Published:Updated:

`ரூ.2 லட்சம் அட்வான்ஸ்; 15-ம் தேதிக்குள் பாக்கி பணம்!'- ரூ.32 லட்சத்துக்கு பதவியை ஏலம்விட்ட கிராமம்

ஒரத்தநாடு அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் விட்டனர். இதில் அ.ம.மு.க பிரமுகர் ரூ.32 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருக்கிறார்.

ஊர் கூட்டம்
ஊர் கூட்டம்

ஒரத்தநாடு அருகே உள்ளது திருமங்கலக்கோட்டை கீழையூர் என்ற கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவரை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்தனர். இதற்காக ஊர் முக்கியஸ்தர்கள் அங்குள்ள சிவன் கோயில் வளாகத்தில் திரண்டு தலைவர் பதவியை ஏலம் விட்டனர்.

இதில் வரும் தொகை கோயில் கட்டும் பணிக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, அ.ம.மு.க-வைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ரூ.32 லட்சத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்திருக்கிறார்.

ஊர் கூட்டத்தில்
ஊர் கூட்டத்தில்

அத்துடன் முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்திருக்கிறார். மீதி பணத்துக்கு அவர் நேரம் கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்!’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

இதுகுறித்து ஊர் மக்கள் சிலரிடம் பேசினோம், ``ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு பலரும் போட்டி போட்டனர். ஆனால், ஊர் நாட்டாமைகள் கூடி யார் கோயில் கட்டுவதற்கு பணம் தருகிறாரோ அவர் ஒருவர் மட்டும்தான் போட்டியிட வேண்டும் என முடிவுசெய்தனர்.

ஊர் கூட்டம்
ஊர் கூட்டம்

அதன்படி சுபநிகழ்சிக்கு வருவதுபோல் தாம்பூலத்தில் வாழை உள்ளிட்ட பழங்களை வைத்து எடுத்துக்கொண்டு சிவன் கோயில் வளாகத்தில் திரண்டனர். போட்டியிடுவதற்கு பலத்த போட்டி இருந்ததால் ஏலம் விட முடிவு செய்தனர். அதன்படி, அ.ம.மு.க முக்கியப் பிரமுகரான சுரேஷ் என்பவர் ரூ.32 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

அதன்பிறகு, `வேறு யாரும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடாது, சுரேஷ் மட்டும்தான் போட்டியிட வேண்டும்' எனவும் `வரும் 15-ம் தேதிக்குள் பாக்கி பணம் ரூ.30 லட்சத்தை செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால் மாற்று வேட்பாளர் முடிவு செய்யப்படுவார்' எனக் கூட்டத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் அறிவித்தனர்.

இந்த ஏலத்தை அ.ம.மு.க பிரமுகர் எடுத்ததால் முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் சொந்த தொகுதி என்பதால் அப்பகுதியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் ஜெயிக்கக் கூடாது, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்தான் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என கட்சிக்காரர்களிடம் வைத்திலிங்கம் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

ஊர் கூட்டத்தில்
ஊர் கூட்டத்தில்

``ஊரில் மாரியம்மன் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தப் பணிக்கு செலவு செய்பவர்கள், தேர்தலில் போட்டியிடலாம் என கூறினார்கள். இதனை ஏற்றுக் கொண்டவரை போட்டியிட வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். இது கிராமங்களில் நடக்கும் வழக்கமான நடைமுறைதான்.

எல்லோரும் உறவினர்கள் என்பதாலும் ஊர் பொதுக்காரியம் என்பதாலும் அனைவரும் இதற்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் இதை அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் பெரிதுபடுத்தி பரப்பி வருகின்றனர்" என்கின்றனர் ஊர் பொதுமக்கள்.

ஆனால், ஊர் நாட்டாமைகளோ, ``தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏலம் எதுவும் விடப்படவில்லை" என்றனர்.