Published:Updated:

சசிகலா: `கட்சியை சரி பண்ணிடலாம்!’ - நேரடியாக தொண்டர்களிடையே பேச தொடங்கியிருப்பதன் பின்னணி என்ன?

ஜெயலலிதா சமாதியில் சசிகலா
ஜெயலலிதா சமாதியில் சசிகலா

முன்னாள் அமைச்சர்கள் சிலரிடமும் போன் மூலம் சசிகலா பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அவர்கள் எப்போதும் உங்க பின்னாடி நிற்போம் என்ற உத்தரவாதம் தந்ததாகவும் கூறப்படுகிறது.

சசிகலா தன் தரப்பு ஆதரவாளர்களிடம் போனில் பேசும் ஆடியோ வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனா பரவல் முடிவுக்கு வந்தவுடன் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவதுடன் அ.தி.மு.க தலைமையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பரபரப்பு கிளம்பியிருக்கின்றன.

சசிகலா,தினகரன்
சசிகலா,தினகரன்

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாகி வெளியே வந்த பிறகு சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் எனவும் அ.தி.மு.கவில் நிச்சயம் மாற்றங்கள் நிகழும் என அரசியல் ஆர்வலர்களால் பேசப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். அப்போதும், `ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் அதற்காக அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்’ எனவும் கூறினார். பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அப்போது அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சசிகலாவை சந்தித்து ஆசி பெற்ற சம்பவங்களும் நடைபெற்றன.

இதையடுத்து வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க ஆட்சியை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ.ம.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதன் பொதுச் செயலாளரான டி.டி.வி தினகரனும் தோல்வியை தழுவியது அக்கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் சோர்வை தந்தது. அ.தி.மு.கவில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்பதிலும் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே வெளிப்படையாகவே மோதல் எழுந்தது.

சசிகலா - பன்னீர்செல்வம்
சசிகலா - பன்னீர்செல்வம்

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டாலும் இருவருக்குமான பனிப்போர் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தொண்டர்கள் சிலரிடம் நலம் விசாரித்த பிறகு, `சீக்கிரம் வந்துடுவேன் கட்சியை சரி பண்ணிடலாம். தைரியமா இருங்க’ என சசிகலா பேசும் ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை பற்றவைத்துள்ளது. சசிகலா திடீரென தானே நேரடியாக தொண்டர்களிடையே பேச தொடங்கியிருப்பதன் காரணமும், அவருடைய அடுத்த மூவ் என்ன என்பது தெரியாமல் அ.தி.மு.க தலைமை குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

``அந்த ஆடியோ உண்மைதான்; சின்னம்மா வரப்போறாங்க!" - சசிகலாவுடன் பேசியவர் Exclusive பேட்டி

இது குறித்து சசிகலாவுக்கு நெருக்கமான வட்டரத்தில் சிலரிடம் பேசினோம், ``சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் தான் சிறையிலிருந்து வெளியே வந்தார். அதற்காகவே அவருக்கு கொடுக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பிற்கும் ஒத்து கொண்டார். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அ.தி.மு.கவில் தன்னை பொதுசெயலாளராக ஏற்றுகொள்வார்கள் என்ற எண்ணமும் சசிகலாவிடம் இருந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான எதுவும் நடக்கவில்லை. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் வருகையை எதிர்த்தார், விமர்சனம் செய்தார்.

சசிகலா மற்றும் வினோத் சுரேஷ்
சசிகலா மற்றும் வினோத் சுரேஷ்

மற்றொரு பக்கம் தினகரனும் சசிகலாவின் ஆலோசனைகளை கேட்காமல் செயல்பட்டார். இதனால் அப்செட்டான சசிகலா எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவுக்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க போவதாக அறிவித்தார். தேர்தல் முடிவு அ.தி.மு.கவிற்கு மட்டுமல்ல அ.ம.மு.கவுக்கும் பாதகமாகவே அமைந்தது. குறிப்பாக தினகரனை நம்பி களமிறங்கி பொருளாதாரத்தையும் இழந்துவிட்ட பலரையும் இந்த படுதோல்வி பாதிக்க செய்ததுடன், தங்கள் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற பெரும் கவலையும் சூழ்ந்துள்ளது. சசிகலா நம்மை கரை சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் எழுந்தது.

அதே நேரத்தில் அ.தி.மு.க-விலும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற மோதல் நிலவியது. இவற்றை அமைதியாக கவனித்து வந்த சசிகலா இனி பொறுமையாக இருந்து பிரயோஜனம் இல்லை. அ.தி.மு.க என்ற இயக்கம் சண்டைகளால் வீணாவதை என்னால் பார்க்க முடியாது. இனி களத்துல இறங்கிட வேண்டியது தான் என கூறி வந்தார். இதற்காக தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரின் பாரம்பர்யமிக்க குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் நடைபெறும் திருமணத்தை சாதகமாக்கி கொள்ள நினைத்தார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

திருமணம் திருவண்ணாமலையில் ஜூன் 13ம் தேதி எளிமையாக நடைபெற உள்ளது. அதன் வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 23ம் தேதி பூண்டியில் மிக பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அகில இந்திய அளவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட வர்களுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து லாக்டெளன் விதிக்கப்பட்டது. மேலும் மணமகனின் தாத்தா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் சமீபத்தில் காலமானார்.

இதனால் திருமணம் தள்ளிப்போவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும், இரு குடும்பமுமே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். எனவே குறித்த தேதியில் திருமணத்தை நடத்தி விடுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் திருமண நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.கவில் நடக்கும் மோதல்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியை தன்னால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட்டு வருகிறார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இந்தத் தருணத்தை பயன்படுத்தி கொண்டு சசிகலா அ.தி.மு.கவுக்கு வருவதற்கான காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியே அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தொண்டர்களிடம் போனில் பேசியிருக்கிறார். தன்னை அழைக்க வந்தவர்கள், தனக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள், தனக்கு கடிதம் எழுதியவர்கள் என எல்லோரது லிஸ்டும் போன் நம்பர் உள்பட அனைத்தும் சசிகலா கையில் உள்ளது. முதலில் அவர்களுக்கு போன் செய்து பேசி வருகிறார்.

அ.தி.மு.கவில் தகவல் தொழில் நுட்ப பிரிவின் பேராவூரணி தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் வினோத் சுரேஷ், திருவள்ளூர் மாவட்டத்தின் அ.ம.மு.க நிர்வாகி லாரன்ஸ் உள்ளிட்டோரிடம் சசிகலா பேசினார். அந்த ஆடியோவே வைரலாக பரவியது. இன்னும் பலரிடம் பேசியிருக்கிறார். ``கொரோனா பரவிக்கிட்டு இருக்கு எல்லோரும் பத்திரமா இருங்க. எங்களால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட கட்சி வீணாவது கஷ்டமாக இருக்கு விரைவில் வந்துடுவேன் கட்சியை சரி பண்ணிடலாம் தைரியமாக இருங்க” என பேசினார்.

சசிகலா
சசிகலா

இதே போல் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடமும் போன் மூலம் சசிகலா பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அவர்கள் ‘எப்போதும் உங்க பின்னாடி நிற்போம்’ என்ற உத்தரவாதம் தந்ததாகவும், அதனால் சசிகலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. கொரோனா பரவல் முடிவிற்கு வந்ததும் சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை ஆடத் தொடங்கி விடுவார். அதற்கான முன்னோட்டேமாகவே தன் ஆதரவாளர்கள் தரப்பிடம் பேசி அவர்களின் மன ஓட்டத்தை தெரிந்து கொண்டிருக்கிறார்” என தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு