Published:Updated:

`ஆடு உறவு... குட்டி பகை?’ -மாநில அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையின் பின்னணி என்ன?

மாநில அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை
மாநில அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் இருவருமே அதிமுக அமைச்சர்களாக இருந்தபோது செய்த காரியங்களுக்கு திமுக அமைச்சர்களாக இருக்கும்போது அனுபவிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாநில அரசுகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் போடும் வழக்குகள் ஆட்சி மாறினால் நீர்த்துப்போய்விடும். அது போன்ற வழக்குகளைக்கூட அமலாக்கத்துறை கையிலெடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் வழக்கு பதிவு செய்யும் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்குகள்.

செந்தில் பாலாஜி மீது, வேலை வாங்கித்தருவதாக ஒன்றரைக் கோடி ரூபாய் ஏமாற்றியதாக வழக்கு பதிவானது. 81 பேரிடமும் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் சொன்னதைக் கேட்டு, நீதிமன்றமும் வழக்கை முடித்துவைத்துவிட்டது. ஆனால், அமலாக்கத்துறை இதை விடவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் நடந்த ஐ.டி ரெய்டிலும் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் சிக்க, சுமார் 5 கோடி ரூபாய் பணம் கைமாறியதாக சட்டவிரோத பணப்பறிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இது குறித்து ஆகஸ்ட் 22-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கவர் ஸ்டோரி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி தி.மு.க-வுக்குள் பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. செந்தில் பாலாஜியின் பதவி தப்புமா என்ற விவாதமும் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், இன்னொரு தமிழக அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் என மொத்தம் ஏழு பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ஆகஸ்ட் 26 -ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை ஏழு நாள்கள் தனித்தனியாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் அளவுக்கு அவர் சொத்து சேர்த்திருந்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

இது குறித்து நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ``யார் மீது, எந்த வழக்காக இருந்தாலும் அது குறித்த ஆவணங்களை நாங்கள் சேகரித்து வைத்துக்கொள்வோம். அவற்றை மொத்தமாகத் தொகுத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பும்போது அதை ஒரு காப்பி எடுத்து மத்திய அரசின் சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு அனுப்பிவிடுவோம். அதனால்தான் அரசியல் மாற்றத்தால், ஆட்சி மாற்றத்தால் ஒருவர் மீதான வழக்கை மாநில அரசு ரத்து செய்தாலும், மத்திய அரசின் சி.பி.ஐ., அமலாக்கத்துறை கையிலெடுத்து விசாரிக்க முடிகிறது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, எடப்பாடி மீது முன்பு தி.மு.க கொடுத்த புகார்கள் என அத்தனை பேருடைய ஃபைலும் ஒரு காப்பி டெல்லிக்குச் சென்றுவிடும். இன்றில்லை என்றாலும், ஒருநாள் அது கழுத்தை நெரிக்கும். அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அப்படித்தான் 2006-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை இப்போது அமலாக்கத்துறை கையில் எடுத்திருக்கிறது” என்றனர்.

எடப்பாடி -பன்னீர்- மோடி
எடப்பாடி -பன்னீர்- மோடி

`தி.மு.க அமைச்சர்களை டார்கெட் செய்கிறதா பா.ஜ.க அரசு?’ என அக்கட்சியின் சீனியர் ஒருவரிடம் பேசியபோது, ``சில விஷயங்களில் தி.மு.க பேச்சைக் கேட்டு செயல்படுகிறது, சில விஷயங்களில் அப்படியே எதிர்மறையாக செயல்படுகிறது. ராஜ்யசபா தேர்தலைத் தனித்தனியாக நடத்திட வேண்டும் என தி.மு.க வைத்த கோரிக்கையை பா.ஜ.க அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவுதான் தேர்தல் ஆணையம் ஒரு சீட்டுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது. எப்படி கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்த ஃபைலை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்தோமோ, அதுபோல அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க சென்று அமைச்சராகி, அ.தி.மு.க-வுக்கே எதிராகச் செயல்படும் அமைச்சர்கள் பற்றி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் டெல்லியில் ஃபைல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் பழமொழி வாயிலாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆடு உறவு, குட்டி பகை போன்றதுதான் இந்தச் செயல். ஆம், தலைவர் ஸ்டாலினுடன் நல்ல தொடர்பை வைத்துக்கொள்ள விரும்பும் டெல்லி பா.ஜ.க., அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் கெடுபிடியாக நடந்துகொள்கிறது” என்றனர்.

ராஜ்யசபா: தங்க.தமிழ்ச்செல்வன்... கார்த்திகேய சிவசேனாதிபதி... அப்துல்லா! -திமுக-வில் முந்துவது யார்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு