Published:Updated:

விலையில்லா வேட்டி,சேலை தனியாரிடம் கொள்முதலா? குற்றச்சாட்டும், துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் பதிலும்!

பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை கொடுக்கும் திட்டத்தின் நோக்கமே நெசவாளர்களுக்கு உதவுவதுதான். நோக்கத்தையே மறந்து தி.மு.க அரசு தனியாரிடம் கொள்முதல் செய்யவிருப்பதாக நெசவாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டுவருகிறது. சுமார் இரண்டு கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் ஆண்டு கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நெசவாளர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மே மாதமே நெசவாளர்களிடம் துணி நூலைக் கொடுத்துவிடும் அரசு. அவர்கள் நெய்து முடிக்க முடிக்க, கொஞ்சம் கொஞ்சமாக கொள்முதல் செய்யப்பட்டு, ஜனவரி மாதம் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவிடும். பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாக வருடந்தோறும் முதல்வர் பொறுப்பில் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைப்பார்கள். அதன் பின்னர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கிவரும் டி.யூ.சி்.எஸ்., அமுதம் போன்ற நியாய விலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும்.

நெசவாளர்கள்
நெசவாளர்கள்

2022, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஆனால், இன்னமும் கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் கொடுக்கப்படவில்லை என்கிற தகவல் கசிந்திருக்கிறது. அப்படியென்றால், வரும் பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை கொடுக்கப்பட மாட்டாதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. என்ன நடக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) மாநிலக்குழு உறுப்பினரும், நெசவாளருமான தங்கவேலிடம் பேசினோம். ``ஆண்டுதோறும் ஒன்றரைக் கோடி வேட்டியும், ஒன்றரைக் கோடி சேலையும் அரசு கொள்முதல் செய்கிறது. தேனி, விருதுநகர், மதுரை, நெல்லை, நாகர்கோவில், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் வாழும் கைத்தறி நெசவாளர்கள் மூலம் விலையில்லா வேட்டி, சேலை நெய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 1,000 குடும்பங்கள் பிழைக்கின்றன. அரசு ஒரு சேலைக்கு 200 ரூபாயும், ஒரு வேட்டிக்கு 75 ரூபாயும் கொடுத்து கொள்முதல் செய்கிறது.

தங்கவேல், கைத்தறி நெசவாளர் சங்கம்
தங்கவேல், கைத்தறி நெசவாளர் சங்கம்

துணியை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், ஊடை நூல், பாவு நூல் என இரண்டுவிதமான நூல்கள் தேவை. இரண்டையும் அரசுதான் கொடுக்கும். இந்த முறை பாவு நூலைக் கொடுத்துவிட்ட அரசு, ஊடை நூலை இதுவரை கொடுக்கவில்லை. எப்போதும் மே மாதமே இரண்டுவிதமான நூல்களும் கொடுக்கப்பட்டுவிடும். இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் தேர்தல் நடந்ததால், ஜூன் மாதத்திலாவது கொடுத்திருக்க வேண்டும். ஊடை நூல் இல்லாததால், தறிகளெல்லாம் ஓடாமல் நிற்கின்றன.

தறி
தறி

கைத்தறியில் சேலை நெய்வதற்கு 139 ரூபாய் 80 பைசாவும், பெடல் தறியில் சேலை நெய்வதற்கு 90 ரூபாய் 30 பைசாவும் அரசு கூலியாகக் கொடுக்கிறது. நூலுக்குக் கஞ்சி போட்டு, ராட்டினத்தில் நூல் சுற்றி, அதைப் பாவாக மாற்றுவதற்குப் பெயர் சைசிங். இந்த சைசிங் வேலைக்கே இரண்டு தறிகளுக்கும் 40 ரூபாய் போய்விடும். இதனால், கைத்தறிக்கு 100 ரூபாயும், பெடல் தறிக்கு 50 ரூபாயும்தான் கூலியாகக் கிடைக்கும். இவ்வளவு பிரச்னைக்கு மத்தியிலும் அரசுக்குத் தொடர்ந்து வேட்டி, சேலை உற்பத்தி செய்து கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த ஆண்டு தாமதமாகிவிட்டது, இருக்கும் இரு மாதங்களில் 40 சதவிகித அளவுக்குக்கூட வேட்டி சேலை உற்பத்தி செய்ய முடியாது. ஆண்டுதோறும் 60 சதவிகித வேட்டி, சேலை ஆர்டர்தான் நெசவாளர்களுக்குக் கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவிகித ஆர்டர் தனியார் முதலாளிகளுக்குச் சென்றுவிடும். அவர்கள் முன்பே நெய்துவைத்திருப்பதால், அரசு கேட்டவுடன் டெஸ்பாட்ச் செய்துவிடுவார்கள். தற்போது இந்த காலதாமதத்தைப் பார்த்தால், எங்களுக்குத் தெரிந்த வரையில் அரசு இந்த முறை முழுமையாகத் தனியாரிடம் கொள்முதல் செய்யவிருப்பதாகத் தெரிகிறது. அரசையே நம்பியிருக்கும் நெசவாளர்களை அரசு கைவிடக் கூடாது” என்ற தங்கவேல், சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

`பாவு, நூல் தர்றதில்லை; வறுமையில வாடுறோம்!’ - கஞ்சித் தொட்டி திறந்த கைத்தறி நெசவாளர்கள்
சேலை நெய்யும் நெசவாளர்
சேலை நெய்யும் நெசவாளர்
மாதிரி படம்

”* லாபத்தில் 9.5 சதவிகிதத்தை சொசைட்டிகளுக்கு அரசு வழங்குகிறது. இதில் 8 சதவிகிதம் வட்டிக்கே சென்றுவிடுகிறது. அதனால், இதை உயர்த்தி 15 சதவிகிதமாக வழங்க வேண்டும்.

* கைத்தறி சொசைட்டிகளுக்கு ஜி.எஸ்.டி விதிப்பதே தவறான செயல். ஆனால், மத்திய அரசு 2.5 சதவிகிதமும், மாநில அரசு 2.5 சதவிகிதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறார்கள். வருட இறுதியில் ஜி.எஸ்.டி ரிட்டர்னையும் கொடுக்கிறார்கள். ஆனால், ஜி.எஸ்.டி கட்டத் தவறினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். சொசைட்டிகலெல்லாம் நஷ்டத்தில் இயங்குவதால், ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

* நெசவாளர் காப்பீடு திட்டம், மருத்துவ அட்டை இரண்டு திட்டங்களையும் நிறுத்திவிட்டார்கள். இரண்டையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

* மழைக்கால நிவாரணம் 3,000 ரூபாய் கொடுக்க வேண்டும். பென்ஷன் 1,500 ரூபாய் வழங்கப்பட வேண்டும்

* தனியாரிடம் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்க நெசவாளர்களிடமே இலவச வேட்டி, சேலை ஆர்டரைக் கொடுக்க வேண்டும்” என்றார்.

கைத்தறியில் முதல்வர் ஸ்டாலின்
கைத்தறியில் முதல்வர் ஸ்டாலின்

நெசவாளர்களின் வேதனை குறித்தும், விலையில்லா வேட்டி சேலை எப்படிக் கொடுக்கப்படவிருக்கிறது என்பது குறித்தும் கைத்தறித்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``இந்த ஆண்டு என்பதல்ல, ஒவ்வோர் ஆண்டுமே, எல்லா ஆட்சியிலுமே 60 சதவிகித அளவுக்கான வேட்டி, சேலையை நெசவாளர்களை நெய்ய வைத்து, அதைக் கொள்முதல் செய்யும் அரசு, மீதமுள்ள 40 சதவிகித வேட்டி, சேலையை தனியாரிடமிருந்துதான் கொள்முதல் செய்துவருகிறது. அதனால் இது இந்த ஆட்சியில் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை இல்லை.

நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு
நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு

இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் உரிய நேரத்தில் நெசவாளர்களுக்கு ஆர்டர் கொடுக்க முடியவில்லை. ஆனால், எப்படியும் விலையில்லா வேட்டி, சேலையைப் பொங்கலுக்கு முன்னதாகக் கொடுத்தாக வேண்டும். இல்லையெனில், இதைவைத்து எதிர்க்கட்சிகள் பிரச்னையைக் கிளப்பும் என முதல்வர் நினைக்கிறார். அதனால், தனியாரிடம் கொள்முதல் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. நெசவாளர்களுக்கு அரசு நூல் கொடுத்தால்தான் அவர்கள் வேலையைத் தொடங்குவார்கள். அதுவே தனியார் என்றால் ஏற்கெனவே ரெடிமேடாக வேட்டி, சேலை நெய்து வைத்திருப்பார்கள், தேவைப்படும் நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்பதால்தான் அரசு கவலையின்றி இருக்கிறது. இது எப்போதும் தொடராது, இந்த ஓராண்டுக்கு மட்டுமே என்பதிலும் அரசு உறுதியாக இருக்கிறது!” என்றனர்.

பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்
பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்

அரசு என்ன முடிவில் இருக்கிறது என்பதை அறிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷிடம் பேசினோம். ``கடந்த வாரம் டெண்டர் ஃபைனலைஸ் ஆகிவிட்டது. எனவே நெசவாளர்களுக்கு உடனடியாக நூல் சென்று சேர்ந்துவிடும். எனினும், அதற்கு முன்பாகவே நெசவாளர்களிடம் குறைந்த மதிப்புக் கொள்முதல் (Low Value Procurement) மூலம் நூல் வாங்குவதற்கு அனுமதி கொடுத்திருந்தோம்” என்றவரிடம், ``தனியாரிடம் அரசு கொள்முதல் செய்யும் திட்டத்தில் இருப்பதாக நெசவாளர்கள் தரப்பில் அச்சம் கொள்கிறார்களே?’’ என்று கேட்டோம். ``அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பழைய நடைமுறை என்னவாக இருந்ததோ, அதையேதான் தொடரச் செய்கிறோம். இரு மாதங்களில் கைத்தறி வேலை முடிந்து, பொங்கலுக்குக் கண்டிப்பாக விலையில்லா வேட்டி, சேலை கொடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு