Published:Updated:

`வருத்தம்தான், ஆனாலும் வரவேற்கிறோம்’ ’வரவே மாட்டேன்’ அறிவிப்பும், ரஜினி ரசிகர்களின் ரியாக்‌ஷனும்!

ரஜினி
ரஜினி

சரி, ‘வடக்குப்படி ராமசாமியிடமிருந்து காசு வந்திரும்’ என ஒரு படத்தில் கவுண்டமணி நம்பியதுபோல, நிச்சயம் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியலுக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால்....

" 'அரசியலுக்கு வரமாட்டேன்' என்று சொல்லி, தேர்தல் முடிந்து, தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னரும் எதற்கு ரஜினி மக்கள் மன்றம் என்று ஒன்றை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்ற எண்ணத்தில் இன்று ஜூலை 12-ம் தேதி மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி, ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைக்கப்போவதாக ரஜினி அறிவித்துவிட்டார். இதன்மூலம் ரஜினி மறைமுகமாக தி.மு.க-வுக்கு உதவுகிறார் என்கிறார்கள் உள்விவரமறிந்தவர்கள்.

இதுபற்றி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பேசினோம். “2017 டிசம்பர் 31-ம் தேதி ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று சொல்லி, ரஜினி மக்கள் மன்றத்தைத் தொடங்கினார் ரஜினி. மன்றத் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்கள் ரஜினி ரசிகர்களையெல்லாம் மன்றத்தில் இணைக்காமல் வெளியிலிருந்து ஆட்களை நியமித்தனர். இவையெல்லாமே எனக்குத் தெரிந்துதான் நடப்பதாக குண்டைப்போட்டார் ரஜினி. தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, ‘யாருக்கும் ஆதரவில்லை’ என்றார்.

சரி, ‘வடக்குப்படி ராமசாமியிடமிருந்து காசு வந்திரும்’ என ஒரு படத்தில் கவுண்டமணி நம்பியதுபோல, நிச்சயம் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியலுக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, மீண்டும் ஒருமுறை கண்டிப்பாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி மன்றத்துக்கு அர்ஜூன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகிய இரு புதிய பொறுப்பாளர்களை அடையாளம் காட்டினார் ரஜினி. மறுபடியும் மாற்றி உடல்நிலையைக் காரணம் காட்டி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு குறித்த ரஜினி அறிக்கை
ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு குறித்த ரஜினி அறிக்கை

தி.மு.க-தான் ரஜினி வந்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் பேசி பின்வாங்க வைத்துவிட்டது என்ற பேச்சும் அடிபட்டது. ரஜினியின் இந்த நிலையில்லாத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்ச நஞ்ச பேரல்ல. 30 முதல் 40 ஆண்டுகளாக ரஜினி ரசிகனாக போஸ்டர், கட்-அவுட் அடித்தது, தன்னுடைய காசில் டிக்கெட்டை வாங்கி பிறரைப் பார்க்க வைத்தது, ரசிகர் மன்றப் பெயரிலும், மக்கள் மன்றப் பெயரிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தது என பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.

தேர்தலும் முடிந்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. கொரோனா பணிக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் கொடையளித்து வந்த நிலையில், ரஜினியும் நிதியுதவி அளித்தார். ரஜினி கைவிட்டுச் சென்றதால், பல நிர்வாகிகளும் மன்றத்திலிருந்து விலகி தி.மு.க-வில் இணையத்தொடங்கினர். அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை முடித்து வந்த கையோடு இன்று கூட்டத்தைக் கூட்டினார் ரஜினி. என்னவோ புதிய கருத்துக்களைச் சொல்லப்போவதுபோல அத்தனை பேரும் சென்றோம். வழக்கம்போல இனியும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை, மன்றத்தைக் கலைத்துவிடலாம் என்றார். மன்றத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் நாங்களும் ஒப்புக்கொண்டோம்.

ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக தூத்துக்குடி ஸ்டாலின், முன்னாள் நிர்வாகி விழுப்புரம் ரஜினி இப்ராஹிம் உள்ளிட்டோர் தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டனர். அடுத்ததாக தஞ்சாவூர் கணேசன் உள்ளிட்ட பலர் தி.மு.க-வில் சேரவிருக்கிறார்கள். இப்படியாக மன்றத்தைக் கலைத்துவிட்டால் ஒட்டுமொத்தமாக எல்லோரும் தி.மு.க-வில் இணைந்துவிடுவார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. முன்னரே வேறு கட்சிக்குப் போய்விடலாம் என்று முடிவெடுத்துப் போனவர்கள், இன்றைக்கு எங்களை அழைத்துப் பரிகாசிப்பதைத்தான் தாங்க முடியவில்லை” என்றனர்.

கோவை சௌந்தர்
கோவை சௌந்தர்

ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட, அதன் முன்னாள் நிர்வாகி கோவை சௌந்தரிடம் பேசினோம். ”இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தி.மு.க-வுக்குச் செல்லும் மாவட்டச் செயலாளர்களை வைத்து கூட்டம் நடத்தியதே முதலில் தவறு. இதில் இதே நிர்வாகிகள் மன்றத்திலும் தொடர்வார்களாம். இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தியதன் காரணம் என்னவென்றால், ‘நான் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் என் பின்னால் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள்’ என்று சொல்லி ’அண்ணாத்த’ படத்தை வியாபாரம் நடத்தத்தான் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது” என்று முடித்தார்.

மா.செ ஏ.வி.கே.ராஜா
மா.செ ஏ.வி.கே.ராஜா

ரஜினியின் மன்றக் கலைப்பு குறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ஏ.வி.கே.ராஜாவிடம் கேட்டோம். “வருத்தமாகத்தான் உள்ளது என்றாலும், எதிர்பார்க்கப்பட்டதுதான். என்னதான் தேர்தல் முடிந்தாலும், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிடலாமா என சிலர் கேட்பார்கள். மீண்டும் மீண்டும் அவரின் அரசியல் நிலைபபட்டைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படியொரு நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் மன்றத்தைக் கலைக்கும் முடிவை அறிவித்தார் தலைவர். இதன்படி, ரஜினி மக்கள் நிர்வாகிகள் அப்படியே ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளாக மாறுவார்கள். பொறுப்புகள் அப்படியே தொடரும். அதுவும் பேரண்ட் பாடி மட்டுமே பொறுப்புகளில் மாற்றமின்றி செயல்படும். மற்றபடி, ரஜினி மக்கள் மன்றத்தின் துணை அமைப்புகளான வழக்கறிஞர் அணி, மாணவரணி, மகளிரணி, இளைஞரணி போன்றவைகள் முழுமையாக கலைக்கப்பட்டு, அதில் பொறுப்பில் உள்ளவர்கள் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இணைக்கப்படுவார்கள். ரஜினியின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். எப்போதும்போல நற்பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்” என்றார்.

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!
அடுத்த கட்டுரைக்கு