Published:Updated:

`வழக்கு மேல் வழக்கு... பின்னணியில் ஆளுங்கட்சி?!’ - எஸ்.ஏ.சி கட்சியின் தலைவர் ராஜினாமா பின்னணி

திருச்சி ராஜா
திருச்சி ராஜா

``அடுத்தடுத்த வழக்குகளைப் போட்டால் நிலைகுலைந்துவிடுவார் என்பதற்காக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தமிழக அரசுதான். விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகத் தொடங்க அடித்தளம் இட்டவர் ராஜா.”

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஆரம்பித்த கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாபன் என்கிற ராஜா, அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துகொள்வதாக எஸ்.ஏ.சி-க்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் தமிழக அரசு இருப்பதாகவும், அவர்கள் கொடுக்கும் நெருக்கடியால்தான் ராஜா தலைமறைவாக இருப்பதாகவும் அவரின் வழக்கறிஞர் சொல்கிறார்.

என்ன நடக்கிறது... எதற்காக ராஜா தலைமறைவாக இருக்க வேண்டும் என்று விசாரித்தோம்.

 விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புகள் பல ஆண்டுகளாக நிலவிவருகிறது. அதற்குள் இப்போது விஜய் குறித்த அரசியல் பேச்சு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் விஜய், சில இடங்களிலும் படங்களிலும் அரசியல் பேசியிருக்கிறார். இந்தநிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., `அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, சமீபத்தில் அதை தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்தார்.

இந்தக் கட்சி, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜாவை மாநிலத் தலைவராகக்கொண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், தந்தையின் இந்த அரசியல் நடவடிக்கை பிடிக்காத நடிகர் விஜய் 'தனக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை" என்றும், `அந்தக் கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் எச்சரிக்கை செய்தார்.

ராஜா
ராஜா

அதோடு அந்தக் கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜய்யின் தாயார் ஷோபாவும் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இது, தந்தை மகனுக்கு இடையேயான விரிசலை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தநிலையில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம், விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் ராஜா மீது புகார் அளித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்தல் ஆணையத்தை நாடத் தயாராகும் விஜய்... சட்ட ஆலோசனையில் எஸ்.ஏ.சி!

அதில், நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நிலம் வாங்கித் தருவதில் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர் சட்ட விரோதமாக 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் வாய்மொழிப் புகார் அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து ராஜா தலைமறைவாக இருந்துவருகிறார். அவரை எப்படியாவது கைதுசெய்ய வேண்டும் என்பதில் போலீஸார் தீவிரம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.

விஜய் - மக்கள் இயக்கம்
விஜய் - மக்கள் இயக்கம்

இந்த நிலையில்தான் அவரின் மனைவி, மைத்துனர், மாமனார் எனப் பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள் போலீஸார். இது தொடர்பாக எஸ்.ஏ.சி-க்கு ராஜா அனுப்பியிருக்கும் கடிதத்தில், தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாகக் கட்சியிலிருந்து விலகுவதாகவும், தான் தொடர்ந்து பணியாற்ற இயலாமைக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறாராம்.

என்ன நடக்கிறது? ராஜாவின் வழக்கறிஞர் கிஷோரிடம் பேசினோம். ``கடந்த 2016 முதல் 2017 காலகட்டத்தில் ராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்திருக்கிறார். அதில் `மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 60 மாதம் செலுத்தினால், ஒரு பிளாட் கிடைக்கும்’ என்கிற மந்த்லி ஸ்கீமோடு தொழில் செய்திருக்கிறார்.

வழக்கறிஞர்  கிஷோர்
வழக்கறிஞர் கிஷோர்

அந்தக் காலகட்டத்தில் டி.டி.சி.பி அப்ரூவல் பிரச்னையால் எந்தவித பிளாட்டையும் பட்டா போட்டுக் கொடுக்க முடியாததால், பலருக்குப் பத்திரத்தில் எழுதிக் கொடுத்து முறைப்படி தெளிவாகத் தொழில் செய்திருக்கிறார். அப்போது விஜய் ரசிகர் மன்றத்தில் இவர் நிறைய பேருக்குப் பதவி போட்டுக் கொடுத்திருக்கிறார். இவருடன் இருந்த சுந்தர வடிவேல் என்பவருக்கு ஒரு பிளாட் கொடுத்திருக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்,  ஷோபா, விஜய்
எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, விஜய்

அவர் வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே கட்டியிருக்கிறார். இன்று தன்னை ஏமாற்றிவிட்டதாக, காவல் நிலையில் புகார் அளிக்கிறார். அதே போல் 30 மாதங்கள் மட்டுமே கட்டிய இன்னொருவரையும் புகார்தாராக போலீஸார் வேண்டுமென்றே சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தலைமை கொடுக்கும் நெருக்கடியால் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இவர் மீது புகார் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ராஜா
ராஜா

அடுத்தடுத்த வழக்குகளைப் போட்டால் நிலைகுலைந்துவிடுவார் என்பதற்காக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தமிழக அரசுதான். விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகத் தொடங்க அடித்தளம் இட்டவர் ராஜா. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டால் ஒரு தொகுதியில் குறைந்தது பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வாக்குகள் போய்விடும் என்கிற அச்சத்தில் விஜய் புதிய கட்சி ஆரம்பித்துவிடக் கூடாது என்பதற்காக ராஜாவை முளையிலேயே கிள்ள நினைக்கிறார்கள். நடிகர் விஜய்யும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு