Published:Updated:

தேர்தல் கிசுகிசு

தேர்தல் கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

தேர்தல் கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
தேர்தல் கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் கிசுகிசு

“ஒதுங்கி இருந்தாலும் பரவாயில்லை… தேர்தல் செலவுக்காச்சும் கொஞ்சம் ஒதுக்கிக் கொடுங்க” என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்திருக்கிறார் பிரபல ‘டோக்கன் புகழ்’ தலைவர். ஆனால், அம்மையார் அசைந்து கொடுக்கவில்லையாம். அதனால்தான் சில வேட்பாளர்களையே நேரில் அனுப்பி, “அம்மா... ரொம்ப சிரமப்படுறோம். பார்த்து ஏதாவது பண்ணுங்க” எனச் சொல்லச் சொன்னாராம். எவ்வளவு கெஞ்சியும் அம்மையாரிடமிருந்து சிறு அசைவும் இல்லையாம்.

எப்போதுமே கட்சியைவிடக் கடவுளை நம்புகிறவர் ‘துணை’யானவர். பரபரப்பான தேர்தல் வேலைகளை ஒருபுறம் பார்த்துக்கொண்டே குலதெய்வக் கோயிலில் வழிபாடு நடத்தியிருக்கிறார். “இன்னும் நாலு வருஷம்... நரக வேதனையா இருக்கும். தாங்கித்தான் ஆகணும்” என அருள்வாக்குச் சொல்லப்பட, துணையானவர் ரொம்பவே நொந்துபோய்விட்டாராம்.

சின்னத் தளபதிக்கு நெருக்கம் என்பதால், ‘பரோட்டா காமெடி’ நடிகரை பரப்புரைக்கு அழைக்க நினைத்திருக்கிறது தி.மு.க. சின்னத் தளபதியும் காமெடிக்காரரிடம் பேச, “ஐயோ சாமி... ஆள விடுங்கப்பா, வடிவேலு பட்ட பாடு பத்தாதா?” என பார்ட்டி எஸ்கேப்பாம். “அடுத்த ஆட்சியில சிபாரிசுக்கு வருவீங்கல்ல... அப்ப பார்த்துக்குறோம்” என இப்போது மிரட்டல் வேலைகளும் தொடங்கியிருக்கின்றனவாம்.

கூட்டணி விஷயத்தில் குழப்பியதால் கிச்சன் கேபினெட் மீது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் கப்பல் தலைவர். புதிதாக அமைத்திருக்கும் கூட்டணியால் பசைப் பலன்கள் எதுவுமே கிடைக்கவில்லையாம். ‘செலவுக்கும் வாய்ப்பில்ல, ஜெயிக்கவும் வாய்ப்பில்லங்கிற நிலையில வேட்பாளர்களைத் திண்டாடவெச்சுட்டோமே’ என மனம்கலங்கிய தலைவர், மச்சானுக்குவிட்ட டோஸும் எக்கச்சக்கமாம்.

தேர்தல் கிசுகிசு

சாதிரீதியான சங்கடத்தை உருவாக்கி, தன்னைத் தவிர பிற வேட்பாளர்களை வீழ்த்தும் வித்தை தெரிந்தவர் குட்கா அமைச்சர். கடந்த தேர்தலில் இவர் செய்த இதே பாணி உள்ளடியால், மூன்று தொகுதிகளை இழந்தது அ.தி.மு.க. இப்போதும் ‘முத்தான’ மாவட்ட நிர்வாகி களமிறங்கியிருக்கும் கோட்டை புகழ் தொகுதியில், சாதி நிர்வாகியைப் போட்டிக்கு இறக்கிவிட்டதிலும் குட்கா அமைச்சரின் உள்ளடி உள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்தவர் தோல்வியில் அவருக்கு அப்படி என்னதான் சந்தோஷமோ?!

போகிற இடங்களில் சரிவரக் கூட்டம் இல்லையென்றால் ரொம்பவே கோபித்துக்கொள்கிறாராம் நடு நாயகர். அடிக்கிற வெயிலில் ஆட்களைத் திரட்டுவதற்குள் மய்யத்தாருக்கு மண்டை காய்கிறது. இதற்கிடையில் ஓய்வு, உணவு, தங்குமிடம், தூங்குமிடம் குறித்தெல்லாம் விவரங்கள் கேட்டு நாயகர் துளைக்க, “தலைவா இது ஷூட்டிங் இல்ல… தேர்தல்” என பதில் சொல்லிப் பாடாய்ப்படுகிறார்களாம் நிர்வாகிகள்.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே சுயேச்சையாகப் போட்டியிட்ட ஹில்ஸ் தலைவர், இந்தமுறை சீட் கிடைக்காத நிலையிலும் அமைதியாக இருப்பது பலருக்கும் ஆச்சர்யம். ‘விரக்தியை வெளிப்படுத்த முடியாமல் அமைதி காக்கிறார்’ என அவரின் ஆதரவாளர்கள் நினைக்க, ஆளுங்கட்சியைப் பாராட்டி மீடியாக்களிலும் ஹில்ஸ் தலைவர் முழங்கத் தொடங்க, பலரும் திகைத்தே போனார்கள். பின்னர்தான் தெரிந்தது… அவர் தொகுதியைக் கூட்டணியின் பழக்கட்சி வற்புறுத்தியபோதே ஹில்ஸ் தலைவரை அழைத்து, கவனிப்பை பலமாக்கி அனுப்பியதாம் தலைமை. ‘சீட் கிடைச்சிருந்தாக்கூட இவ்வளவு ‘செல்வாக்கு கிடைச்சிருக்காது’ என மிக நெருக்கமானவர்களிடம் சிலிர்க்கிறாராம் ஹில்ஸ்!

கூட்டங்களில் பயங்கரத் தெம்பாகச் சீறினாலும், உள்ளுக்குள் செலவுக்கு வழியில்லையே என நொந்துகிடக்கிறார் அண்ணன். தருவதாகச் சத்தியம் செய்த பலரும் இப்போது கைப்பேசியை எடுப்பதே இல்லை. பகிரியில் தகவல் அனுப்பினால் சுத்தமாக ரெஸ்பான்ஸ் இல்லையாம். நிறைய பெண் வேட்பாளர்களையும் நிறுத்திவிட்டோமே என்கிற கவலையில், குறைந்த வட்டிக்குக் கடன் கேட்க முடிவெடுத்திருக்கிறாராம். ‘ஃபைனான்ஸில் பணம் வாங்கி பாலிடிக்ஸ் பண்ற ஒரே ஆள் நான்தான்’ என அதையும் சாதனையாக அண்ணன் பேசினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. புஹாஹா!

மலர்க் கட்சியை நம்பி பாளையத்துத் தொகுதியில் பரப்புரையையே தொடங்கிய நடிகைக்கு, கடைசியில் அல்வா கொடுத்துவிட்டது தலைமை. மஞ்சள் சட்டை மந்திரிக்குத் தொகுதி கைமாறிவிட்டது. விரக்தியில் வீட்டுக்குத் திரும்பிய நடிகையிடம், அமைச்சர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. “உங்களுக்கு உண்மையிலேயே தொகுதியில் நல்ல மவுசு. மன வருத்தப்படாமல் எனக்காகவும் நீங்க பிரசாரத்துக்கு வந்தீங்கன்னா நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீங்க என்ன கேட்டாலும் கைமாறு காட்ட ரெடி” என்றாராம் மஞ்சள் சட்டை மந்திரி. “நோ!” என முகத்தில் அடித்தாற்போல் பதில் சொன்னாராம் நடிகை!

நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்தும், கூட்டணிக் கட்சிக்காரர்களிடம் கண்ணீர்விட்டு அழுதும் பரப்புரை செய்த ‘ஊர்’ பெயரை முன்னொட்டாகக்கொண்ட அமைச்சருக்கு, திடீரென முதன்மைப் புள்ளியிடமிருந்து போன் வந்திருக்கிறது. “ஜெயிக்கிறோமோ தோக்கிறோமோ பரவாயில்ல… இப்படியெல்லாம் பிரசாரம் பண்ணி சுய மரியாதையை இழக்காதீங்க” என்றாராம் முதன்மைப் புள்ளி. சுய மரியாதையைப் பற்றி யார் சொல்லிக் கொடுக்குறாங்க பார்த்தீங்களா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தேர்தல் கிசுகிசு

காவிக் கட்சியில், எதிர்பார்த்த பலருக்கும் சீட் கிடைக்கவில்லை. ஆனால், எதிர்பாராத சிலருக்கு அடித்தது ஜாக்பாட். இதன் பின்னணியில் பெரிய அளவில் ‘ஸ்வீட் பாக்ஸ்’ விளையாட்டு நடந்ததாகச் சொல்லிப் புலம்புகிறார்கள் அதிருப்தி புள்ளிகள். அதை அப்படியே மேலிடத்துக்குப் புகாராகவும் அனுப்பியிருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு, நிச்சயம் யாத்திரையாரைக் கட்சித் தலைமை மாற்றும் என்கிறார்கள் உறுதியாக!

குடும்பத்துக்கு எதிராக ரொம்பவே பொங்கிய மணியான மந்திரியை எதிர்த்து, அவரது அக்கா மகனையே நிறுத்தி குடும்பத்துக்குள் கம்பெடுத்துக் கொடுத்திருக்கிறது போட்டிக் கட்சி. ‘பொடிப்பய, எவ்வளவு ஓட்டைப் பிரிச்சிடுவான்?’ என மந்திரி அசால்ட்டாக நினைக்க, சொத்து தொடங்கி குடும்ப ரகசியங்கள் வரை அம்பலமாக்கி மந்திரியை வறுத்தெடுக்கிறாராம் அக்கா மகன். வார்த்தைகள் மட்டுமல்ல… இவர் பிரிக்கும் வாக்குகளும் மந்திரிக்கு மண்டைவலியைக் கொடுக்கும் என்கிறார்கள் நிலவரம் அறிந்தவர்கள்.

சிறப்பு அதிகாரியை சஸ்பெண்ட் செய்வதற்குள் ஆளும் தரப்புக்குப் போதும் போதும் என்றாகிவிட்டதாம். காக்கி வட்டாரத்தின் கோஷ்டிப் பூசலையெல்லாம் சமாளித்த சிறப்பு அதிகாரி, கட்சிரீதியான நெருக்கடிகளைப் பார்த்து மலைத்துப்போனாராம். ‘கதர்க் கட்சித் தலைவருக்கெல்லாம் நான் என்ன கொடுமை பண்ணினேன்... அவரெல்லாம் என்னை ஏன் கண்டிக்கிறார்?’ எனக் குமைந்தவர், ஒருகட்டத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கையை ஏற்றுக்கொண்டாராம்.

தேர்தல் கிசுகிசு

கடந்த தேர்தலில், தங்கை ஆதரவாளர்களுக்கு ஐந்து இடங்களை ஒதுக்கிக் கொடுத்தார் ‘விடியல்’ தலைவர். ஆனால், இந்தமுறை தங்கையின் ஆதரவாளர்களில் ஒருவருக்குக்கூட சீட் இல்லை. ஆனாலும் மனம் நோகாமல் பரப்புரைப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் தங்கையார். ‘முக்கிய இடங்களுக்கு அழைக்க வேண்டாம்’ எனப் பரப்புரையிலும் தங்கையார் தள்ளிவைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

கட்சியில் சேர்ந்த சில காலத்திலேயே சீட் வாங்கிவிட்டார் பூ நடிகை. சீட்டை எதிர்பார்த்துக் கட்சி மாறிக் காத்திருந்த அதே தொகுதியின் சிட்டிங் புள்ளிக்கு, இதில் பெரும் வருத்தம். பலர் சமாதானம் செய்தும்கூட வீட்டிலேயே முடங்கிவிட்டாராம். உடனே சிட்டிங் புள்ளிக்கு போன் போட்டிருக்கிறார் நடிகை. அப்படி என்னதான் பேசினாரோ… நடிகையின் வலதுகரமாக இப்போது பரப்புரையில் பங்கேற்கிறார் சிட்டிங் புள்ளி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism