Published:Updated:

சரத் பவார் மகள் குறித்து அவதூறு பேச்சு... மகாராஷ்டிரா அமைச்சர் சத்தார் வீட்டின் மீது தாக்குதல்!

சத்தார் கொடும்பாவி எரிப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகள் குறித்து அவதூறாகப் பேசிய மகாராஷ்டிரா அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சரத் பவார் மகள் குறித்து அவதூறு பேச்சு... மகாராஷ்டிரா அமைச்சர் சத்தார் வீட்டின் மீது தாக்குதல்!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகள் குறித்து அவதூறாகப் பேசிய மகாராஷ்டிரா அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Published:Updated:
சத்தார் கொடும்பாவி எரிப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்தபோது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்குச் சென்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அடிக்கடி இதை சிவசேனா சுட்டிக்காட்டிக்கொண்டேயிருக்கிறது. நேற்று மராத்தி டி.வி சேனல் நிருபர் ஒருவர் ஏக்நாத் ஷிண்டே அணியின் சிவசேனா அமைச்சர் அப்துல் சத்தாரிடம் நேர்காணல் நடத்தினார்.

இதில் அந்த நிருபர், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ரூ.50 கோடி வாங்கியதாக வந்திருக்கும் புகார் குறித்துக் கேட்டதற்கு கடும் கோபமடைந்துவிட்டார். கோபத்தில், சுப்ரியா சுலே பற்றி மோசமான வார்த்தைகளைப் பேசினார். சுப்ரியாவுக்கு எதிராக அமைச்சர் பேசியதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மும்பை போரிவலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். தங்களது புகாரில், `அப்துல் சத்தார் நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதித்துவிட்டார். சுப்ரியாவை அவதூறாகப் பேசி ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதித்துவிட்டதால் அப்துல் சத்தார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக’ அதில் குறிப்பிட்டிருந்தனர். அப்துல் சத்தார் கருத்து சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அணியில் செய்தித் தொடர்பாளர் தீபக் கேசர்கர், ``இந்தப் பிரச்னைக்காக அப்துல் சத்தார் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

சத்தார்-சுப்ரியா
சத்தார்-சுப்ரியா

அதே சமயம் இந்தப் பிரச்னைக்காக அமைச்சர் பதவியிலிருந்து விலக மாட்டார்” என்று குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் அப்துல் சத்தார் வீட்டுக்கு வெளியில் அவரின் புகைப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர். சிலர் அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து அப்துல் சத்தார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தான் தெரிவித்த கருத்து யாரையாவது காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும், ஆனால் சுப்ரியா சுலே குறித்து, தான் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வித்யாசவான் கோரிக்கை விடுத்திருக்கிறார். அப்துல் சத்தார் வேளாண்மைத்துறை அமைச்சராக இருக்கிறார். அவர் அவுரங்காபாத் மாவட்டத்திலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் சிவசேனாவுக்கு வந்தார். அங்கிருந்து ஏக்நாத் ஷிண்டேயின் அணிக்குத் தாவியிருக்கிறார்.