Published:Updated:

பொது, வேளாண் பட்ஜெட்கள்... முதல்வர் ஸ்டாலினின் கண்டிஷன்! - பின்னணித் தகவல்கள்

தமிழ்நாடு சட்டமன்றம்
News
தமிழ்நாடு சட்டமன்றம்

234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஒரு டேப் வழங்கப்படும். அதில் அன்றைய தினத்தின் அலுவல்களும், பட்ஜெட் விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறது. நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். அதேநேரம், வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைத்துறைக்கு என தனி பட்ஜெட்டும் இந்த ஆண்டு முதல் தாக்கலாகிறது. இதை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவிருக்கிறார். இதன் பின்னணி குறித்து சட்டப்பேரவை வட்டாரத்தில் விசாரித்தோம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பொது பட்ஜெட்

``பொது பட்ஜெட்டில், வேளாண்மைத்துறை தவிர மீதமுள்ள அத்தனை துறைகளுக்குமான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது கோவிட்-19 தொற்றுப் பரவல், தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீடிப்பதாலும், மூன்றாம் அலை வரலாம் என நிபுணர்கள் எச்சரிப்பதாலும் பள்ளிகள் எப்படியும் இந்த ஆண்டும் மூடப்பட்டுத்தான் இருக்கப்போகின்றன. அதனால் பள்ளிக்கல்விக்கான நிதியைக் குறைத்துவிட்டு, அதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

’பட்ஜெட் தரமானதாகவும், மக்களுக்குப் பயன்தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்’ என்று அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, பார்த்துப் பார்த்து பட்ஜெட்டை தயார் செய்துவருகிறார்களாம்.

பொது பட்ஜெட் தயாரிப்புக்காக பொருளாதார-நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த பட்ஜெட்டை முன்னெடுக்கும் பணி நடந்துவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழக சட்டப்பேரவை தேர்தல்

வேளாண் பட்ஜெட்:

ஒவ்வோர் ஆண்டும் வேளாண்மைத்துறைக்கு எனத் தனி பட்ஜெட்டை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுவருகிறது பா.ம.க. அந்தக் கட்சியின் கோரிக்கை முதன்முறையாக நிறைவேறும் வகையில், வேளாண்மைத்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதே நாளிலா அல்லது மறுநாளா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

முதல் வேளாண் பட்ஜெட் என்பதால் எந்த வகையிலும் சிறு பிசிறுகூட இருக்கக் கூடாது என்று முதல்வர் கண்டிஷன் போட்டிருக்கிறார். இதற்காக, விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து விவசாயிகளுக்கு அவர்களது பொருளாதாரம் மேம்படும் வகையிலான பட்ஜெட் தயாராகிக்கொண்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காகிதமில்லா பட்ஜெட்?

ஒரு டன் காகிதப் பயன்பாட்டுக்கு 28 மரங்களை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். அதனால், முடிந்த அளவு காகிதப் பயன்பாட்டைக் குறைக்க பரீட்சார்த்த முறையில் வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா பட்ஜெட்டை அமல்படுத்தலாமா என அரசு யோசிக்கிறது. இது குறித்து விவாதிக்க சபாநாயகர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இதைச் செயல்படுத்தலாம் என்கிற முடிவை எடுத்திருக்கிறார்கள். இதன்படி 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஒரு டேப் வழங்கப்படும். அதில் அன்றைய தினத்தின் அலுவல்களும், பட்ஜெட் விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமன்றி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரிலும் டேபிளில் டச் ஸ்கிரீன் திரை ஃபிக்ஸ் செய்யப்படும்.

விவசாயம்
விவசாயம்

நிதியமைச்சர் டேப்பைப் பார்த்துதான் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்க வாசிக்க அது அப்படியே உறுப்பினர்களின் எதிரிலிருக்கும் டச் திரையில் ஓடிக்கொண்டே இருக்கும். ஊடகங்கள் ஒவ்வொருவருக்கும் அவ்வாறு டேப் கொடுக்க இயலாதென்பதால், கலைவாணர் அரங்கில் ஆறு இடங்களில் மிகப்பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன. அதில் நிதியமைச்சர் வாசிக்கும் பட்ஜெட்டின் வரிகள் ஓடிக்கொண்டேயிருக்கும். நிதியமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை மட்டுமே தமிழில் சுமார் 130 மற்றும் ஆங்கிலத்தில் 130 பக்கங்களைக்கொண்டிருக்கும். அதுதவிர, ஒவ்வொரு துறைக்கான பர்ஃபார்மன்ஸ் பட்ஜெட் என்பது சுமார் 3,000 பக்கங்கள் இருக்கும். மொத்தமாக அதை டிஜிட்டலில் கொண்டு வரவிருக்கிறார்கள். நிதியமைச்சர் முழுமையாக வாசித்து முடித்ததும் பட்ஜெட் காப்பி பி.டி.எஃப் முறையில் ஷேர் செய்யப்படும். அதேநேரம் வாசித்து முடித்ததுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முழுமையாக டிஜிட்டலைப் பயன்படுத்த வேண்டுமென்பதுதான் குறிக்கோள். இருந்தபோதிலும் முதல் முயற்சி என்பதால், பட்ஜெட் உரை, காகித வடிவிலும் அச்சடிக்கப்படும். பொது பட்ஜெட் மட்டுமன்றி, வேளாண் பட்ஜெட்டையும் காகிதமில்லாமல் தாக்கல் செய்யலாமா என்றும் ஆலோசனைகள் நடைபெற்றுவருகிறது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஜெயரஞ்சன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஜெயரஞ்சன்

பின்னணியில் யார்?

முதல்வர் என்கிற முறையில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வேலை வாங்கும் இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார். பொது பட்ஜெட்டை பல்வேறு தரப்பினரிடமும் கலந்தாலோசித்து தொகுத்துவருகிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், முழுநேர உறுப்பினர்கள் பேராசிரியர் சீனிவாசன், பகுதி நேர உறுப்பினர்கள் ம.விஜயபாஸ்கர், சுல்தான் அகமது, இஸ்மாயில், மு.தீனபந்து, மன்னார்குடி தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோரும் பட்ஜெட் தயாரிப்புப் பணியில் தங்களது ஆலோசனைகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துறை அதிகாரிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் வேளாண்மைத்துறை பட்ஜெட்டுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.