Published:Updated:

அன்று அவமானம்... இன்று வெற்றி... பா.ஜ.க-வை காலி செய்த டெல்லியின் `அற்புதம்' அதிஷி!

அதிஷி மார்லேனா
அதிஷி மார்லேனா

ஆம் ஆத்மி அரசின் கல்விக் கொள்கை திட்டங்களுக்கு அனைத்துக்கும் மூளையாக இருந்தவர்தான் அதிஷி மார்லேனா. எப்போதும் சாந்தமான முகத்துடன் தனது செயல்கள் மூலம் மட்டுமே பேசும் 38 வயதான அதிஷியை டெல்லியைத் தாண்டி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மூன்றாவது முறையாக சிங்க கர்ஜனையுடன் டெல்லியின் முதல்வர் சிம்மாசனத்தில் அமரவிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அவரின் வெற்றியால் தேசியக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் மிரண்டு போய் உள்ளன. ஆனால், அவரின் வெற்றி குறித்து இதில் பேசப்போவதில்லை. கெஜ்ரிவாலுக்கு நிகராக சமூக நோக்கத்துடன் வலம்வந்த ஒரு 38 வயது பெண்மணியின் வெற்றியைத்தான் பார்க்கப்போகிறோம். கெஜ்ரிவால் வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வித் துறையில் அவர் கொண்டுவந்த சீர்திருத்தத்தைத்தான்.

அதிஷி மார்லேனா
அதிஷி மார்லேனா

அரசுக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது அவரது ஆட்சி. மாணவர்களின் கல்வி இடைநிற்றல் சதவிகிதத்தைக் குறைப்பதை தன் பெரும் குறிக்கோளாக எடுத்துக்கொண்டு கல்வித்துறையை தனது ஆட்சியின் நம்பர் 2-வும் துணை முதல்வருமான மனிஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கினார். அதன்படி கல்வித்துறை அலுவலகங்களிலும் பள்ளிகளுக்கும் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்கும் விஷயங்களைக் கவனித்து வந்தார் சிசோடியா. மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்க `மிஷன் புனியாட்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான சில சிறப்புத் திட்டங்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டன.

டெல்லியில் மூன்றாவது முறையாக அரியணையில் கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி மகுடம் சூடியது எப்படி?

ஒரு சில வருடங்களில் கைமேல் பலன் கிடைத்தது. டெல்லியில் உள்ள நேஷனல் பள்ளிகள், சர்வதேசப் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்கள் முன்னேறினர். ஆம் ஆத்மியின் இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அத்தோடு நின்றுவிடவில்லை. நடந்துமுடிந்த தேர்தலிலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆம் ஆத்மி அரசின் இந்தக் கல்விக் கொள்கை திட்டங்களுக்கு அனைத்துக்கும் மூளையாக இருந்தவர்தான் அதிஷி மார்லேனா. எப்போதும் சாந்தமான முகத்துடன் தனது செயல்கள் மூலம் மட்டுமே பேசும் 38 வயதான அதிஷியை டெல்லியைத் தாண்டி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதிஷி மார்லேனா
அதிஷி மார்லேனா

ஆனால், டெல்லி அரசியலைத் தெரிந்தவர்களுக்கு இவரைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆம் ஆத்மி கட்சியின் டாப் பெண் தலைவர்களைப் பட்டியலிட்டால் அதில் அதிஷிதான் நம்பர் ஒன். இவரது பெற்றோர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாக இருப்பதனாலோ என்னவோ இயல்பாகவே படிப்பின்மீது தீவிர ஆர்வம்கொண்டிருந்தார் அதிஷி. டெல்லியில் பட்டப்படிப்பு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு என படிப்பில் சுட்டியாக வலம்வந்த இவர், படிப்பு முடிந்து நாடு திரும்பியபோது பெற்றோர்களைப் போலவே ஆசிரியர் துறையைத் தேர்வு செய்தார். ஆந்திராவில் சில வருடம் வேலைசெய்தவர், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் சில ஆண்டுக்காலம் பணிபுரிந்தார். அப்போதுதான் ஆம் ஆத்மி தலைவர்களான பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோருடன் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்க அவர்களின் எண்ணங்கள் மூலம் ஈர்க்கப்பட்டு பின்னாளில் ஆம் ஆத்மியில் ஐக்கியமானார்.

`பி.கே வியூகத்தில் ஏ.கே..!'-  இந்தியாவின் ஆன்மாவை கெஜ்ரிவால் கைப்பற்றியது எப்படி?

அதிஷியின் கல்வி ஆர்வத்தைப் புரிந்துகொண்ட கெஜ்ரிவால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். மனிஷ் சிசோடியா கவனித்துவந்த கல்வித்துறையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே டெல்லியின் அரசுப் பள்ளிகளின் தோற்றத்தையே மாற்றிக் காண்பித்தார் அதிஷி. மேலே சொன்ன `மிஷன் புனியாட்' திட்டம் உள்ளிட்ட மாணவர்கள் நலனுக்காக டெல்லி அரசு கொண்டுவந்த அத்தனை திட்டங்களிலும் அதிஷி பங்களிப்பே பிரதானம். மாணவர்களின் கல்வி முன்னேற வேண்டும் என்று மட்டும் அதிஷி சிந்திக்கவில்லை என்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள்.

அதிஷி மார்லேனா
அதிஷி மார்லேனா

மாணவர்கள் வகுப்பறையில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் `மகிழ்ச்சி சமத்துவம்' திட்டம் தொடங்கி, தனியார் பள்ளிக் கட்டணம் தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்துவது, பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை ஏற்பாடு செய்வது, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது என கல்வித் துறை அமைச்சர் சிசோடியாவைவிட பம்பரமாய் சுழன்றார். ஒரு ஆண்டில் மட்டும் 120 கல்வி தொடர்பான கூட்டங்களில் அதிஷி கலந்துகொண்டார் என்கின்றது புள்ளிவிவரம். இப்படி டெல்லி மாநில கல்வி இயக்குநரகத்தை மறுசீரமைத்ததில் முக்கியப் பங்கு அதிஷிக்கு உண்டு என்கின்றனர்.

`ஐ.ஆர்.எஸ் பணி ராஜினாமா; எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி!'- டெல்லியில் அசத்தும் சுனிதா கெஜ்ரிவால்

வெட்ட வெட்ட வளர்ந்த அதிஷி!

நாளுக்கு நாள் மக்களின் நலனை குறிக்கோளாய் வைத்து அதிஷி செயல்பட்டுவந்தாலும் அவர் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் குடைச்சல்களை ஆம் ஆத்மி தலைவர்கள் வேறு யாரும் சந்தித்து இருக்க மாட்டார்கள். இதற்கு சில உதாரணங்கள்.. டெல்லி அரசின் கல்வி ஆலோசகராக அதிஷி நியமிக்கப்பட்டு சில ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிவந்தார். ஆனால், அதற்கு மத்திய பா.ஜ.க அரசு குடைச்சல் கொடுத்தது. அவர் நியமனத்தை சில ஆண்டுகளுக்கு முன் மத்திய உள்துறை அதிரடியாக ரத்து செய்தது. இத்தனைக்கும் கல்வி ஆலோசகராக பணியாற்றுவதற்கு அவருக்கு சம்பளம் ஏதும் தரப்படவில்லை (தன்னார்வ நிறுவனத்தின் பெயரிலேயே அதிஷி இயங்கியதாக கூறப்படுகிறது) என்று விளக்கம் சொல்லியும் மத்திய உள்துறை கேட்கவில்லை.

அதிஷி மார்லேனா
அதிஷி மார்லேனா

இன்னொரு உதாரணம்... கடந்த பொதுத்தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் பா.ஜ.க-வின் நட்சத்திர வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீரை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளராக களம்கண்டார் அதிஷி. இதற்கான பிரசாரத்தின்போது பா.ஜ.க சார்பில் நோட்டீஸ் ஒன்று விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், அதிஷியையும், மனிஷ் சிசோடியாவையும் இணைத்து தவறான தகவல் அச்சிடப்பட்டிருந்தது. கூடவே அதிஷியை தவறாக சித்திரித்தும் கருத்துகள் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லி தேர்தல் முடிவுகள்... தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

இப்படி பல அவமானங்களையும், எதிர்ப்புகளையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் எதிர்கொண்டாலும் அதிஷி ஓயவில்லை. தொடர்ந்து கட்சியின் நலனுக்காகவும், மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் முன்பைவிட அதிகமாக உழைத்துக்கொண்டே இருந்தார். கல்வித்துறையை அடுத்து மருத்துவத் துறையிலும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிவந்தார். மனிஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷண் வரிசையில் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். இதனால் அவருக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் அதிஷி போட்டியிட்டார்.

அதிஷி மார்லேனா
அதிஷி மார்லேனா

இந்தத் தேர்தலில் அவர் எதிர்கொண்டது என்னவோ வேறுவிதமான சர்ச்சை. அதுவும் அவரது பெயரைவைத்து அவரது முழுப்பெயர் அதிஷி மார்லேனா. அதிஷியின் தந்தை இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால் காரல் மார்க்ஸின் பெயரையும், லெனின் பெயரையும் சேர்த்து மார்லேனா என்று அவருக்குப் பெயர் வைத்தார். ஆனால், இந்தத் தேர்தலில் எதிர்தரப்பினர் இந்தப் பெயர் கிறிஸ்துவர்களைப் போல் உள்ளது என்று மத ரீதியாக பிரசாரத்தை முன்னெடுத்தனர். இதனால் ஒருகட்டத்தில் தனது பெயரில் இருந்த மார்லேனாவை தூக்கிவிட்டு அதிஷி என்றே வைத்துக்கொண்டார். ``நான் சாதி, மதம் பார்ப்பவள் கிடையாது. அதனால்தான் என் பெயரின் பின்னால் இருந்த `சிங்'கை சிறுவயது இருக்கும்போதே நீக்கிவிட்டேன். இப்போது என் பெயரை வைத்து மதப் பிரசாரம் நடத்துவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்" என்று மார்லேனாவை நீக்கிவிட்டார்.

`பா.ஜ.க, காங்கிரஸை எதிர்த்த அரசு ஊழியர்!' -தேசியக் கட்சிகளை வாரிச்சுருட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்

தொடர்ந்து பல பிரச்னைகளை எதிர்கொண்ட அதிஷி நேற்றுமுன்தினம் வாக்கு எண்ணிக்கையின்போது, முதலில் பின்னடைவைச் சந்தித்தார். சில சுற்றுகளின் முடிவில் 7 வாக்குகள் வரையில் முன்னிலையில் இருந்தார். இதனால் இந்த முறையும் அவர் தோல்வி பெறுவார் என்று பலரும் நினைக்கத் தொடங்கிய நேரத்தில் அடுத்தடுத்த சுற்றுகளில் மெல்ல மெல்ல முன்னேறினார். முடிவில், மொத்தம் 55,897 வாக்குகள் பெற்று அதிஷி வெற்றிபெற்று முதல் முறை சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். இவரது உழைப்புக்கு இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

அதிஷி மார்லேனா
அதிஷி மார்லேனா

அதேநேரம் ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர் என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி உறுதி என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெற்றிபெற்றதுமே, ``கடைசி ஐந்து வருடத்தில் டெல்லியில் கல்வி முன்னேறி இருக்கிறது, அரசுப் பள்ளிகள் இந்தியாவிலேயே சிறந்ததாக மாறியுள்ளது. இனி நான் கல்காஜி தொகுதியை டெல்லியிலே சிறந்த தொகுதியாக மாற்றுவேன்'' என்று வழக்கம்போல கதர் உடையையும், குல்லாவையும் அணிந்துகொண்டு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லி வருகிறார் அதிஷி.

இப்போது சொல்லுங்கள் இவர் டெல்லியின் அற்புதம்தானே..!

`பகவத்கீதையைக் கற்றுத்தந்தால் பயங்கரவாதமா?' -பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொதிக்கும் ஹர்ஷிதா கெஜ்ரிவால்
அடுத்த கட்டுரைக்கு