்ளது. அதில் பெரும்பாலனவர்கள் கரைவேட்டியுடன் களத்தில் இறங்கிவிட்டார்கள். படத்தில் உதயநிதியின் படத்தின் கதையும் நன்றாக இருப்பதாக பேச்சு எழுந்துள்ளதால் தி.மு.க வினர் ஆர்பாட்டம் செய்யாமல் இருந்தாலே இந்த படம் அனைத்து தரப்பையும் கவர்ந்துவிடும்”என்கிறார்கள் திரைத்துறையினர்.

“தலைவர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தைப் படித்து தி.மு.கவின் வரலாற்றை அறிந்து அரசியல் செய்த காலம் மாறிவிட்டது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்து புகைப்படம் பதிவிட்டு அரசியல் செய்ய வேண்டிய காலம் இது” என்று நக்கலாகச் சொல்கிறார் மூத்த தி.மு.க நிர்வாகி ஒருவர்.