Published:Updated:

திருச்சி: அமித் ஷா வீடு முற்றுகை திட்டம்... அய்யாக்கண்ணுவை வீட்டிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறை!

போராட்டத்தில் அய்யாக்கண்ணு
போராட்டத்தில் அய்யாக்கண்ணு

அமித் ஷா, எங்களிடம் நதி நீர் இணைப்பு, விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் போன்றவற்றை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று வரையிலும் நிறைவேற்றவில்லை

`மத்திய அரசு விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. நதி நீர் இணைப்பு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு போதிய விலை நிர்ணயம் ஏற்படுத்தித் தருவதாக அமித் ஷா உத்தரவாதம் அளித்தார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்’ என அறிவித்த அய்யாக்கண்ணுவை போலீஸார் தடுத்து நிறுத்தி, வீட்டுக் காவலில் வைத்திருக்கும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அய்யாக்கண்ணு வீட்டை முற்றுகையிட்ட போலீஸார்
அய்யாக்கண்ணு வீட்டை முற்றுகையிட்ட போலீஸார்

தென்னிந்திய விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வரும் 26, 27-ம் தேதி டெல்லியில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இவருடன் சுமார் 500 விவசாயிகள் இன்று ரயில் பயணத்துக்காகப் புறப்படத் தயாராகினர். இந்தநிலையில் திருச்சி அண்ணா நகரிலுள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சென்று அய்யாக்கண்ணுவை வீட்டிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதனால் அவரின் டெல்லி பயணம் ரத்தானது. தொடர்ந்து விவசாயிகள் அய்யாக்கண்ணு வீட்டுக்கு அருகில் அரை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு கரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். காவல்துறையினர் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். மேலும் ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அய்யாக்கண்ணு
அய்யாக்கண்ணு

இது குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணுவிடம் பேசினோம், ''மத்திய அரசு விவசாயிகள் போராட்டம் நடத்தினாலே தவறு என்றும், அப்படி போராட்டம் நடத்துபவர்களை விரோதியாகவும் பார்க்கிறது. டெல்லியில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தில் விவசாயிகள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாதபடி சட்டம் இயற்றியிருக்கிறார்கள். விவசாயிகளிடம் எந்தவித ஆலோசனையும் கேட்காமல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் நிர்ணயிக்கும் விலைக்கு மட்டுமே வாங்கவும் விற்கவும் முடியும். குத்தகைதாரர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை ஊக்கப்படுத்தி விவசாயம் செய்ய ஊக்கப்படுத்துவதை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுவதால், கடந்த ஆண்டு டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் அமித் ஷா எங்களிடம் நதி நீர் இணைப்பு, விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் போன்றவற்றை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று வரையிலும் அவை நிறைவேற்றவில்லை, அதற்கான தொகையையும் ஒதுக்கவில்லை.

டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்

இந்தநிலையில்தான் விவசாயிகளை ஏமாற்றிய மத்திய அரசைக் கண்டித்து அமித் ஷா வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதற்காக 3 லட்சம் செலவில் டிக்கெட்டுகள் எடுத்துவைத்திருந்தோம். இன்று கிளம்ப இருந்த எங்களை வெளியில் செல்ல விடாமல் தடுத்ததோடு, அதிகாலையில் என்னை காவல்துறை வீட்டுக் காவலில்வைத்து மிரட்டினார்கள். இந்த விவகாரம் பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்ததும் வேறு வழியில்லாமல் என்னைக் கைதுசெய்து வெளியில் விட்டிருக்கிறார்கள். நாங்களும் விவசாயிகளை அழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தற்போது போராட்டம் நடத்திவருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு