Published:Updated:

``உண்மை தெரிந்தும் அதன் பக்கம் நிற்கவில்லை; பொன்னையன் ஆடியோவை வெளியிட்டது ஏன்?” - நாஞ்சில் கோலப்பன்

பொன்னையன்

அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையனும், கன்னியாகுமரியைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனும் பேசிய உரையாடல் `பொய்’ என்று பொன்னையன் சொல்ல, `உண்மைதான்’ என்கிறார் நாஞ்சில் கோலப்பன்.

``உண்மை தெரிந்தும் அதன் பக்கம் நிற்கவில்லை; பொன்னையன் ஆடியோவை வெளியிட்டது ஏன்?” - நாஞ்சில் கோலப்பன்

அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையனும், கன்னியாகுமரியைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனும் பேசிய உரையாடல் `பொய்’ என்று பொன்னையன் சொல்ல, `உண்மைதான்’ என்கிறார் நாஞ்சில் கோலப்பன்.

Published:Updated:
பொன்னையன்

1987, 2017 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை அ.தி.மு.க பிளவு கண்டு இணைந்திருக்கிறது. தற்போது மூன்றாவது முறையாக கட்சி நிர்வாகிகளுக்குள் பிளவைச் சந்தித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எடப்பாடியுடன் இருக்கும் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவரும், தங்களுக்கான ஒவ்வொரு செயல் திட்டத்தோடுதான் அவருடன் பயணிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அதை மெய்ப்பிக்கும்விதமாக அமைப்புச் செயலாளர் பொன்னையனின் ஆடியோ வெளியாகியிருக்கிறது.

அதிமுக தலைமைக் கழக அலுவலகம்
அதிமுக தலைமைக் கழக அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் என்பவர், பொன்னையனுடன் போனில் பேசும் ஆடியோவை அவரே வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோ செய்தி சேனல்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து கருத்து கூறிய பொன்னையன், ``வாய்ஸ் மாடுலேஷன் டெக்னாலஜியைப் பயன்படுத்தி என் குரலை யாரோ மிமிக்ரி செய்திருக்கிறார்கள். நான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் ஆடியோ உண்மைக்கு மாறானது. அப்படி நான் யாரிடமும் பேசவில்லை” என்று மறுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய நாஞ்சில் கோலப்பனிடம் பேசினோம். ``கடந்த ஜூலை 9-ம் தேதி இரவு 9:59 மணிக்கு சுமார் 17.28 நிமிடங்கள் பொன்னையனிடம் நான் பேசினேன். பொன்னையன் குரலை யாராவது மிமிக்ரி பண்ண முடியுமா... அது அவர் பேசியதுதான். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதையே இது காட்டுகிறது. பொன்னையன் அவர்களை நான் மதிக்கிறேன், என் மீதுள்ள மரியாதை காரணமாகத்தான் என்னிடம் அவர் பேசினார். நான் சிறு வயதிலிருந்தே, தலைவர் எம்.ஜி.ஆருடன் பொன்னையனைப் பார்த்திருக்கிறேன். அதனால், ஒருபோதும் அவர் மீதான மதிப்பு குறையாது. அவருடைய உணர்வை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை, யாரும் அவரின் பேச்சைக் கேட்பதாக இல்லை. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அந்த ஆடியோவை வெளியிட்டேனே ஒழிய, அவரை அவமதிப்பதற்காகச் செய்யவில்லை.

ஓ.பி.எஸ்-ஸுடன் நாஞ்சில் கோலப்பன்
ஓ.பி.எஸ்-ஸுடன் நாஞ்சில் கோலப்பன்

கட்சி அழிவுப்பாதையை நோக்கிச் செல்கிறது என்பது பலருக்குத் தெரிய வேண்டும். தனதருகில் இவ்வளவு பெரிய பள்ளம் இருப்பதை எடப்பாடி அண்ணனும் புரிந்துகொள்ள வேண்டும். பன்னீர் அண்ணனுக்கு எதிராக எடப்பாடி குழிபறிக்கிறார் என்றால், அவருக்கு எதிராகவும் சிலர் குழிபறிப்பதை அவர் உணர வேண்டும். நான் எம்.ஜி.ஆர் ரசிகன், அவரைப் பார்த்து வளர்ந்தவன். பொன்னையன் எம்.ஜி.ஆருடனேயே பயணித்தவர். அப்படிப்பட்டவர்கள் துணிவாகச் செயல்படாமல், நடித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை எது, பொய் எது என்பது தெரிந்தும் உண்மைப் பக்கம் நிற்கவில்லை பொன்னையன். இந்த நிலை மாற வேண்டும், கட்சி ஒற்றுமையாக வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

பொன்னையன் மனதில் இருக்கும் குமுறலை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் பேசினேன், அதை வெளியிட்டேன். கட்சியை இப்படிச் சீரழிக்கிறார்களே என்கிற ஆதங்கத்தைத்தான் என்னிடம் கொட்டியிருக்கிறார். கொட்டினதை நான் வெளியில் கொண்டு சென்றேன். பேசிய ரெக்கார்டு, நேரம் என எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்துக்கூட இந்த மொபையிலிருந்து இந்த மொபைலுக்கு அழைப்புச் சென்றிருப்பதை உறுதிப்படுத்த முடியும். மறுக்கவே முடியாது. போலியான மிமிக்ரி செய்யப்பட்ட ஆடியோ என்றால், போலீஸில்கூடப் புகாரளிக்கட்டும்” என்றார் தெளிவாக.

எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்
எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்

ஆடியோவில் பேசியது பொன்னையன்தான் என்று கோலப்பன் ஆதாரங்களுடன் உறுதியாகக் கூறுவது தொடர்பாக விளக்கம் பெற பொன்னையனைப் பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை!