Published:Updated:

சசிகலா என்ட்ரி; எடப்பாடி அவுட்! - அப்போலோ மருத்துவமனை விறுவிறு காட்சிகள்

சசிகலா
சசிகலா

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவும் அடுத்தடுத்து வந்ததால் பரபரப்பில் இருக்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

ஒரு மாதத்துக்கு முன்பாகத்தான் அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்தார். அதிலிருந்தே அவரது உடல்நிலை வயது முதிர்வு காரணமாக மோசமாகிவந்தது. இந்தச் சூழலில், இரண்டு நாள்களுக்கு முன்னதாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால், வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர் உடல்நலன் குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் நலம் விசாரித்த நிலையில், இன்று (ஜூலை 20-ம் தேதி) கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிக்க அப்போலோ வருவதாகத் தகவல் வெளியானது. அதற்காக, சென்னையிலுள்ள ஆறு மாவட்டச் செயலாளர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு காலையிலேயே வந்துவிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக, எடப்பாடி வரும் அதேநேரத்தில் சசிகலாவும் அப்போலோவுக்குக் கிளம்பியதால், பரபரப்பானது அ.தி.மு.க வட்டாரம்.

மருத்துவமனைக்கு வந்த எடப்பாடி
மருத்துவமனைக்கு வந்த எடப்பாடி

அப்போலோ மருத்துவமனையின் விறுவிறு காட்சிகள் குறித்து மருத்துவமனை வட்டாரங்கள், எடப்பாடி, சசிகலா ஆதரவாளர்கள் எனப் பலரிடமும் பேசினோம். ``இன்று, ஜூலை 20-ம் தேதி காலை 8 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமி, மதியம் 12 மணியளவில் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வருவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் என்பதால், மருத்துவமனை வட்டாரத்தில் பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் வந்தனர். கட்சிக்காரர்களும் கணிசமாக வந்திருந்தனர். இந்தத் தகவல் கிடைத்தவுடன் சசிகலா தன் அரசியல் மூவ்வை ஆரம்பித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வரும் அதேநேரத்தில் தானும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றால், பெரிய சலசலப்பு உருவாகும் எனக் கணக்கிட்ட சசிகலா, தன் வாகனத்தில் அ.தி.மு.க கொடியைக் கட்டச் சொன்னார். எடப்பாடியின் வாகனம் தேனாம்பேட்டைக்குள் என்ட்ரி ஆன தகவல் கிடைத்தவுடன், தி.நகரிலிலுள்ள தன் வீட்டிலிருந்து கிளம்பினார் சசிகலா.

அதிமுக: மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிப்பு! - அப்போலோவில் ஒரே நேரத்தில் சசிகலா, இ.பி.எஸ்

அவர் மருத்துவமனைக்குக் வருவதாகத் தகவல் எட்டியவுடன் எடப்பாடி தரப்பில் பதற்றம் தொற்றிக்கொண்டது. எடப்பாடியுடன் நின்றிருந்த மாவட்டச் செயலாளர்கள் அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து கிளம்பினர். மருத்துவர்களிடம் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்த எடப்பாடியும், அதற்கு மேல் அங்கேயிருக்க விரும்பவில்லை. மருத்துவமனைக்கு வந்த பத்து நிமிடங்களில் அவரும் கிளம்பினார். எடப்பாடியின் கார் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கும், அ.தி.மு.க கொடியுடன் சசிகலாவின் கார் என்ட்ரி ஆவதற்கும் சரியாக இருந்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு, இப்போதுதான் முதன்முறையாக அப்போலோவுக்கு வருகிறார் சசி.

அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீத்தி ரெட்டி வாசல் வரை வந்து சசிகலாவை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். 24 மணி நேர தீவிர சிகிச்சைப் பிரிவில் மதுசூதனன் அட்மிட் செய்யப்பட்டிருப்பதால், அவரை வெளியாட்கள் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. வரவேற்பறையில் இருந்தபடியே மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த சசிகலா, அங்கேயிருந்த மதுசூதனனின் உறவினர்கள் சிலரிடம், ‘சரி பார்த்துக்கங்க. வேற ஏதாவது உதவி தேவைப்பட்டுச்சுன்னா என்னைத் தொடர்பு கொள்ளுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். மருத்துவமனையில் சசிகலா இருந்தது 20 நிமிடங்கள்தான் என்றாலும், அதற்குள் பரபரப்பு பற்றிக்கொண்டது” என்றனர்.

அ.தி.மு.க கொடி கட்டிய காரில் சசிகலா
அ.தி.மு.க கொடி கட்டிய காரில் சசிகலா

சசிகலா வரும் தகவல் தெரிந்தவுடன் மருத்துவமனையிலிருந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் மின்னல் வேகத்தில் தெறித்துப் பறந்ததுதான் வேடிக்கை. ``சசிகலாவைத்தான் நீங்கள் தீவிரமாக எதிர்க்கிறீர்களே, பிறகு அவரைப் பார்க்கத் தயங்கி ஏன் ஓட வேண்டும்?” என்று அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றிருந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம்.

`பஞ்சாயத்தைக் கலைத்த எடப்பாடி முதல் முன்னுதாரணமான ஸ்டாலின் வரை!' கழுகார் அப்டேட்ஸ்

``நாங்கள் யாரும் பயந்து ஓடவில்லை. அந்தம்மா தனக்கு ஒரு விளம்பரத்தைத் தேடிக்கொள்ளத்தான் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். மருத்துவமனையில் மதுசூதனன் அட்மிட் செய்யப்பட்டு இரண்டு நாள்கள் ஆகின்ரன. இந்த இரண்டு நாள்களில் இல்லாத பாசம், திடீரென எடப்பாடி வரும் அதேநேரத்தில் எங்கேயிருந்து வந்தது? எடப்பாடி வரும்போது தானும் வந்தால், அதன் மூலமாகத் தனக்கு ஓர் அரசியல் விளம்பரம் கிடைக்குமென சசிகலா எதிர்பார்த்து இதைச் செய்திருக்கிறார். இந்த நாடகத்தில் நாங்கள் ஏன் பங்கேற்க வேண்டுமென மருத்துவமனையிலிருந்து நாங்கள் கிளம்பிவிட்டோம்” என்றார்.

மதுசூதனன்
மதுசூதனன்

சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரின் தளகர்த்தகர்களில் ஒருவராக இருந்தவர் மதுசூதனன். சசிகலாவை வெளியேற்றிவிட்டு, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபோது, தேர்தல் ஆணையம் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சிப் பெயரையும் தந்தது. இன்றுவரை கட்சிக்கு அவைத்தலைவர் மதுசூதனன்தான். இப்படிப்பட்ட சூழலில்தான், அவர் உடல்நலன் குறித்து நேரில் விசாரித்திருக்கிறார் சசிகலா. அ.தி.மு.க கொடியை அவர் பயன்படுத்தக் கூடாது என்று டி.ஜி.பி-யிடம் அ.தி.மு.க தலைவர்கள் புகாரளித்திருந்த நிலையில், அந்தக் கொடி கட்டிய காரில் வந்து சென்றிருக்கிறார் சசி. தன்னுடைய அரசியல் மூவ் மூலமாக வெடியைக் கிள்ளி எறிந்திருக்கிறார் சசிகலா. இதற்கான எதிர்வினைகள் விரைவில் அ.தி.மு.க கூடாரத்தில் வெடிக்கும் என்றே தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு