Published:Updated:

புகழேந்தி வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்காக `திக் திக்’ மனநிலையில் எடப்பாடி - பன்னீர்!

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

``கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாவலர் பகதூருக்கு நேர்ந்ததுபோல இந்த வழக்கு போட்டுள்ள எனக்கும் அச்சுறுத்தல் வரலாம். அதனால் தமிழக முதலமைச்சரிடம் பாதுகாப்பு கேட்கவிருக்கிறேன்” - பெங்களூரு புகழேந்தி

எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்த அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்ய எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் வருகின்ற 13-ம் தேதி உத்தரவிடப்படும் என்று தெரிவித்திருப்பதால் அந்த நாளை எதிர்பார்த்து இருவரும் `திக் திக்’ மனநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்த சிலர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

காரணம், வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லையென்றால், மறுநாளான 14-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் கட்டாயம் ஆஜர் ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த வழக்கு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``எல்லோரையும்போல் அமைதியாகப் போவேன் என்று என்னையும் நினைத்து விட்டார்கள். என் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கியவர்களை சும்மா விட மாட்டேன். இனி அதிமுக தொண்டன் யாரையும் கட்சியைவிட்டு நீக்க அவர்கள் இருவரும் யோசிக்க வேண்டும். வருகின்ற 14- ம் தேதி அவர்களுக்குப் பாடம் புகட்டும் நாள்" என்று பேசிவருகிறார் பெங்களூர் புகழேந்தி.

நடந்தது என்ன?

புகழேந்தி
புகழேந்தி

`கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதாகவும், கட்சியினர் யாரும் இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்றும் கடந்த ஜூன் 14-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இந்த அறிவிப்பு தன் நற்பெயர், அரசியல் பொதுவாழ்க்கைக்குக் களங்கம் விளைவிப்பதாக'க் கூறி எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்கை புகழேந்தி தாக்கல் செய்திருந்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர், கட்சித் தலைமைக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது இதுவே முதன்முறை என்கிறார்கள்.

எடப்பாடி - ஓபிஎஸ்
எடப்பாடி - ஓபிஎஸ்

இந்தநிலையில், `இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்; வழக்கில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்று சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் மனு செய்த அதேவேளையில், வழக்கை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றத்திலும் தனித்தனியாக மனு செய்தார்கள்.

அந்த மனு விசாரணையில்தான் வருகிற 13-ம் உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இரு தரப்பும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பரபரப்பான வாதங்கள் நடந்தன.

புகழேந்தி தாக்கல் செய்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ``சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுவருவதால், இருவரும் ஆஜராக முடியவில்லை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித்துணைத் தலைவர் பொறுப்பில் இருவரும் இருப்பதால், நேரில் ஆஜராவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று மனுத்தாக்கல் செய்தனர்.

கூட்டணி வைப்பது; தோற்ற பிறகு விமர்சிப்பது - பா.ம.க-வுக்கு இதே வழக்கமாகிவிட்டது - புகழேந்தி காட்டம்

அன்றைய தினம் ஆஜராகாததற்கான காரணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதல் விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராவது கட்டாயம் என்று கூறியவர், ஆஜராக விலக்கு அளிக்க எடப்பாடி-ஓ.பி.எஸ் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, 'செப்டம்பர் 14 -ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டார். இதனால் புகழேந்தி தரப்பு உற்சாகமானது.

ஆனால், இதற்கிடையே எடப்பாடியும் ஓ.பி.எஸ்-ஸும் வழக்கை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்ததில்தான் 13-ம் தேதி உத்தரவிடப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
வி. நரேஷ் குமார்

இது குறித்து பெங்களூர் புகழேந்தியிடம் பேசினேன். ``வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஓபிஎஸ்-இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் சிறப்பு நீதிமன்றத்தால் மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்றம் நடப்பதால் எதிர்க்கட்சித் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருக்கும் தங்களுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கேட்டுவருகின்றனர். சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகவேண்டிய முதற்கட்டத்தில் இந்த வழக்கு இருப்பதால் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீண்டும் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து வருகிற 14-ம் தேதி நேரில் ஆஜராக கண்டிப்புடன் உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் வழக்கைத் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றத்தில் அவர்கள் முறையிட்டதில் வருகிற 13-ம் தேதி உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

'12 மணி நேரமா பால் காய்ச்சினார்..?' - அ.தி.மு.க-விலிருந்து புகழேந்தி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

சிறப்பு நீதிமன்றத்தில் இருவரின் மனுக்களும் தொடர்ந்து தள்ளுபடி ஆனது அவர்களுக்கு பெரும் பின்னடைவுதான்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. கட்சியையும், தலைமையையும் களங்கப்படுத்திப் பேசியவருக்கு எதிராக பதில் கருத்து கூறினேன். இது தவறு என்று, கட்சியின் கொள்கையைக் களங்கப்படுத்திவிட்டதாகக் கூறி என்னை நீக்கினார்கள். என்னை கட்சியினர் யாரும் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் அறிவித்தனர். இது எப்படிச் சரியாகும்? என் மனைவி, மகன், உறவினர், நண்பர்கள் அதிமுக-வில் உறுப்பினராக இருக்கிறார்கள். அவர்கள் என்னோடு தொடர்புகொள்ளக் கூடாதா... இது எப்படிச் சாத்தியம்? நான் கட்சிக்காகத்தானே உழைத்தேன்... ஊடகங்களில் பேசினேன். இவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நீக்கலாமா? இந்த வழக்கின் மூலம் இனி உண்மையான கட்சிக்காரர் ஒருவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் சாதாரண விஷயம் இல்லை என்பதை இந்த வழக்கு அவர்களுக்குப் புரியவைக்கும். கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாவலர் பகதூருக்கு நேர்ந்ததுபோல இந்த வழக்கு போட்டிருக்கும் எனக்கும் அச்சுறுத்தல் வரலாம். அதனால் தமிழக முதலமைச்சரிடம் பாதுகாப்பு கேட்கவிருக்கிறேன்'' என்றார்.

புகழேந்தி
புகழேந்தி

தள்ளுபடி செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி-ஓ.பி.எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜயராகவன், ஏ.நடராஜன், ``தவறு செய்த ஓர் ஊழியரை நீக்கியதற்கு தனியார் நிறுவனத்தின் மீது அவதூறு வழக்கு தொடர முடியாது. அப்படி அனுமதித்தால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்படும். கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்துகொண்டதால் புகழேந்தி நீக்கப்பட்டார். பொதுமக்கள் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அது கட்சிக்காரர்களுக்கான அறிக்கை என்பதால் அவதூறு ஆகாது, புகாரில் அவதூறுக்கான எந்த சாராம்சமும் இல்லை. ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர், கட்சி விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். விதியை மீறி நடந்துகொண்டதால் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டனர். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், கட்சியிலிருந்து நீக்கவும் முழு அதிகாரம் உள்ளது. புகழேந்தி 2017-ல் இதே வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் வெளியேற்றப்பட்டார். ஆனால், அதற்காக அவதூறு வழக்கு தொடர்வது இதுதான் முதன்முறை. எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று வாதிட்டனர்.

Tamil News Today: `அதிமுக-வில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்ட விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆஜராக சம்மன்!

புகழேந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், `வழக்கைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. இதற்கு பதில் மனு தாக்கல் செய்யவிருக்கிறேன்' கேட்டுக்கொண்டார்.

அந்த அடிப்படையில்தான், வழக்கு தள்ளுபடி பற்றி வருகின்ற 13-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிடும் எனக் கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் எட்டப்படி-ஓ.பி.எஸ்-ஸுக்கு புகழேந்தி தாக்கல் செய்திருக்கும் அவதூறு வழக்கு குடைச்சலைக் கொடுத்துவருகிறது. ஒருவேளை வழக்கு தள்ளுபடி ஆகாவிட்டால், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பலரும் இதுபோல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆரம்பித்துவிடுவார்கள் என்று இருவரும் 13-ம் தேதியை எதிர்நோக்கி கவலையுடன் `திக் திக்’ மனநிலையில் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.


முடிவு... செப்டம்பர் 13-ம் தேதி தெரிந்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு