Election bannerElection banner
Published:Updated:

எடப்பாடிக்கு ஆலோசனை சொன்ன ஜோதிடர்...செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விஜயபாஸ்கர்- கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

‘``அறிவாலயம் அருகே சோர்ஸ் காத்திருக்கிறார். செய்திகளை மெயிலில் அனுப்பிவைக்கிறேன்’’ என்றபடி அவசரமாகக் கிளம்பினார் கழுகார். சற்று நேரத்தில் மெயிலில் வந்து விழுந்தன செய்திகள்...

ஆறு பேர் பட்டியல்
எடப்பாடிக்கு ஆலோசனை சொன்ன ஜோதிடர்!

அனைத்துக் கட்சிகளையும் முந்திக்கொண்டு ஜெயலலிதா பாணியில் மார்ச் 5-ம் தேதி அ.தி.மு.க-வின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சண்முகநாதன், தேன்மொழி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. கவுண்டர், முக்குலத்தோர், மீனவர், வன்னியர், நாடார், பட்டியல் சமூகம் என தமிழகத்தின் பரவலான சமூகங்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

எடப்பாடி
எடப்பாடி

இந்தநிலையில்தான், எடப்பாடிக்கு ஜோதிட ஆலோசனைகளை அளித்துவரும் சேலத்தைச் சேர்ந்த ஜோதிட நிபுணர் ஒருவர், ``ஆறு... உங்களுக்கு ராசியான எண். சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று, ஆறு பேர் பட்டியலை முதலில் வெளியிடுங்கள். முதல் பட்டியலில் ஒரு பெண் இருக்க வேண்டும். ஆறு தொகுதிகளுமே வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும். ஆறு பேருமே குறைந்தது இரு முறையாவது அந்தத் தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்” என்று ஆலோசனை அளித்தாராம். அதன்படிதான் முதல் பட்டியல் வெளியாகியிருக்கிறது என்கிறார்கள்.

ஜெயிச்சு வந்தா அரசவை ஜோதிடர் பதவி நிச்சயம்னு சொல்லுங்க!

அதிகாரிகளை வளைக்கிறாரா வேலுமணி?

கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பொறுப்பேற்றிருக்கிறார். இங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெரிதாக நம்பி, ஆளும் அ.தி.மு.க களமிறங்குகிறது. கோவையைப் பொறுத்தவரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சித் துணை ஆணையாளர், போலீஸ் எஸ்.பி என்று முக்கிய அதிகாரிகள் அனைவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

எடப்பாடிக்கு ஆலோசனை சொன்ன ஜோதிடர்...செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விஜயபாஸ்கர்- கழுகார் அப்டேட்ஸ்

இவர்களில் ஒரு பெண் உயரதிகாரி கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக சர்ச்சையில் சிக்கியவர். இந்தத் தேர்தலிலும் அதிகாரிகள் அ.தி.மு.க-வுக்குத் தங்களது விசுவாசத்தைக் காட்டுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அவர்களின் குற்றச்சாட்டுக்கு ஏற்றாற்போல், மாநகராட்சி உதவி ஆணையாளராக இருந்த செந்தில் அரசன், சமீபத்தில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். இவர்தான், வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர். இதையடுத்து, `அமைச்சருக்கு விசுவாசம் காட்டும் அதிகாரிகளைக் கூண்டோடு மாற்ற வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவிருக்கிறது தி.மு.க.

அதிகாரிகளைவைத்து `சதி’ செய்யறாங்கனு சொல்லவருது தி.மு.க!

ராகுலுக்கு எதிராகப் போர்க்கொடி...
கொதிக்கும் குமரி மாவட்ட மீனவர் அமைப்புகள்!

சமீபத்தில் ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி நிரலில், குளச்சலில் மீனவர்களுடன் கலந்துரையாடுவார் என்று முதலில் சொல்லப்பட்டது. பிறகு, தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தின் பரக்காணி பகுதியில் ஆயிரம் படகுகளில் ராகுலுக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்தனர். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்தநிலையில் தேங்காய்பட்டணம் மீனவர் கிராமத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு கையை மட்டும் ஆட்டிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு முக்கிய ஓட்டு வங்கியாக இருக்கும் மீனவர்களை ராகுல் காந்தி புறக்கணித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில், `மீனவர் சமூகத்திலிருந்து யாரையாவது காங்கிரஸ் கட்சி தன் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், மீனவர் அமைப்புகளுக்கு ஓர் இடத்தை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும். இரண்டும் நடக்கவில்லையென்றால், சுயேச்சையாகக் களமிறங்குவோம்’ என்று சில மீனவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது, கன்னியாகுமரி அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

வலையில மீன் சிக்கும்... ராகுல் சிக்குவாரா?!

கம்பம் தொகுதியில் ஜெயபிரதீப் போட்டி?

அ.தி.மு.க-வில் கம்பம் தொகுதியை ஜெயபிரதீப்புக்கு கொடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகப் பேச்சு எழுந்திருக்கிறது. ஏற்கெனவே, மூத்த மகன் ரவீந்திரநாத்தை தேனி எம்.பி ஆக்கியதற்கு விமர்சனங்களைச் சந்திந்த ஓ.பி.எஸ்., தற்போது இளைய மகனை தேர்தல் களத்தில் இறக்கினால், அது அவருக்கு பெரும் சறுக்கலாக இருக்கும் என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

எடப்பாடிக்கு ஆலோசனை சொன்ன ஜோதிடர்...செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விஜயபாஸ்கர்- கழுகார் அப்டேட்ஸ்

இந்தச் சூழலில்தான், ஜெயபிரதீப் கம்பம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அரசியலில், தான் இப்படி லைவ்வாக இருப்பதைக் காட்டுவதற்காக, சமீபத்தில் தேனியில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல் வரிசையில் வந்து அமர்ந்திருக்கிறார் ஜெயபிரதீப்.

சீரியஸ் அரசியலை வாரிசு அரசியல் ஆக்காதிங்கப்பு!

ஊட்டியில் கல்லா கட்டும் கிளார்க்குகள்!

மலைப்பகுதிகளைப் பாதுகாக்க `மாஸ்டர் பிளான்’ உள்ளிட்ட கட்டுமான சட்டங்கள் அமலிலுள்ள நீலகிரியில், புற்றீசல்போல விதிமீறல் கட்டடங்கள் நாள்தோறும் முளைக்கின்றன. மேலும், கோடிகளை மாமூலாகக் கொட்டும் துறை என்பதால், இந்தத் துறையில் பணியாற்றும் அரசு அலுவலர்களின் காட்டில் எப்போதுமே அடைமழைதான்‌. ஊட்டி நகராட்சிப் பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கான அனுமதி வழங்கும் ‘டவுன் பிளானிங்’ பிரிவில் கிளார்க்குகளாகப் பணிபுரியும் இருவர், கடந்த எட்டு வருடங்களாக செமயாக கல்லாகட்டிவருகிறார்களாம்.

எடப்பாடிக்கு ஆலோசனை சொன்ன ஜோதிடர்...செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விஜயபாஸ்கர்- கழுகார் அப்டேட்ஸ்
k arun

டவுன் பிளானிங் அலுவலராக இருந்தவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், நான்கு மாதங்களுக்கு மேலாகப் பணிக்கு வரவில்லை. இதை சாதகமாகிக்கொண்ட, இந்த கிளார்க்குகள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்கிறார்கள். தரைதளத்துக்கு ஒரு ரேட், இரண்டடுக்கு மாடிக்கு ஒரு ரேட் என மக்கள் தெறித்து ஓடும் அளவுக்கு லஞ்சப் பட்டியலே வைத்திருக்கிறார்களாம். ``இவங்க அடாவடியை கலெக்டர்கிட்ட கொண்டுபோக விடாம எங்க அதிகாரிங்களே தடுக்குறாங்க” என்று புலம்புகிறார்கள் ஊட்டி நகராட்சி அலுவலர்கள்.

இவங்களோட மாஸ்டர் பிளானை பிளாஸ்டர் பண்ணிவிடுங்க கலெக்டர்!

பா.ம.க மீது திலகபாமா அதிருப்தி?

பா.ம.க பொருளாளராக இருக்கும் கவிஞர் திலகபாமா, `கட்சியில் நீடிக்கலாமா அல்லது வேறு கட்சிக்குச் செல்லலாமா?’ என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம். வன்னியர் நலனை மட்டுமே முன்னிறுத்தி பா.ம.க அரசியல் செய்வது அவருக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது என்று வெளியே கூறப்பட்டாலும், தென் மாவட்டத்தில் போட்டியிட நினைத்தவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததுதான் இந்த ஊசலாட்டத்துக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

எடப்பாடிக்கு ஆலோசனை சொன்ன ஜோதிடர்...செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விஜயபாஸ்கர்- கழுகார் அப்டேட்ஸ்

குறிப்பாக, அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க கேட்டிருக்கும் தொகுதிகளில் ஒன்றுகூட தென்மாவட்டத்தில் இல்லை என்பது திலகபாமாவின் வருத்தம். இதனால், விரைவில் அவர் நாம் தமிழர் அல்லது தி.மு.க-வில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

கவிஞர், ராஜினாமா லெட்டரை கவிதையாவே எழுதிக் கொடுப்பாரோ!

சீட்டுக்கு ரூட் போடும் மணல் மாஃபியா!

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி சீட்டுக்காகக் கோடிகளை அள்ளி இறைத்திருக்கிறாராம் பேரம்பாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர். திருவள்ளூர், பேரம்பாக்கம், கடம்பத்தூர் என மாவட்டத்தைத் தழுவி ஓடும் கொசஸ்தலை ஆற்றில் இந்தப் பிரமுகரின் அனுமதியில்லாமல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களால்கூட ஒரு பிடி மணலை எடுக்க முடியாதாம். இவருக்குப் பக்கபலமாக அதிகாரப் பிரமுகர் ஒருவர் ‘பெஞ்ச்’ போட்டு அமர்ந்திருப்பதால், யாராலும் இவரது ஆதிக்கத்தைத் தடுக்க முடியவில்லை என்கிறார்கள். இந்தநிலையில்தான், ‘திருவள்ளூர் சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ விஜி ராஜேந்திரனுக்கு தொகுதியில் செல்வாக்கு குறைவு’ என்று கூறியே, தலைமையிடம் சீட்டுக்காக அடிபோட்டிருக்கிறார் மணல் பிரமுகர். இதையடுத்து, `ஆளுங்கட்சிப் புள்ளியுடன் தொடர்பில் இருப்பவருக்கு சீட் கொடுக்கக் கூடாது’ என்று கட்சித் தலைமையிடம் புகார் அளித்திருக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள். மணல் பிரமுகரால் அனல் பறக்குது அரசியல்!

தளவாய் மீது தகிக்கும் உள்ளூர் அ.தி.மு.க!

அ.தி.மு.க கூட்டணியில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம் முடிவெடுத்திருந்தார். ஆனால், உள்ளூர் கட்சியினர் தனக்கு எதிராக வேலை செய்வதாலும், சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காத சூழல் நிலவுவதாலும் இப்போது பின்வாங்குகிறாராம்.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

அது மட்டுமல்லாமல், கட்சியில் வேறொருவருக்கு சீட் கிடைத்தால், தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கருதும் தளவாய், மேற்கண்ட இரு தொகுதிகளையும் பா.ஜ.க-வுக்குத் தள்ளிவிட காய்நகர்த்துகிறார் என்கிறார்கள். இதனால், கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க-வினர் கொதித்துப்போயிருக்கிறார்கள்.

‘டெல்லி’ பிரநிதியை டெல்லியிலேயே பேசி முடிச்சிட்டாங்களோ!

செந்தில் பாலாஜிக்கு விஜயபாஸ்கர் செக்!

கரூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜியும் நேரடியாக மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. தங்கள் வெற்றியை இருவரும் கௌரவப் பிரச்னையாகக் கருதுவதால், போட்டி உக்கிரமாகியிருக்கிறது. இருவருமே பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கத் தொடங்கிவிட்டார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதித் தேர்தல், பணப் பட்டுவாடா பிரச்னையில் தள்ளி வைக்கப்பட்டதுபோல், இப்போது கரூரிலும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

இதற்கிடையே, தி.மு.க-வில் செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டு ஒதுங்கியிருக்கும் புள்ளிகளைச் சுயேச்சைகளாகக் களமிறக்கி, செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை விஜயபாஸ்கர் தொடங்கியிருக்கிறாராம். முதற்கட்டமாக, தான்தோன்றிமலை நகராட்சியின் முன்னாள் தலைவர் தாந்தோணி ரவி என்பவர் சுயேச்சை வேட்பாளராகப் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். இவரை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்புதான் வழிநடத்துகிறது என்கிறார்கள்.

கரூர்ல பிரியாணி வாசனை கமகமக்குதுன்னு சொல்லுங்க!

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

எடப்பாடிக்கு ஆலோசனை சொன்ன ஜோதிடர்...செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விஜயபாஸ்கர்- கழுகார் அப்டேட்ஸ்

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு