Published:Updated:

`உற்சாக சசிகலா; சந்திக்கத் துடித்த முன்னாள் அமைச்சர்கள்?!' - தஞ்சை விசிட் ஹைலைட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆதரவாளர்களைச் சந்தித்த சசிகலா
ஆதரவாளர்களைச் சந்தித்த சசிகலா ( ம.அரவிந்த் )

``சீக்கிரமே தமிழகம் முழுவதுமுள்ள கிராமம்தோறும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறேன். நாம கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி நம்ம கைக்கு சீக்கிரமே வரும். அதற்குச் சுற்றுப்பயணம் முக்கியமானதாக இருக்கும்'' என்றார்.

தஞ்சாவூரில் தங்கியிருந்தபடி ஆதரவாளர்களைச் சந்தித்துவந்த சசிகலா, நேற்று (07-11-2021) சென்னைக்குப் புறப்பட்டார். ``ஆதரவாளர்கள், உறவினர்கள் என எல்லோரையும் திருப்திப்படுத்திய மன நிறைவு எனக்கு ஏற்பட்டிருக்கு. சீக்கிரமே நமக்கு எல்லாம் கைகூடும்'' எனத் தன் கணவர் ம.நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமத்துக்குச் சென்றவர், நடராசனின் சகோதரரிடம் கூறி ஆசி வாங்கிச் சென்றது குடும்பத்தினரை நெகிழவைத்திருக்கிறது.

சசிகலா
சசிகலா

டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காகக் கடந்த 26-ம் தேதி தஞ்சாவூர் சென்ற சசிகலா, அருளானந்த நகர் அருகேயுள்ள பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கினார். 27-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், 29-ம் தேதி கமுதி பசும்பொன்னிலுள்ள தேவர் சமாதிக்குச் சென்று மரியாதை செய்த பிறகு மீண்டும் தஞ்சாவூருக்கு வந்தார்.

அதையடுத்து, நவம்பர் 1, 2, 5, 6 ஆகிய தேதிகளில் தினமும் மதியம் முதல் மாலை வரை தன் ஆதரவாளர்களைச் சந்தித்ததுடன், அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். `அ.தி.மு.க பொதுச்செயலாளர்’ எனக் குறிப்பிட்டு, தீபாவளி வாழ்த்து அறிக்கை வெளியிட்ட சசிகலா, தன்னைச் சந்திக்க வருபவர்கள் அனைவரும் மலர்க்கொத்து, பரிசுப்பொருள்கள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ``நான் நீங்க இருக்கும் இடத்துக்கே வந்து உங்களைச் சந்திக்கிறேன்'' எனத் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது அவர் ஆதரவாளர்களை உற்சாகமடையச் செய்திருக்கிறது.

சசிகலா வீட்டின் முன்பு திரண்ட ஆதரவாளர்கள்
சசிகலா வீட்டின் முன்பு திரண்ட ஆதரவாளர்கள்

சசிகலா தன் ஆதரவாளர்களைச் சந்திப்பதில் எந்த அளவுக்கு ஆர்வம்காட்டினாரோ, அதே அளவுக்குத் தன் உறவினர்களையும் அவர்கள் இல்லம் தேடிச் சென்று சந்தித்துவந்தார். சசிகலா வழக்கத்துக்கு மாறாக இந்த முறை முக்கிய உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடியது அவர் உறவினர்களுக்கே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சசிகலா நேற்று முன்தினம் தினம் தஞ்சாவூரில் தன் அண்ணன் மகன் மகாதேவனின் மனைவி சித்ராவை அழைத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், தன் கணவர் நடராசனின் அண்ணன் சாமிநாதனுக்கு நேற்று 85-வது பிறந்தநாள் என்பதால், விளார் கிராமத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சசிகலா, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன், அவரிடம் ஆசியும் வாங்கினார். அப்போது, சாமிநாதன் சசிகலாவிடம், ``நடராசன் இருந்திருந்தா நீங்க நெனச்சதை நடத்திக் காட்டி உன்னை உயர்ந்த பொறுப்பில் உட்காரவெச்சு பார்த்திருப்பான்'' என்றார். உடனே சசிகலா, ``நீங்க உடம்ப பத்திரமா பார்த்துக்கங்க. எதாவது தேவைன்னா தயங்காம எங்கிட்ட கேளுங்க'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

போஸ்டர்
போஸ்டர்

அப்போது நடராசனுக்கு நெருக்கமான ஒருவர், ``தம்பி திவாகரன் மேல உள்ள கோவம் இன்னும் போகலையா... அவர் உங்க மேல எவ்வளவு பாசம்வெச்சிருக்கார்னு உங்களுக்கே தெரியும்" எனக் கூறினார். உடனே சசிகலா, ``இப்ப அதைப் பத்திப் பேச வேண்டாம். அதற்கான நேரம் வரும். அப்ப பார்த்துக்கலாம்" என்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கரூர் மாவட்டத்தில் 'நமது தியாகத் தலைவி சின்னம்மா' முன்னேற்றப் பேரவையின் நிறுவனர் சோமசுந்தரம் தன் ஆதரவாளர்களுடன் வந்து சசிகலாவைச் சந்தித்தார். அப்போது, அரை அடி உயரம் 17 இன்ச் அகலம்கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட சிறுத்தை சிலையை சசிகலாவுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

சசிகலா வரவேற்புக்கு ரூ.192 கோடி செலவழித்தோமா? - தஞ்சை திருமண நிகழ்ச்சியில் கொதித்த டி.டி.வி.தினகரன்

``புலி மாதிரி பதுங்கிப் பாயாம சிறுத்தை மாதிரி துரோகிகளை உடனடியா வேட்டையாடணும். அதுக்காகத்தான் சிறுத்தை சிலை கொண்டு வந்தேன்'' எனச் சோமசுந்தரம் சொல்ல, சில நிமிடங்கள் சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த சசிகலா, கொங்கு மண்டலத்தில் என்ன பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினாராம்.

ஆதரவாளர்கள்
ஆதரவாளர்கள்

தீவிரமாகத் தன் ஆதரவாளர்களை சசிகலா சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், தஞ்சையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றவர்கள் உள்ளே செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்படியே மீறிச் சென்றவர்களையும் அங்கிருந்தவர்கள் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. கடும் கட்டுப்பாடுகளையும் மீறி பெண் ஆதரவாளர் ஒருவர் சசிகலாவுடன் போட்டோ எடுத்திருக்கிறார். அதையடுத்து, சசிகலாவின் உதவியாளர் கார்த்தி உடனடியாக அவரின் செல்போனை வாங்கி அந்த போட்டோவை டெலிட் செய்தாராம். கோபமடைந்த அந்தப் பெண் நிர்வாகி, ``பெட்டி கொடுத்ததும் வேற இடத்துக்கு தாவுற ஆளுங்க நாங்க கிடையாது. எப்போதும் சின்னம்மா பக்கம் நிக்குற ஆளுங்க. போட்டோவை வெச்சுக்கக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா?'' என சசிகலா முன்பே சத்தம் போட்டார். அதையடுத்து சசிகலா உதவியாளர் கார்த்தியிடம் கடிந்துகொண்ட சம்பவமும் நடந்ததாம்.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஒன்றியத் துணை சேர்மன் ஒருவர், ``சசிகலா பக்கத்துல இருக்குறவங்க யாரும் சரியில்லை. அதனாலதான் அவங்க வளர்ச்சி தடைப்படுது. எவ்வளவு கூட்டம் வந்திருக்கு, ஆனா உட்காரப் போதுமான நாற்காலி போடலை, குடிக்கத் தண்ணீர்வெக்கலை. உங்ககிட்ட பணம் இல்லையா சொல்லுங்க... நானாவது தண்ணீர் வாங்கிவெக்கிறேன். சின்னம்மா சசிகலா நல்லவங்க. ஆனா, அவங்க கவனத்துக்கு உண்மையான தகவலைச் சுற்றியிருப்பவர்கள் யாரும் கொண்டு செல்வதில்லை" என நீண்ட நேரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடுகடுத்துக்கொண்டே இருந்தார்.

வெண்கலத்தில் செய்யப்பட்ட சிறுத்தை சிலை வழங்கிய ஆதரவாளர்கள்
வெண்கலத்தில் செய்யப்பட்ட சிறுத்தை சிலை வழங்கிய ஆதரவாளர்கள்

சசிகலா, ஆதரவாளர்கள், உறவினர்கள் எல்லோரிடமும், ``இப்பதான் நமக்கு டைம் நல்லாருக்கு. சீக்கிரமே தமிழகம் முழுவதுமுள்ள கிராமம்தோறும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறேன். நாம கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி நம்ம கைக்கு சீக்கிரமே வரும். அதற்குச் சுற்றுப்பயணம் முக்கியமானதாக இருக்கும்" என்றதாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் இந்தப் பேச்சுதான் அவரின் தஞ்சைப் பயணத்தின் முத்தாய்ப்பான விஷயம் எனப் பலரும் சொல்லிவருகின்றனர்.

30 வருடங்களுக்கு பிறகு தஞ்சாவூரில் தீபாவளி... உற்சாக  சசிகலா.. நெகிழ்ந்த  உறவுகள்!

இந்த நிலையில், நேற்று காலை 9:30 மணியளவில் சசிகலா சென்னைக்குப் புறப்பட்டார். அவரிடம் சென்னையில் மழை பெய்துகொண்டிருக்கிறது என்ற தகவலை உதவியாளர் கார்த்தி சொல்ல, ``திட்டமிட்டா தேக்கம் இருக்கக் கூடாது. கிளம்பிடலாம்" எனச் சொல்லியிருக்கிறார். உடனே, நடராசன் தம்பி ராமச்சந்திரன் குடும்பத்தினர் கற்பூரம் ஏற்றி, திருஷ்டி கழித்து சசிகலாவை வழியனுப்பிவைத்தனர்.

அதைத் தொடர்ந்து, காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இளவரசியிடம், ``எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. இந்த முறை திரும்பிப் போறப்ப எல்லோரையும் சந்தோஷப்படுத்துன திருப்தி ஏற்பட்டிருக்கு" என சசிகலா சொல்ல, இளவரசியும் ஆமாம் எனத் தலையசைத்தாராம். பின்னர் சசிகலா கார் கிளம்பியதும், அவர் காருக்குப் பின்னால் சென்ற காரில் சசிகலாவுக்குப் பிடிக்கும் என்பதற்காக விரால் மீன், காடை, வயல் நண்டு உள்ளிட்டவற்றை ஐஸ் பெட்டியில் வைத்துக் கொடுத்து ஆனந்தமடைந்தனர் சசிகலாவின் உறவினர்கள்.

சசிகலா
சசிகலா

மழை முடிந்த பிறகு, தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்க சசிகலா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேர் சசிகலாவைச் சந்திக்கவிருப்பதாகத் தகவல் பரவிய நிலையில், அதை சசிகலா தரப்பு திட்டவட்டமாக மறுத்திருந்தது.

இது குறித்து சசிகலா தரப்பில் சிலரிடம் கேட்டோம். ``இந்த நேரத்தில் யார் சின்னம்மாவைச் சந்தித்தாலும், அது வெளியே தெரிந்தால் எங்களுக்குத்தான் சாதகம். அதனால் எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முக்கியப் புள்ளி ஒருவர் மூலமாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சில தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தே சின்னம்மாவுக்கு ஆதரவாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் அவரைச் சந்திப்பார்கள்" என்றனர்.

``சசிகலா பாதை வேறு...என் பாதை வேறு!'' - டி.டி.வி.தினகரன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு