Published:Updated:

`பி.கே வியூகத்தில் ஏ.கே..!'- இந்தியாவின் ஆன்மாவை கெஜ்ரிவால் கைப்பற்றியது எப்படி?

கெஜ்ரிவால் - பிரஷாந்த் கிஷோர்
கெஜ்ரிவால் - பிரஷாந்த் கிஷோர்

`சமூக ஊடகப் போரில் ஆரம்ப கட்டத்திலேயே நாங்கள் முன்னிலையில் இருந்ததை உணர்ந்தோம். சமூக ஊடக யுக்திகள் டெல்லி வாக்காளர்களையும் தாண்டி அனைத்து இடங்களுக்கும் பரவும் திறன் கொண்டது. அது எங்களுக்கு மிகவும் அருமையாக வேலை செய்தது.’

டெல்லியை மையமாக வைத்து இயங்கும் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது முதல் முதல்வர் பதவியை தன்வசப்படுத்தி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று வெளியாகி வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தைத் தந்துள்ளதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் ஒரு உள்ளாட்சித் தேர்தல் என மொத்தம் 6 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

ஆனால், இன்றைய தேர்தலில்தான் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு பக்காவான அரசியல் கட்சியாக தேர்தலைச் சந்தித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்தக் கட்சி பெரும்பான்மையையும் தாண்டி 60 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளதற்கு ஆம் ஆத்மியின் பிரசார வியூகம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தேர்தல் களப்பணியாற்றி வெற்றி பெறவைத்த தேர்தல் வித்தகரின் ஐ- பேக் நிறுவனத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து இந்த வியூகத்தை வகுத்துள்ளார்.

பள்ளிக் கல்வி!

கெஜ்ரிவாலின் கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் அவரது அரசு கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்தது. டெல்லியில் மாணவர்களின் கல்வி இடைநிற்றல் சதவிகிதத்தைக் குறைப்பதை தன் பெரும் குறிக்கோளாக எடுத்துக்கொண்டு செயல்பட்டால் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்காக டெல்லியின் கல்வித்துறை, துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அவர் கல்வித்துறை அலுவலகங்களிலும் பள்ளிகளுக்கும் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்கும் விஷயங்களைக் கவனித்து வந்தார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான சில சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆம் ஆத்மியின் இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் தேர்தலில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதே ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.

குடிநீர், மின்சாரம்!

டெல்லியில் பல படிகளில் மக்களிடம் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஏ, பி பிரிவுகளில் உள்ளவர்களுக்கு 25 சதவிகிதமும், அடுத்தபடியாக உள்ளவர்களுக்கு 50 சதவிகிதமும் நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவைக் கட்டணத்தில் 100% தள்ளுபடியும் வழங்கப்பட்டது. இது டெல்லியில் உள்ள வாடகை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதேபோல் மின்சார கட்டணத்திலும் முதல் 200 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாகவும் 201 முதல் 400 வரை பயன்படுத்துபவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தைப் பொதுமக்கள் உட்பட வியாபாரிகளும் வெகுவாகப் பாராட்டினார்கள். இப்படி நடுத்தர மக்களுக்கு அத்தியாவசியமான கல்வி, குடிநீர், மின்சாரம் போன்றவற்றில் சலுகைகள் செய்ததன் மூலம் வெகுஜன மக்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மதிப்பு தானாக உயர்ந்தது.

சமூகவலைதள போர்!

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்த அளவுக்கு உழைத்தார்களோ அதே அளவுக்கு சமூக வலைதளங்களும் செயல்பட்டுள்ளன. பிரஷாந்த் கிஷோரின் முக்கிய தேர்தல் யுக்தியான தீம் பாடல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வெகுவாக கைகொடுத்தது. `தொடரட்டும் கெஜ்ரிவால்’ என்ற பாடல் அனைத்து பிரசார கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என டெல்லி முழுவதும் எதிரொலித்தது.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி

இது தவிர, மீம்ஸ்கள், சினிமா பாடலுடன் கூடிய தேர்தல் திட்டங்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் போன்றவைகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக ஆம் ஆத்மியின் வார் ரூம் பணிகளில் இணைந்து இரவு பகலாக வேலை செய்துள்ளனர். ‘சமூக ஊடகப் போரில் ஆரம்ப கட்டத்திலேயே நாங்கள் முன்னிலையில் இருந்ததை உணர்ந்தோம். சமூக ஊடக யுக்திகள் டெல்லி வாக்காளர்களையும் தாண்டி அனைத்து இடங்களுக்கும் பரவும் திறன் கொண்டது. அது எங்களுக்கு மிகவும் அருமையாக வேலை செய்தது’ என்று 23 வயதான ஆம் ஆத்மியின் ஊடக ஆய்வாளர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

மாற்றம் தந்த ஷாஹீன் பாக்!

சமூக வலைதள பிரசாரம் ஓரளவுக்கு கைகொடுத்தாலும் ஆம் ஆத்மிக்கு மாற்றம் தந்தது என்னவோ ஷாஹீன் பாக் போராட்டங்கள்தான். இந்தப் போராட்டங்கள் பா.ஜ.க-வுக்கு குடைச்சலைக் கொடுத்தன. குடியுரிமைப் போராட்டங்களைப் பிரசாரமாகவும் கையிலெடுத்து, பா.ஜ.க போராட்டக்காரர்களைத் தாக்குவதைவிட அமித் ஷா, மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் இதில் கெஜ்ரிவாலை தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். ஒருகட்டத்தில் பா.ஜ.க மத ரீதியாக ஷாஹீன் பாக் போராட்டத்தைக் கையாண்டது. பா.ஜ.க தலைவர்கள் கெஜ்ரிவாலை `பயங்கரவாதி' என விமர்சித்தனர். இதனால் பிரசாரத்தின் தொனியே மாறிப்போனது.

amit shah and modi
amit shah and modi

அதுவரை வளர்ச்சியை முன்னிறுத்தி மட்டும் பேசிவந்த ஆம் ஆத்மி, அதன்பின் பா.ஜ.க-வுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரசாரத்தை மாற்றி அமைத்தது. பா.ஜ.க பேசியதையே அவர்களுக்கு எதிராகத் திருப்பினர். வீதியெங்கும் ரோட் ஷோக்களை நடத்திய ஆம் ஆத்மி, அப்போது, `கெஜ்ரிவால் உங்கள் மகனா அல்லது பா.ஜ.க சொல்வதுபோல பயங்கரவாதியா என்பதைத் தீர்மானியுங்கள்' என்று தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

பி.கே வியூகத்தில் ஏ.கே!

இந்தத் தேர்தலில் வளர்ச்சியை முன்னிறுத்தியே கெஜ்ரிவால் சந்தித்தாலும், கடந்த முறை போல் பா.ஜ.க டஃப் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கெஜ்ரிவால் தேடியவர்தான் பிரசாந்த் கிஷோர். ஏற்கெனவே பா.ஜ.க எதிர்ப்பில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. கிடைத்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். அதேபோல் கெஜ்ரிவால் நினைத்ததைப்போல அவருக்கு எல்லா வகையிலும் உதவியது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். குறிப்பாக பிரசார பாடல், ரோட் ஷோ, வீட்டுக்குச் சென்று மக்களை சந்திப்பது, சமூகவலைதள பிரசாரம் என அனைத்திலும் புது யுக்திகளைக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் கெஜ்ரிவால் வீட்டிலேயே இருந்து ஐபேக் டீம் வேலை பார்த்தது.

பிரஷாந்த் கிஷோர் - கெஜ்ரிவால்
பிரஷாந்த் கிஷோர் - கெஜ்ரிவால்

ஏற்கெனவே பா.ஜ.க எதிர்ப்பில் இருந்த பிரசாந்த் கிஷோர் குடியுரிமைச் சட்டத்தை தீவிரமாக எதிர்த்து வந்த நிலையில், தனது கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து டெல்லியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டும் அதற்கு எதிராக வேலை பார்த்தார். இதனால் பா.ஜ.க-வை எப்படிக் கையாள்வது என்பதை அறிந்து பர்சனல் ஆலோசகர்போல் கெஜ்ரிவாலுக்கு அனைத்தையும் கவனித்தார் பிரசாந்த் கிஷோர். குடியுரிமை சட்டம், அதைத் தொடர்ந்த ஷாஹீன் பாக் போராட்டம் என அனைத்துக்கும் கெஜ்ரிவால் எடுத்த நிலைப்பாட்டுக்குப் பின்னால் இருந்தது கிஷோர்தான் என்கிறது டெல்லி வட்டாரம். இதற்காக கிஷோரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கியது தனிக்கதை.

இதனால்தான் டெல்லி வெற்றி குறித்து, ``இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி'' என ட்வீட் பதிவிட்டுள்ளார் கிஷோர். இந்தியாவின் ஆன்மாவை டெல்லி மக்கள் காப்பாற்றினார்களோ இல்லையோ, இந்த வெற்றிக்குப் பிறகு ஐபேக் நிறுவனத்துக்கு ஏறுமுகம்தான் என்கின்றனர். ஏற்கெனவே மம்தா, ஸ்டாலினுடன் பணியாற்றி வரும் கிஷோரை டெல்லி வெற்றிக்குப் பிறகு இன்னும் சில அரசியல் கட்சிகள் நாட வாய்ப்புள்ளது.

பின் செல்ல