Published:Updated:

திற்பரப்பை அழிக்கிறதா அழகியபாண்டிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம்?

அடித்துக்கொள்ளும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

பிரீமியம் ஸ்டோரி

“திற்பரப்பு அருவியை அழிக்கும் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது” என்று பத்மநாபபுரம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜ் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார். “கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில், மூன்று மாதங்களுக்குள் தண்ணீர் வரவேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவேன்” என்று அதே கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ-வான ஆஸ்டின் போர்க்கொடி உயர்த்திருக்கிறார். ஒரே கட்சியிலிருக்கும் இரு எம்.எல்.ஏ-க்கள் இப்படி மோதிக்கொள்வது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து ஒழுகும் தண்ணீர், ஆண்டு முழுவதும் திற்பரப்பு அருவியில் கொட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில், மேற்கண்ட தடுப்பணையிலிருந்து தினமும் இரண்டு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் அழகிய பாண்டிபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2015-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் திட்டம் தொடங்கப் பட்டது. தற்போது இந்தத் திட்டம் இறுதிகட்டத்தை எட்டும் நிலையில்தான் இரண்டு தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் எதிரும்புதிருமாக மோதிவருகிறார்கள்.

ஆஸ்டின்
ஆஸ்டின்

ஆஸ்டினிடம் பேசினோம். “இந்தக் கூட்டுக்குடிநீர் திட்டத்தால் பத்மநாபபுரம் தொகுதியில் சில பஞ்சாயத்துகளில் விவசாயம் பாதிக்கும் என்று கூறி மனோ தங்கராஜ் போராட்டம் நடத்துகிறார். அதேசமயம், ‘கடலுக்கு உபரியாகச் செல்லும் இந்தத் தண்ணீரைக்கொண்டு குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தலாம்’ என்று அண்ணா பல்கலைக்கழகக் குழுவினர் அறிக்கை கொடுத்திருக் கிறார்கள். அதையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும். கன்னியாகுமரி தொகுதி மக்களின் குடிநீர் தேவைக்கான இந்தத் திட்டத்தை மூன்று மாதங்களில் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவேன். இந்தத் திட்டத்தை தி.மு.க எம்.எல்.ஏ-தான் எதிர்க்கிறார் என்று அ.தி.மு.க-வினர் சொல்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பி.ஜே.பி-யினரும் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களிடம் சென்று ‘திட்டத்தை எதிர்க்க வேண்டாம்’ என்று சொல்ல வேண்டியதுதானே” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனோ தங்கராஜ் கூறுகையில், “திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் திற்பரப்பில் கட்டப்பட்ட தடுப்பணையின் இடதுகரை, வலதுகரை கால்வாய்களில் 36 கி.மீட்டர் தூரத்துக்குப் பாயும் தண்ணீர் ஏராளமான குளங்களை நிரப்புகிறது. இந்தத் தண்ணீர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதி விவசாயத்துக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. இப்போது அதிலிருந்து குடிநீர் திட்டத்துக்குத் தண்ணீர் எடுத்தால், விவசாயிகள் எங்கே போவார்கள்? திற்பரப்பு அருவி பாய்ந்தோடிச் செல்லும் கீழ் பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்தால் யாருக்கும் பாதகம் இல்லை. இதைச் சொன்னால், ‘அருவியிலிருந்து வரும் தண்ணீர் சுத்தமற்றது’ என்று அதிகாரிகள் சப்பைக்கட்டு கட்டுகிறார் கள். திற்பரப்பு அருவி பாய்ந்து செல்லும் பகுதியிலிருந்து கடலுக்குச் செல்லும் வரை சுமார் 14-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் தண்ணீர் நன்றாகத்தானே இருக்கிறது. அதுபோல இந்தத் திட்டத்துக்காகவும் அருவிக்குக் கீழிருந்து தண்ணீர் எடுக்க வேண்டியதுதானே... இல்லையென்றால் தாமிரபரணி ஆறு (இது கன்னியாகுமரியின் தாமிரபரணி ஆறு. திருநெல்வேலி, தூத்துக்குடியில் பாயும் தாமிரபரணி அல்ல) கடலில் கலக்கும் இடத்தில் தடுப்பணை அமைத்து மாவட்டம் முழுவதுக்கும் தண்ணீர் கொண்டு செல்லட்டும். கன்னியாகுமரியில் குளங்கள், கால்வாய்கள் அத்தனையையும் அழித்துவிட்டார்கள். இப்போது திற்பரப்பு அருவியையும் அழிக்கப் பார்க்கிறார்கள்” என்றார் ஆவேசமாக.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டோம். “அழகியபாண்டிபுரம் உட்பட ஒன்பது பேரூராட்சிகள், 31 ஊராட்சிகளுக்குக் குடிநீர் வழங்குவதற்காக சுமார் 109.79 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வழக்குகளால் தாமதமானது. பாசனத் தேவைக்குப்போக மீதமுள்ள தண்ணீரைத்தான் குடிநீருக்காக எடுக்கிறோம்’’ என்றார்கள்.

இரு எம்.எல்.ஏ-க்கள் சொல்லும் கருத்துகளும் நியாயமாகத்தான் இருக்கின்றன. ஒரு திட்டத்தைத் தொடங்கி, முடிக்கும் நிலையில் அந்தத் திட்டத்தை முடக்க இயலாது. அதேசமயம், கன்னியாகுமரி நகரில் அழியும் நிலையிலிருக்கும் குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களை மேம்படுத்தினால், உள்ளூர் தேவைக்கும் குடிநீர் கிடைக்கும்; மாவட்டத்தின் தனி அடையாளமாகத் திகழும் திற்பரப்பு அருவியையும் பாதுகாக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு